கோலாலம்பூர் : மலேசியாவின் பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் (E&M) துறைகளின் 23 பிப்ரவரி 2021 தேதியிட்ட அறிக்கையின்படி, ஆண்டுதோறும் உள்ளூர் உள்ளடக்கத் துறையில் 3 பில்லியன் ரிங்கிட் பண இழப்பை உள்ளடக்கத் திருட்டு ஏற்படுத்துகிறது என்ற தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
மலேசிய மின்னியல் திருட்டுக்கு (digital piracy) எதிரானச் சமீபத்திய நடவடிக்கையை மேற்கொண்ட அதிகாரிகளை மலேசிய உள்ளூர் உள்ளடக்கத் துறையின் முன்னணியினர் பாராட்டுகிறார்கள்.
மின்னியல் திருட்டுச் செயல்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் தற்போதைய அபராதம், உள்ளடக்க வழங்குநர்கள் சந்திக்கும் பெரும் பொருளாதார இழப்புகளுடன் பொருந்தாது என்று தொழில்த்துறை முன்னணியினர்கள் கருதுகின்றனர்.
ஆண்டுதோறும் பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் துறைக்கு மின்னியல் திருட்டு ஏற்படுத்தும் இழப்பு ஏறத்தாழ 3 பில்லியன் ஆகும். 500 மில்லியன் வரி இழப்பையும் அது ஏற்படுத்துகிறது. மேலும் ஆயிரக்கணக்கான வேலைகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது.
பிப்ரவரி 8, 2021 அன்று, பதிப்புரிமைச் சட்டம் 1987-இன் பிரிவு 41 (1) (ஹெக்டேர்)-இன் கீழ் துணைப்பிரிவு 36A (3)-இல் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போல் தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக எந்தவொரு தொழில்நுட்பத்தையும் சாதனத்தையும் விற்பனை செய்ததற்காக ஷா ஆலாமிலுள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மீது முதல் முறையாக வழக்குத் தொடுக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட இயக்குநர், மார்ச் 1-இல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார். இந்த வழக்கு உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் அமைச்சின் (The Ministry of Domestic Trade and Consumer Affairs, MDTCA) துணை அரசு தரப்பு வழக்கறிஞரால் தொடுக்கப்பட்டது.
ஆஸ்ட்ரோவின் உள்ளடக்கத்தை இணையம் வழியாக சட்டவிரோதமாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீமிங்) செய்ய அனுமதிக்கும் 6 தொலைக்காட்சி ஊடகப் பெட்டிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 46 வயதான ஒரு பெண் பிப்ரவரி 16 அன்று, அக்குற்றத்தை ஒப்புக்கொண்டார். தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998-இன் பிரிவு 232 (2)-இன் (Section 232(2) of the Communications and Multimedia Act 1998) கீழ் குற்றம் சாட்டப்பட்ட அவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விதியின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட முதல் சட்டவிரோத ஸ்ட்ரீமிங் சாதனம் (ஐ.எஸ்.டி) விற்பனையாளர் அவராவார்.
புகழ்பெற்ற தயாரிப்பாளரும் மற்றும் இயக்குநருமான டத்தோ யூசோப் ஹஸ்லாம் கூறுகையில், ”சம்பந்தப்பட்டவர்களிடம் தீர்க்காவிட்டால், மின்னியல் திருட்டை ஒழிக்க முடியாது. இத்திருட்டுப் புதியதல்ல. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக இப்பிரச்சனைக்குத் தீர்வுக் காண வேண்டும். பிரச்சினைக்கு உண்மையானத் தீர்வு இல்லாமல் வெற்று சொல்லாட்சியைக் காண வருத்தப்படுகிறேன். கடுமையான விதிமுறைகள் இல்லாவிட்டால், இத்திருட்டுப் படைப்பாற்றல் துறைக்கும் அதன் திறமைகளுக்கும் ஒரு புற்றுநோயாகத் தொடரும்” என்றார்.
லைலா சாட், ஆஸ்ட்ரோவின் ஒழுங்குமுறை இயக்குநர் கூறுகையில், ”சட்டவிரோத ஸ்ட்ரீமிங் சாதனங்கள் (ஐ.எஸ்.டி) விற்பனையாளர்களுக்கு எதிரான அண்மைய குற்றச்சாட்டுகளை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், உள்ளடக்கத் திருட்டு என்பது திருட்டாகவே கருதப்படும், சட்டவிரோதமானது மற்றும் சட்டத்தால் தண்டிக்கத்தக்கது என்ற வலுவானச் செய்தியைத் தெரிவிக்க அதிகாரிகள் மற்றும் உள்ளடக்கக் கூட்டாளர்களுடன் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம்.
