கோலாலம்பூர்: தேசிய கூட்டணி பிளவுபட்டு பலவீனமடைய விரும்புபவர்கள் அனைவரும் ஜசெக மற்றும் நம்பிக்கை கூட்டணியின் முகவர்கள் என்று பெர்சாத்து தகவல் தொடர்புத் தலைவர் வான் சைபுல் வான் ஜான் விவரித்தார்.
மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பிரிப்பது நீடித்த அரசியல் நிலைத்தன்மைக்கு வழிவகுக்காது என்றும் இதனால் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
“ஜசெக மற்றும் நம்பிக்கை கூட்டணி உண்மையில் மலாய் வாக்குகளை பிரிக்க விரும்பின என்பதை நாங்கள் அறிவோம். என்னைப் பொறுத்தவரை, வேண்டுமென்றே நாம் பிரிந்து செல்ல வேண்டும் என்றும், பலவீனமாக இருக்க விரும்புபவர்களும் ஜசெக மற்றும் நம்பிக்கை கூட்டணியின் முகவர்களாவர். ஜசெக மற்றும் நம்பிக்கை கூட்டணி நம்மை பலவீனப்படுத்தும். அவர்களின் முகவர்கள் பல்வேறு வடிவங்களில் வரக்கூடும், ” என்று அவர் இன்று முகநூல் அறிக்கையில் தெரிவித்தார்.
“நாம் எப்போதும் குடும்ப (தேசிய கூட்டணி) உணர்வைப் பராமரிக்க வேண்டும். தனிப்பட்ட இலாபத்திற்காக, இருக்கும் கூட்டணியை அழிக்க முயற்சிக்கக்கூடாது. தற்போதைய கடினமான தேசிய சூழலில், நாம் மக்கள் நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை சேதப்படுத்தும் முகவராக இருக்க வேண்டாம், ” என்றார்.