கோலாலம்பூர்: ஏப்ரல் 13-ஆம் தேதி நோன்பு மாத தொடக்கத்தில் மாநில எல்லைகளைக் கடக்க முயற்சிப்பவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
ரமழானைக் கொண்டாடுவதற்காக பிற மாநிலங்களில் உள்ள தங்கள் கிராமங்களுக்குத் திரும்ப முயற்சிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறை (ஜே.பி.ஜே.கே.கே) இயக்குனர் சைனால் அபிடின் காசிம் தெரிவித்தார்.
மாநில எல்லையில் உள்ள அனைத்து சாலைத் தடைகளிலும் கடுமையான சோதனைகள் நடத்தப்படுவதோடு, மாநிலங்களுக்குச் செல்ல அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
“இந்த வார இறுதியில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அதிகமான வாகனங்கள் இருப்பதை நான் முன்கூட்டியே பார்க்கிறேன். இந்த நேரத்தில் பிடிபட்டால் மேலதிக ஆலோசனைகள் வழங்கப்படமாட்டாது. காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.