Home One Line P1 “வெளியே செல்வதைத் தவிர்ப்போம்! வீடே சொர்க்கம் என வாழ்வோம்” சரவணன் சீனப் புத்தாண்டு வாழ்த்து

“வெளியே செல்வதைத் தவிர்ப்போம்! வீடே சொர்க்கம் என வாழ்வோம்” சரவணன் சீனப் புத்தாண்டு வாழ்த்து

402
0
SHARE
Ad

மனிதவள  அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சீனப்புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பசு அல்லது காளையைக் குறிக்கின்ற ஆண்டாக அமைகின்ற இந்த ஆண்டில் செழிப்பும், செல்வமும் குவிய வாழ்த்துகள்.

மலேசியர்கள் உலகிலேயே “யூனிக்” என்று சொல்லப்படும் வித்தியாசமான அனுபவங்களைக் கொண்டவர்கள். உணவிலும் சரி, விழாக் காலங்களிலும் சரி நாம் மட்டுமே பல்வேறு உணவு வகைகளையும், பெருநாள்களையும் தெரிந்து வைத்துள்ளோம்.

இந்த விழாக்காலங்களில் நாம் பல்வேறு விழாக்களை அறிந்து வைத்திருப்பதோடு, அதனைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

#TamilSchoolmychoice

சீனர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சீனர்களுக்கு மட்டும் என்றில்லாமல் அனைத்து மலேசியர்களுக்கும் விடுமுறை. இப்படி அனைத்து முக்கிய விழாக்களுக்குமே பொது விடுமுறை என்பதால், நாம் இதுநாள்வரை நமது அண்டை அயலார், நண்பர்கள் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் கலாச்சாரத்தைக் கண்டறிந்து, அவர்களின் உணவு வகைகளை ரசித்து, ருசித்து வந்துள்ளோம்.

குறிப்பாக அன்றைய தினத்தில் சீனர்களின் பாரம்பரிய உடையான “Cheong Sam” அணிவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் சீனப்புத்தாண்டு காலத்தில் Mandarin Orange உண்ணாத மலேசியர்கள் இல்லை என்று தைரியமாகச் சொல்லலாம். இப்படி பலவேறு கலாச்சாரத்தை நாம் கொண்டாடி மகிழ்ந்துள்ளோம்.

ஆனால் இந்த வருடம் அப்படியல்ல.. கொரோனாவின் சீற்றம் காரணமாக நாம் நடமாட்டக் கட்டுப்பாட்டில் இருக்கின்றோம். அதனால் சீன நண்பர்களின் இல்லம் சென்று வாழ்த்து சொல்ல இயலாது. இருப்பினும் நாம் பொது விடுமுறையில் இருப்பதால் அந்த தருணத்தைக் கொண்டாடுவோம். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருப்போம். குழந்தைகளோடு அதிக நேரத்தைச் செலவிட்டு அவர்களின் தேவைகளை அருகில் இருந்து கவனிப்போம். முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்த்து, “என் வீடே என் சொர்க்கம்” என்ற எண்ணத்தில் வாழ்வோம்.

அன்று துள்ளித் திரிந்த காலம்

இன்று உள்ளே அடங்கும் காலம்

வெளியே திரிந்தால் வைரஸ் தாக்கும்

நான்கு சுவர்கள் உன்னைக் காக்கும்

மாற்றம் ஒன்றே மாறாதது. கடந்த ஒரு வருட காலமாக ஒவ்வொரு விழாக்களுமே இப்படித்தான் கொண்டாடி வருகிறோம். எனவே இந்த நிலை மாற நம்மால் இயன்றவரை கூடல் இடைவெளிவிட்டு, முக்கவசம் அணிந்து, ஒன்றுகூடலைத் தவிர்த்து கொரோனாவை ஒழிப்பதில் நமது கடமையைச் செய்வோம்.

மேலும் இந்த சர்வதேச பரவல் காரணமாக பலரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகி இருக்கின்றனர். அவர்களைக் கருத்தில் கொண்டு, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம்.

மனிதவள அமைச்சின் கீழ் உள்ள  மை வேலைக்கான அகப்பக்கத்தில் பதிந்து பயன்பெறுங்கள். மற்றும் பெஞ்சானா, பெர்மாய் திட்டங்களை அறிந்து உங்களுக்கான பயன்களைக் கேட்டுப்பெறுங்கள். ஒற்றுமையாக, முழு மூச்சாக இந்த கொரொனாவைத் துடைத்தொழித்து உடல் நலத்திலும், பொருளாதாரத்திலும் இருந்து மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்.

இனிய சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்

உங்கள் நலன்பேணும் உங்களில் ஒருவன்
டத்தோஸ்ரீ எம்.சரவணன்