Home One Line P1 “மலேசியர்களாக ஒன்றிணைந்து கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

“மலேசியர்களாக ஒன்றிணைந்து கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

652
0
SHARE
Ad

சீனப் புத்தாண்டை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

பிறக்கும் சீனப்புத்தாண்டுப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து சீன இன சமூகத்தினருக்கும் மஇகாவின் சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

நமது இந்திய சமூகமும், சீன சமூகமும் பல நூற்றாண்டுகால பாரம்பரியத்தையும் பிணைப்பையும் கொண்டவர்கள். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட கலாச்சார, வாணிபத் தொடர்புகளைப் போன்றே நமது மலேசிய இந்திய சமூகமும், சீன சமூகமும் நீண்ட கால நல்லுறவுகளைக் கொண்டிருக்கின்றன.

நமது நாட்டிற்கு சுதந்திரம் பெறுவதற்காக, சீன சமூகத்தைப் பிரதிநிதித்த மசீச கட்சியுடன் மஇகாவும் கைகோர்த்தது. அந்த இணைப்பும் பிணைப்பும் இன்று வரை தொடர்கிறது. 14-வது பொதுத் தேர்தலில் பல கட்சிகள் தேசிய முன்னணியிலிருந்து விலகி ஓடியபோதும், நிலை தடுமாறாமல் உறுதியுடன் மஇகாவும், மசீசவும்தான் அம்னோவுடன் தோள்கொடுத்து நின்றன.

#TamilSchoolmychoice

எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலிலும் நமக்கும் மசீசவுக்கும், சீன சமூகத்திற்கும் இடையிலான பிணைப்பு, மேலும் இணக்கத்துடனும் இறுக்கத்துடனும் தொடரும் என்பதும் உறுதி.

பல தொகுதிகளில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மசீச, கடந்த காலங்களில் தேசிய முன்னணியில் பங்கு வகித்த கெராக்கான் போன்ற கட்சிகளின் சீன வேட்பாளர்கள் மஇகாவின் ஆதரவோடும், இந்திய வாக்காளர்களின் ஆதரவோடும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

அதே போன்று மஇகா வேட்பாளர்கள் பல நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு மசீச போன்ற கட்சிகளின் ஆதரவும் சீன வாக்காளர்களின் ஆதரவும்தான் காரணம்.

நம்முடன் இத்தகைய அரசியல் பிணைப்பு மட்டுமின்றி பொருளாதாரப் பிணைப்பும் கொண்டவர்கள் சீன சமூகத்தினர். இந்திய சமூகத்தினர் பெருமளவில் வேலைவாய்ப்புகளைக் கொண்டிருப்பது சீன சமூகத்தினரின் தொழில்களிலும் வணிகங்களிலும்தான்.

நமது நாட்டின் மேம்பாட்டிலும், பொருளாதார வளர்ச்சியிலும் சீன சமூகத்தினரின் அளப்பரிய பங்களிப்பையும், உழைப்பையும் நாம் பெருமையுடன் நினைவு கூர வேண்டும்.

உலகின் எல்லா முக்கிய இன, மத மக்களின் பெருநாட்களையும், திருவிழாக்களையும் தேசிய விழாக்களாக, அரசாங்கமே முக்கியத்துவம் கொடுத்து, விடுமுறையோடு கொண்டாடி மகிழ்வது மலேசியாவில் மட்டும்தான் காண முடியும்.

திறந்த இல்ல உபசரிப்புகள் என்ற கலாச்சாரத்தின் மூலம் எல்லா இனத்தவர்களும் மற்றவர்களின் இல்லங்களுக்கு சென்ற விருந்துண்டு மகிழ்வதும், நட்பையும், சகோதரத்துவத்தையும் பரிமாறிக் கொள்வதும் நமது மலேசிய மண்ணுக்கே உரிய பண்பாட்டுப் பாரம்பரியம்.

இந்த முறை கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடுகளால் சீனப் புத்தாண்டு, நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு, திறந்த இல்ல உபசரிப்புகள் இல்லாமல் கொண்டாடப்படுகிறது.

நமது சீன சகோதரர்களை, நண்பர்களை நேரடியாக சந்தித்து வாழ்த்து சொல்ல முடியாவிட்டாலும் மனதால் அன்பைப் பரிமாறிக் கொள்வோம். கைப்பேசிகளின் வழியும், சமூக ஊடகங்களின் மூலமும் நல்வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வோம்.

சீன சமூகத்துடனான நமது நீண்ட கால, பாரம்பரிய நல்லுறவைத் தொடர்ந்து பேணி வருவோம்.

சீன சமூகத்தினர் தங்களின் குடும்பத்தினரோடு சீனப்புத்தாண்டைக் கொண்டாடி மகிழ எனது இனிய சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.