(கடந்த மார்ச் 13-ஆம் நாள் செல்லியல் காணொலி தளத்தில் “கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஏன்?” என்ற தலைப்பில் இடம் பெற்ற மேற்கண்ட காணொலியின் கட்டுரை வடிவம்)
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பின்னர் பலவித கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளானவர் கமல்ஹாசன்.
ஆனால் கட்டம் கட்டமாக தமிழக அரசியல் களத்தில் சில மாற்றங்கள் கடந்த மாதங்களில் நிகழ்ந்தன.
ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகினார்.
சிறையிலிருந்து வெளியேறியவுடன் அதிமுகவைக் கைப்பற்றப் போகிறார், தமிழக அரசியலைக் கலக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவும் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
இதனால் சசிகலாவைச் சார்ந்திருந்த அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரனின் அரசியல் செல்வாக்கும் சடசடவென சரிந்தது.
அதிமுக, திமுக இரண்டும் வலுவான கூட்டணியை சில கட்சிகளோடு அமைக்க, விஜய்காந்த் தலைமையிலான தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சியோடு கைகோர்த்து 60 சட்டமன்றத் தொகுதிகளில் களம் காண்கிறது தேமுதிக.
சரத்குமாரின் சமத்துவ கட்சி கமல்ஹாசனோடு கைகோர்த்திருக்கிறது.
இப்படியாகத் தொடர்ந்த அதிரடி திருப்பங்களால் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் மூன்றாவது அணியாக முன்னணிக்கு வந்திருக்கிறார் கமல்.
154 தொகுதிகளில் அவரின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது.
அவரால் எத்தனை வாக்குகள் பெற முடியும்? போட்டியிடும் தொகுதிகளில் அவர் பிரிக்கப் போவது அதிமுக வாக்குகளையா அல்லது திமுக வாக்குகளையா என்பதுதான் இப்போதைய கேள்வி.
எத்தனை தொகுதிகளில் அவரின் கட்சி வெல்ல முடியும் என்பது கேள்விக் குறி.
ஆனால், ஏதாவது ஒருவகையில் கமலின் பாதிப்பு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.
அடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தது எந்தத் தொகுதியில் அவர் போட்டியிடப் போகிறார் என்பதுதான்!
எம்ஜிஆர் முன்பு போட்டியிட்ட பரங்கிமலை சட்டமன்றத்தை உள்ளடக்கிய ஆலந்தூரில் கமல் போட்டியிடுவார் என ஆரூடங்கள் நிலவின.
ஆனால், அதிரடியாக அவர் தேர்ந்தெடுத்திருப்பது கோவை தெற்கு தொகுதியை!
இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?
இங்குதான் கமல்ஹாசன் தனது அரசியல் சாதுரியத்தையும் வியூகத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
கோவை தெற்கு தொகுதியில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே போட்டியிடவில்லை.
அதிமுக, அந்தத் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியிருக்கிறது. பாஜக பிரமுகர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் இங்கு போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது.
கமல்ஹாசன், வானதி சீனிவாசன் இருவருமே நேற்று திங்கட்கிழமை மார்15-இல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான தங்களின் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
திமுக இந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பொதுவாக, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக இரண்டு மே பலவிதக் காரணங்களால் பலவீனமான கட்சிகளாகப் பார்க்கப்படுகின்றன.
அதிமுக, திமுக கூட்டணி அமைப்பே அவர்களின் பலம்.
எனவே, அதிமுக, திமுக போட்டியிடாத ஒரு தொகுதியை கமல் சாமர்த்தியமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களோடு மோதுவது கமலுக்கு பெரும் சவாலாக இருந்திருக்கும்.
ஆனால் இப்போது அவர் மோதப் போவது பலவீனமான இரண்டு தேசியக் கட்சிகளோடு!
திமுக, அதிமுக ஆதரவு வாக்காளர்களும் கமல் பக்கம் திரும்ப வாய்ப்புண்டு.
காரணம், அந்த இரண்டு பெரிய கட்சிகளின் ஆதரவாளர்களும் ஒரு வித்தியாசத்திற்கு பொது வேட்பாளராக கமலுக்கு வாய்ப்பு கொடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைப்போமே எனக் கருதலாம்.
காங்கிரசும், பாஜகவும்தானே மோதுகின்றனவே தவிர தங்கள் கட்சியல்ல என்பதால் திமுக, அதிமுக வாக்காளர்கள் கட்சிக்கட்டுப்பாட்டை மீறி, கூட்டணி தர்மத்தை மீறி இறுதியில் கமலுக்கு வாக்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஆக, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் முடிவால் தனக்கும் அரசியல் வியூகம் தெரியும் என நிரூபித்திருக்கிறார் கமல்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பதால், தான் டிங்கு போட்டியிடுவதற்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறியிருக்கிறார் கமல்.
வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
-இரா.முத்தரசன்