மின்னியல் திருட்டு மிகவும் பரவலாகிவிட்டது. இதனைத் திருட்டு என்பதை பலர் மறந்துவிட்டார்கள். மின்னியல் திருட்டு என்பது தொழில்துறையின் மிகப்பெரியத் துன்பமாகும். நடிகர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் என படைப்பாற்றல் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள ஒவ்வொரு நபரிடமிருந்தும் திருடுவதை மின்னியல் திருட்டு வழிவகுப்பதால் வளர்ச்சிக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது.
மின்னியல் திருட்டுக்குத் தீர்வுக் காணாவிட்டால் பொழுதுபோக்குத் துறையைப் பாதிப்பதோடு “ஃபிஃபா உலகக் கோப்பை” போன்ற பிரீமியம் உள்ளடக்கத்தை உருவாக்கவோ அல்லது முதலீடு செய்யவோ எவருக்கும் உரிமைகள் இல்லாததால் பொருளாதாரம் ரீதியாக நன்மைகளை ஏற்படுத்தாது. அவை திருடப்பட்டு சட்டவிரோதமாக மட்டுமே பயன்படுத்தப்படும்.
சரின் அரிஸ், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (பி.எஃப்.எம்) மதிப்புமிகுச் செயலாளர் கூறுகையில், ”அங்கீகரிக்கப்படாதப் பயன்பாடுகளைக் கொண்ட ஊடகப் பெட்டிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் மிகக் குறைவு. 30,000 ரிங்கிட் அபராதத்தை விட திருடப்பட்ட உள்ளடக்கத்தினால் ஏற்படும் இழப்பின் மதிப்பு அதிகமாக உள்ளதால், விதிக்கப்படும் அபராதம் கடுமையாக இருக்க வேண்டும்” என்றார்.
செட் சைதி, மலேசிய கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் (செனிமான்) கூறுகையில், ”ஐ.எஸ்.டி.யால் இயக்கப்பட்ட மின்னியல் திருட்டு நீண்டக் காலமாக உள்ளூர் படைப்புத் துறையை பாதித்துள்ளது. சமீபத்தில் விதிக்கப்பட்ட அபராதம் தொழில்துறைக்கு ஒரு புதியத் தொடக்கமாக இருப்பதோடு முக்கிய வழக்காக செயல்படும் என்றும்; இந்த குற்றச் செயலால் பாதிக்கப்பட்ட உள்ளூர் படைப்பாளர்களுக்கு நீதி வழங்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
லம் ஸ்வீ கிம், ஸ்டார் மீடியா குழுமத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி கூறுகையில், “மின்னியல் திருட்டுச் செயல்கள், தொழில்துறையை எவ்வளவு கடுமையாக பாதிக்கிறது என்பதை விதிக்கப்பட்ட அபராதம் பிரதிபலிக்க வேண்டும். பணமாக்குதல் அடிப்படையில் திருட்டைத் தூண்டும் செயலையும் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட வேண்டும்” என்றார்.
தற்போதுள்ள விதிமுறைகள் முழுமையாகச் செயல்படுத்தவோ, மீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைத் தடுக்கவோ, தண்டிக்கவோ இல்லை. மின்னியல் திருட்டுக்கு எதிராக பதிப்புரிமை வைத்திருப்பவர்களின் படைப்புகளுக்குப் போதுமானப் பாதுகாப்பைத் தற்போதுள்ள விதிமுறைகள் வழங்குவதில்லை. எனவே, தற்போதுள்ள விதிமுறைகளை முழுமையாக மதிப்பாய்வு செய்யுமாறு தொழில்துறை முன்னணியினர் மலேசிய அரசாங்கத்திடம் முறையிடுகின்றனர்.
பொறுப்பான உள்ளடக்கம் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யப்படுவதை உறுதிசெய்யவும் மின்னியல் திருட்டை ஒழிக்கவும் உள்ளடக்க வழங்குநர்கள், ஒளிபரப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், அதிகாரிகள் மற்றும் பயனீட்டாளர்கள், டெல்கோஸ், இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் மின் வணிகம் செய்பவர்கள் என அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சி மிக அவசியம்.
இணையச் சட்டவிரோத ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் இணையவழி வெளிப்படையாக விற்கப்படும் ஐ.எஸ்.டிக்கள் தடுக்க தவறுதலினால் மின்னியல் திருட்டைத் தூண்டுபவரை அடையாளம் காண வேண்டிய அவசியம் உள்ளது.