Home One Line P2 உலக மகளிர் தினம் : “விழுதுகள்” – செல்வமலர் & ஈஸ்வரி அனுபவங்கள்

உலக மகளிர் தினம் : “விழுதுகள்” – செல்வமலர் & ஈஸ்வரி அனுபவங்கள்

718
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆஸ்ட்ரோவில் ஒளியேறி வரும் “விழுதுகள்: சமூகத்தின் குரல்” நிகழ்ச்சியின் நடுநிலையாளர்களான செல்வமலர் செல்வராஜுவும் ஈஸ்வரி பழனிசாமியும் தங்களின் பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

1. விழுதுகள்: சமூகத்தின் குரல் நிகழ்ச்சியில் உங்களின் தற்போதைய பணியைப் பற்றியச் சுருக்கமானப் பின்னணியைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

செல்வமலர்: நான் விழுதுகள்: சமூகத்தின் குரல் நிகழ்ச்சியில் நடுநிலையாளராகப் பணியாற்றி வருகிறேன். விருந்தினர்களிடம் கேள்விகளை எழுப்புவது, விவாதங்களைத் தூண்டுவது, இரசிகர்களை நகைச்சுவை உணர்வோடு ஈடுபடுத்துவது ஆகியவை எனது பணிகளாகும்.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, விழுதுகள்: சமூகத்தின் குரல் நிகழ்ச்சியைத் தவிர, நிதி ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள், தனித்து வாழும் தாய்மார்கள், வேலையற்றோர், பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் குறைந்த ஊதியம் பெறுபவர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளித்து அதிக மைக்ரோ தொழில்முனைவரை உருவாக்கும் நோக்கைக் கொண்ட ஒரு சமூக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நான் பணிபுரிகிறேன்.

ஈஸ்வரி: ஒரு பேச்சு நிகழ்ச்சியின் நடுநிலையாளராக நான் பணிபுரிகிறேன். வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை, திட்டமிடப்பட்ட நாட்களில் எனது அங்கத்தை வழிநடத்துவேன். விருந்தினர்களிடையே தேர்ந்தெடுக்கப்பட்டக் கலந்துரையாடல் தலைப்புகளின் விவாதங்களை நடுநிலைப்படுத்துவதே எனது கடமை.

செல்வமலர்

2. #ChooseToChallenge என்ற 2021 சர்வதேச மகளிர் தினச் சுலோகம் உங்களுக்கு எவ்வகையில் அர்த்தமானது என்று கூறுங்கள்?

செல்வமலர்: என்னைப் பொறுத்தவரைப் பெண்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு நிகராகக் கருதப்படுவதில்லை. அவர்களால் ஒருபோதும் ஆண்களை வெல்ல முடியாது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றனர். ‘பெண்களுக்கு ஆண்களைப் போல் சம உரிமைகள் வேண்டும்!’ என்ற சுலோகத்தை நாம் அடிக்கடி கேட்கிறோம். என்னைப் பொறுத்தவரை, ஆண்களுடன் பெண்களுக்கு சம உரிமைகள் தேவையில்லை.

ஏனெனில், ஆண்கள் நமது திறமைக்கும் சாதனைக்குமான அளவுகோல் அல்ல. பெண்கள் விரும்பினால் ஆண்களை விட அதிக உயர்ந்த சாதனையை அடைய முடியும். எனவே #ChooseToChallenge என்ற சுலோகத்திற்கு ஏற்ப நான் இதனைச் சவாலாக ஏற்கிறேன். சவால்களை ஏற்று வெற்றிக் கனிகளைச் சுவைக்க இதுபோன்ற ஒரு சுலோகம் நமக்கு தேவை! என்னைப் பொறுத்தவரை ஒரு சரியான நேரத்தில் சிறப்பானச் சுலோகம், #ChooseToChallenge.

ஈஸ்வரி பழனிசாமி

ஈஸ்வரி: இச்சுலோகம் ஒரு வலுவானச் செய்தியைக் கொண்டுள்ளது. நாம் எதிர்கொள்ளும் அன்றாடச் சவால்களைத் தகர்த்தெறிந்துப் பல சாதனைகளைப் படைக்க அனைத்து பெண்களைத் தூண்டுகிறது. தற்போதையத் தொற்று சூழ்நிலையிலும், பெண்கள் தங்கள் சுய மரியாதையைக் காப்பது முக்கியம்.

3. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குறிக்கோள்களையும் எவ்வாறு பொழுதுபோக்குத் துறையின் கோரிக்கைகளோடு சமநிலைப்படுத்துகிறீர்கள்?

