amaகோலாலம்பூர்: கடண்தாண்டு பிப்ரவரியில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஈடுபட்டதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கூறினார்.
நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு, துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதே முக்கிய காரணம் என்று அவர் கூறினார்.
“மகாதீர் அதை உள்நோக்கத்துடன் செய்தார். பிரதமர் பதவியை அன்வாருக்கு வழங்கக்கூடாது என்ற திட்டம் மகாதீருக்கு இருந்தது. நெருக்கடியின் போது மகாதீர் பதவி விலகி அன்வாருக்கு வழிவகுத்திருந்தால், நம்பிக்கை கூட்டணி இன்று அரசாங்கமாகவே இருக்கும்,” என்று வணக்கம் மலேசியாவிடம் பேசிய போது அவர் கூறினார்.
இதற்கிடையில், நம்பிக்கை கூட்டணி வீழ்ச்சிக்கு அன்வார்தான் காரணம் என்ற கூற்றினை இராமசாமி தள்ளுபடி செய்தார்.
“அஸ்மின் (அலி) பிகேஆரை விட்டு வெளியேறியது போன்ற பிற காரணங்களும் உள்ளன. மொகிதின் மகாதீரை முதுகில் குத்தினார். மற்றவர்கள் இதைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்கத் துணியவில்லை. ஆனால், நம்பிக்கை கூட்டணி வீழ்ச்சிக்கு மகாதீர் முக்கிய காரணம் என்று என்னால் சொல்ல முடியும். மற்றவர்கள் அல்ல, அன்வார் அல்ல, குவான் எங் அல்லது மாட் சாபு அல்ல. காரணம் மகாதீர். நாங்கள் நம்பி ஏமாற்றப்பட்டோம், மகாதீர் எங்களுக்கு துரோகம் இழைத்தார்,” என்று அவர் கூறினார்.