ஹாலிவுட் : ஆங்கிலத் திரைப்படங்களை அதிகமாக தயாரித்த நிறுவனங்களுள் ஒன்று எம்ஜிஎம் ஸ்டூடியோஸ். புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் படங்களை இந்த இந்த நிறுவனம்தான் தயாரித்தது.
ஏற்கனவே, நெட்பிலிக்ஸ், ஆப்பிள் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய எம்ஜிஎம் தற்போது அமேசோன் நிறுவனத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.
ஏறத்தாழ 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் எம்ஜிஎம் நிறுவனத்தை அமேசோன் வாங்கக் கூடும் என ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
ஏற்கனவே ஓடிடி எனப்படும் கட்டண வலைத் திரை வணிகத்தில் முன்னணியில் இருந்து வரும் அமேசோன் எம்ஜிஎம் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் மேலும் அதிகமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைக் கொண்டிருக்க வியூகம் வகுத்திருக்கிறது.
எம்ஜிஎம் சுமார் 4 ஆயிரம் திரைப்படங்களையும், 17 ஆயிரம் மணிநேரம் கொண்ட தொலைக் காட்சி நிகழ்ச்சிகளையும் உரிமை கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் 1.5 பில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்ற எம்ஜிஎம் 33 மில்லியன் நிகர இலாபத்தை அடைந்தது.