செல்வமலர்: நிகழ்ச்சிகள், வேலை மற்றும் குடும்பத்தினருக்கு இடையில் (குறிப்பாக எனது 3 வயது மகன்) நேரத்தைச் செவ்வெனக் கையாளுவது எளிதல்ல. நான் எப்பொழுதும் துவண்டு விடக்கூடாது என்று என்னை ஊக்கப்படுத்திக் கொள்வேன். என் நேரத்தையும் நன்றாகத் திட்டமிடுவேன். நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் எனது இளம் தொழில்முனைவோருடன் தொடர்ந்து இணைந்திருக்க முடிகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஏனெனில், அவர்களில் பெரும்பாலோர் நிகழ்ச்சியைக் கண்டுக் களிப்பர். குடும்பத்தைப் பொறுத்தவரை, நான் என் கணவர் மற்றும் மகனுடன் என்னால் முடிந்தவரைத் தரமான நேரத்தை செலவிடுவேன். என் கணவர் சமைக்கக் கற்றுக்கொண்டதால், நான் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும்போது அவர் சமைத்து விடுவார். நீங்கள் எதைச் செய்தாலும் கொஞ்சம் வேடிக்கையாகச் செய்யும்போதும், வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும்போதும், நிர்ணயித்த இலக்குகளை அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஈஸ்வரி: ‘யின்’ மற்றும் ‘யாங்’ போல, சமநிலை என்பது வாழ்க்கையின் சாரம். எனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் நான் எப்பொழுதும் சிறந்ததை வழங்குவதை உறுதிச்செய்வேன். எப்படி?

வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் ஒரு மெல்லியக் கோட்டை வரைவதன் மூலம். நான் வழக்கமாக வேலையை வீட்டிற்கும், எனது தனிப்பட்ட வாழ்க்கையை வேலைக்கும் கொண்டு வருவதில்லை. ஒரு நல்லப் பணி தரத்தையும் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தரத்தையும் பராமரிப்பது மிக முக்கியம். இதன்வழி, எனது இலக்குகளை அடைய முயற்சி செய்ய முடியும்.

4. உங்களைப் போலவே ஒரு தொழிலில் இணைய விரும்பும் பெண்களுக்கு உங்களின் ஆலோசனைகள் யாவை?

செல்வமலர்: நான் கடந்த 15 ஆண்டுகளாக அரசு சார்பற்ற அமைப்பின் (NGO) பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ஏழைகளுக்கு உதவும் வண்ணம் நான் பல காரியங்கள் செய்வதை விரும்புகிறேன். பொழுதுபோக்கு துறையில் தொடர்ந்து வளர, ஒருவருக்கு ஆர்வமும் ஆற்றலும் தேவை. என் தொழிலில் ஆர்வமுள்ளப் பெண்கள், மற்றவர்களைச் சிறந்தவர்களாகவும், மகிழ்ச்சியாகவும், வெற்றியாளர்களாகவும் மாற்றுவதற்குக் கடினமாக முயற்சி செய்வதில் உங்களுக்கு சரியான அணுகுமுறை, ஆற்றல், ஆர்வம் மற்றும் உற்சாகம் இருந்தால், நீங்கள் இந்த வேலைக்குத் தயாராக உள்ளீர்கள்! எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் செய்ய விரும்பியச் செயல்களுக்கு பணம் கொடுத்தால் யார்தான் விரும்பமாட்டார்கள்.

ஈஸ்வரி: விடாமுயற்சி, மன உறுதி மற்றும் தீர்மானம் ஆகிய மூன்றும் ஒரு நிகழ்ச்சியின் நடுநிலையாளர் மற்றும் தொகுப்பாளர் பணியில் வெற்றி அடைவதற்க்கான தாரக மந்திரம். தகவல் வளமிக்கவராக ஒருவர் இருத்தல் அவசியம். முடியாது என்று எப்பொழுதும் கூறக்கூடாது. கூடுதல் மைல்கள் செல்ல எப்போதும் முயற்சி செய்ய வேண்டும்.

5. சர்வதேச மகளிர் தின வாழ்த்து / செய்தியை உங்கள் இரசிகர்களுக்குப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

செல்வமலர்: எனது அழகானப் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! பெண்கள் இல்லாத உலகை உங்களால் கற்பனைச் செய்ய முடியுமா? நிச்சயமாக இல்லை! எனவே, தைரியமாக நிமிர்ந்துப் பீடுநடைப் போடுங்கள்.

ஈஸ்வரி: குறிப்பாக உங்களின் இலக்குகளைத் தொடரும்போது, எப்பொழுதும் சுயமரியாதையைப் பேணுங்கள். உங்களின் வரம்புகளை பிறர் நிர்ணயிக்க விடாதீர்கள. உங்கள் திறனின் சிறந்த நீதிபதி, நீங்களே. வரம்பு முக்கியமல்ல. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!