கோலாலம்பூர்: மலேசியாவில் முஸ்லிமல்லாதவர்களால் “அல்லாஹ்” என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மலேசிய அரசு மேல்முறையீடு செய்ததை, சபா மற்றும் சரவாக் நாடாளுமன்ற மற்றும் சட்டம்னற உறுப்பினர்கள் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த தீர்ப்பானது, 35 வருடக் கால சபா மக்கள், சரவாக்கியர்கள் மற்றும் பூர்வக்குடியினர் எதிர்க்கொண்ட வேதனையை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், அது பிரதமருக்கு சாதகமான ஆதரவாக இருக்கும் என்று அவர்கள் கூறினர்.
“அனைத்து மலேசியர்களும் மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்களில் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய முடியும் என்பது ஒரு வரப்பிரசாதம்,” என்று ஒன்பது கட்சிகளைச் சேர்ந்த 54 நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற தீர்ப்பை தங்கள் சொந்த குறுகிய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் அறிவுறுத்தியுள்ளனர்.
“இது அனைவருக்குமான முடிவாக இருக்கட்டும். தேசிய நல்லிணக்கத்தின் ஒரு படியாக இருக்கட்டும். இது ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்வதற்கும், நேசிப்பதற்கும் உதவுகிறது,” என்று அவர்கள் கூறினர்.