Home One Line P2 தைப்பூசத் திருநாளை முன்னிட்டு வைகறை ஸ்டூடியோஸ் வழங்கும் “தைப்பூச நாயகன்”

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு வைகறை ஸ்டூடியோஸ் வழங்கும் “தைப்பூச நாயகன்”

1246
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் 28 ஜனவரி 2021ஆம் நாள் கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு வைகறை ஸ்டூடியோஸ் ஆதரவில் அருள் நுண்கலைப் பள்ளி மாணவர்கள் படைக்கும் நேரலை இசை நிகழ்ச்சி, வைகறை ஸ்டூடியோஸ் யூடியூப் தளத்தின் வழி ஒளிபரப்பப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், இசைமுரசு இளவரசு அவர்கள் இசையமைத்து வெளிவந்துள்ள முருகன் பாடல்களைத் தொகுத்து, அருள் நுண்கலைப் பள்ளி மாணவர்கள் பாடவுள்ளனர். மாணவர்கள் பாடவுள்ள பாடல்கள் அனைத்தும், முழுக்க முழுக்க மலேசியத் தயாரிப்பில் உருவான முருகன் பக்திப் பாடல்களாகும். மலேசிய தமிழ் இசைத் துறை வரலாற்றில் இதுபோன்ற நிகழ்ச்சி   நடப்பது இதுவே முதல் முறை என்பது பெருமைக்குரிய ஒன்று.

பக்தி உணர்வை வெளிப்படுத்தும் பாடல்களை அருள் நுண்கலைப் பள்ளி மாணவர்களான செல்வி கிருபாஷினி விஜயகுமார், செல்வி அத்திஸ்வரி ஆசைத்தம்பி , செல்வன் அருள்வாணன் மனோகரன், செல்வன் சாய் சச்சின் கணேஷ், செல்வி கிருத்யா தினகரன், செல்வி நிராஞ்சனி சுப்பிரமணியம், செல்வி லினேயா தினகரன், செல்வி இன்பமலர் கண்ணதாசன் ஆகியோருடன் வைகறை ஸ்டூடியோஸ் வெளியீடான ‘ஒரு வார்த்தை பேசு பெண்ணே’ என்ற பாடலின் வழி சுமார் முப்பத்தெட்டாயிரம் பார்வையாளர்களைக் கவர்ந்த செல்வன் அருள்வேந்தன் மனோகரன் அவர்களும் இந்த இசை நிகழ்ச்சியில் பாடி மகிழ்விக்கவுள்ளனர். இவர்களின் இசை ஆசிரியரும் அருள் நுண்கலைப் பள்ளியின் முதல்வருமான திருமதி அல்லிமலர் மனோகரன் அவர்கள், அனைத்து மாணவர்களுக்கும் குரல் பயிற்சி வழங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

பாடல்களின் பின்புலத்துடன் தைப்பூசத் திருநாளைப் பற்றியும் முருகப் பெருமானின் சிறப்புகளைப் பற்றியும் விளக்கத்துடன் நிகழ்ச்சியின் நெறியாளராக ஆசிரியை வாணிஸ்ரீ அவர்கள் நிகழ்ச்சியை வழி நடத்தவுள்ளார். வாணிஸ்ரீ அவர்கள் எழுதிய எஸ்.பி.பாலா அவர்களுக்கான அஞ்சலிப் பாடல், வைகறை ஸ்டூடியோஸ் யூடியுப்பில் வெளியிடப்பட்டது. நாட்டின் முன்னணி பாடகர்களுடன் இளைய தலைமுறையினர் சுமார் 12 பாடகர்கள் இப்பாடலைப் பாடியிருந்தனர். அப்பாடல் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

கோவிட் 19 தொற்றின் காரணமாக, தைப்பூசத் திருநாள் அன்று ஆலயங்களுக்குச் சென்று, முருகனை வழிபட இயலாத சூழ்நிலையில் இசையால் மனம் உருகி வீட்டில் இருந்தபடியே பக்தியில் திளைக்க இந்த இசை நிகழ்ச்சி உங்களுக்குப் பெரிதும் துணையாக இருக்கும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசை வகுப்புகள் நடத்தி வரும் அருள் நுண்கலைப் பள்ளி, இளையோரை அத்துறையில் ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தி வருகிறது. வாய்ப்பாட்டு(சங்கீதம்), வயலின், கீபோர்ட், வீணை, மிருதங்கம், தபேலா, பரதம், புல்லாங்குழல் போன்ற இசை வகுப்புகளை அதன் இசைப் பள்ளியில் நடத்தி வருகிறது. “தமிழிசை உயிர் அசை” எனும் தாரக மந்திரத்தோடு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. அப்படி உருவாக்கப்பெற்ற மாணவர்கள்தாம் தைப்பூச நாயகன் நிகழ்ச்சியில் நமக்கு நேரலையாக இசைப் படைப்பினைச் செய்யவிருக்கிறார்கள். இதில் பங்கேற்கும் பல மாணவர்களுக்கு, இதுவே முதல் வாய்ப்பாகும்.

அதே வேளையில், புதுப்புதுப் படைப்புகளின் வழி மலேசியக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து இளைய தலைமுறையினரை அத்துறையில் ஊக்கப்படுத்தி அவர்களின் திறன்களை வெளிக்கொணர்ந்து அறிமுகம் செய்து வருகிறது வைகறை ஸ்டூடியோஸ். இன்னும் பல புதிய படைப்புகளும் வெளிவரவுள்ளன. அப்படைப்புகளையெல்லாம் அதன் யூடியுப் தளத்தில் (சேனலில்) கண்டு மகிழலாம்.

இவ்விரு நிறுவனங்களும் இணைந்து படைக்கும் தைப்பூச நாயகன் எனும் நேரலை இசை நிகழ்ச்சி ஒரு தரமான படைப்பாக அமையும் என்பதை கலா இரசிகர்கள் எதிர்பார்க்கலாம். சுமார் 1 மணிநேரம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மொத்தம் 11 பாடல்களை மாணவர்கள் பாடவுள்ளனர்.

எனவே நேயர்கள் அனைவரும் 28.01.2021 ஆம் நாள் இரவு 7.00 மணிக்கு http://youtube.com/c/vaigaraistudios எனும் யூடியுப் முகவரியில் நேரலையில் கண்டு மகிழலாம்.