புத்ரா ஜெயா : கடுமையான கொவிட்-19 நிபந்தனைகள் அமுலில் இருக்கும் காலகட்டத்திலும், அருகருகே வாழும் சீனக் குடும்பங்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் குடும்ப விருந்து ஒன்றுகூடல்களுக்கு பல தளர்வுகளை அரசாங்கம் வழங்கியுள்ளது என பிரதமர் மொகிதின் யாசின் தனது சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொவிட்-19 பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடிக் கடந்து வருவோம் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மலேசியர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
சீனப் புத்தாண்டைக் கொண்டாடி மகிழும் அதே வேளையில் அடிக்கடி கைகளைக் கழுவுவது, முகக் கவசம் அணிவது போன்ற நடமாட்டக் கட்டுப்பாட்டு நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டுமெனவும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
மாநிலங்களுக்கு எதிரான பயணத் தடைகளை விதித்ததற்கானக் காரணம் மக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காக அல்ல, மாறாக அவர்களின் உயிர்களைப் பாதுகாக்கத்தான் எனவும் மொகிதின் யாசின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட காணொலி வழியான சீனப்புத்தாண்டு வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.
பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் வளப்பத்தையும் கொண்டுவரும் எனவும் மொகிதின் தனது செய்தியில் நம்பிக்கை தெரிவித்தார்.