
சென்னை : தமிழக மக்களிடையே நன்கு அறிமுகமான ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான வெ.இறையன்பு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இன்று மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார்.
பல்வேறு நூல்கள் எழுதியவர் இறையன்பு. தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், மூளையின் ஆற்றல், செயல்பாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் நூல்களும் கட்டுரைகளும் எழுதி தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க படைப்பாளராக வலம் வருபவர் இறையன்பு.
அதே வேளையில் சிறந்த ஐஏஎஸ் (இந்திய ஆட்சித் துறை சேவை) அதிகாரியாகவும் செயல்பட்டவர். தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பணியாற்றியவர். நேர்மையாளர், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதவர் என்ற நற்பெயரையும் பெற்றவர்.
அதிமுக அரசால் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜிவ் ரஞ்சன் இன்று முதல் அவரின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்தின் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இறையன்பு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்முனைப்புத் தூண்டல் உரைகளை வழங்கியிருப்பதன் மூலமும் தமிழக மக்களிடையே பிரபலமானவர்.
இறையன்புவின் நியமனம் பலதரப்பட்ட தரப்புகளின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.