மாஸ்டர் திரைப்படம் கடந்த 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் தற்போது 300 கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் இன்று முதல் அமேசான் பிரைமில் வெளிவந்துவிட்டது.
பொதுவாக மாஸ்டர் போன்ற தமிழ்த் திரைப்படங்கள் ஒருமாதம் கழித்துத்தான் கட்டண வலைத்திரைத் தளங்களில் வரும் என்று முன்பு கூறப்பட்டது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் கூடுதலாக பணம் கொடுத்ததால் முன்கூட்டியே திரைப்படத்தை வெளியிட திரைப்படக் குழு அனுமதித்துவிட்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்னொரு புறத்தில் மாஸ்டர் படத் தயாரிப்பாளருக்கும் திரைப்பட அரங்கு உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வசூல் பகிர்தல் தொடர்பான விவகாரத்தினால்தான் படத்தின் தயாரிப்பாளர்கள் இரண்டு வாரங்களிலேயே படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இனிமேல் குறைந்த செலவினத்தில் தயாரிக்கப்படும் தமிழ்ப் படங்கள் 30 நாட்களுக்குப் பின்னரும், முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் 50 நாட்கள் கழித்தும்தான் ஓடிடி போன்ற கட்டண வலைத்திரைகளில் வெளியிடப்பட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.