சென்னை, ஜனவரி 27 – தமிழ்நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தொடர்பான வழக்கில் அந்த திரைப்படத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் நேற்று பிரசாத் ஸ்டூடியோவில் பார்த்தார்.
நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் படத்துக்கு தடை கோரி ரீஜண்ட் சாய்மீரா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் மேல்முறையீடு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்ட நிலையில், விஸ்வரூபம் படத்திற்கு தடைகோரி முஸ்லிம் அமைப்பினர் தமிழக அரசிடம் முறையிட்டனர்.
இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் படம் திரையிட 15 நாட்களுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து ராஜ்கமல் நிறுவனத்தின் பங்குதாரரும், கமல்ஹாசனின் சகோதரருமான சந்திரஹாசன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், இந்த வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. படத்தை வரும் 26ம் தேதி நான் பார்த்து அதன் பிறகு உரிய உத்தரவு வரும் 28ம் தேதி பிறப்பிக்கப்படும். விசாரணையை ஜனவரி 28ம் தேதி தள்ளிவைக்கிறேன் என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்த படத்தை நீதிபதி வெங்கட்ராமன் நேற்று வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் பார்த்தார். மதியம் 1.45 மணிக்கு படம் திரையிடப்பட்டு 4.20வரை ஓடியது. அவருடன் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன், கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன், அவரது சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வக்கீல் சங்கரசுப்பு, ஐகோர்ட் காவல் நிலைய உதவிக் கமிஷனர் முரளி உள்ளிட்ட 30 பேர் படத்தை பார்த்தனர்.
முன்னதாக சில இஸ்லாமிய அமைப்புகள் தங்களையும் பார்க்க அனுமதிக்கக் கோரினர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. வழக்கில் சேர்க்கப்பட்டவர்கள் மட்டுமே படத்தை பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டதால் அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். இதையடுத்து, வரும் 28ம் தேதி வழக்கு விசாரணை நடக்கிறது. அதன்பின்னர் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
இந்த வழக்கின் முடிவு குறித்து தெரிந்து கொள்ள தமிழ்நாடே ஆவலுடன் காத்திருக்கின்றது.