Home கருத்தாய்வு அம்னோவிடம் இந்தியர்களின் தன்மானத்தை அடகு வைத்த ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவினர்!

அம்னோவிடம் இந்தியர்களின் தன்மானத்தை அடகு வைத்த ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவினர்!

715
0
SHARE
Ad

Hindraf Brothersஏப்ரல் 19 – ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவு – வேதமூர்த்தி தலைமையிலான பிரிவு –  நேற்று தனது ஐந்தாண்டுத் திட்ட வரைவினை, தேசிய முன்னணி ஏற்றுக் கொண்டது என்ற காரணத்தைக் காட்டி – இந்தியர்களின் தன்மானத்தை – ஒரே நாளில் அம்னோவிடம் அடகு வைத்து விட்டது.

#TamilSchoolmychoice

ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவு என்றுதான் இனி அவர்களைக் கூற முடியும்!

காரணம், நாடு முழுக்க ஹிண்ட்ராப்பின் மற்ற தலைவர்களும், ஹிண்ட்ராப் போராட்டங்களுக்காக தியாகத் தழும்புகளை ஏந்திய போராளிகளும் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதை – ஏற்றுக் கொள்ளாததை வைத்துப் பார்க்கும் போது வேதமூர்த்தி தலைமையில் உள்ள ஹிண்ட்ராப்பினர் உண்மையான ஹிண்ட்ராப்பின் உணர்வுகளை முழுமையாகப் பிரதிபலிப்பவர்கள் என இனியும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தியர்களின் ஒட்டுமொத்த உரிமையை ஏதோ தாங்கள்தான் பட்டா போட்டு வைத்திருப்பதுபோல கற்பனை செய்து கொண்டு – அதனையும் அம்னோவிடம் தாரை வார்த்துவிட்டு –  நஜிப் கையால் “நல்ல பிள்ளை” என்ற பட்டமும் சூட்டிக் கொண்டு விட்டது வேதமூர்த்தி தலைமையிலான குழு!

இத்தனை ஆண்டு காலமாக ஹிண்ட்ராப் இயக்கத்தை தனது உணர்வோடும், உயிரோடும் புதைத்து வைத்திருந்த எத்தனையோ லட்சம் மலேசிய இந்தியர்களின் தன்மானத்தையும், நம்பிக்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு, அம்னோவிடம் அவர்கள் விலை போயிருப்பது சுயநலத்தின் உச்சம்.

ஹிண்ட்ராப்பின் பெரும்பாலான தலைவர்களும், ஆதரவாளர்களும் கூட இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஹிண்ட்ராப்-நஜிப் ஒப்பந்தம் தகவல் வெளியான தருணத்திலிருந்து நாடு முழுக்க இந்தியர்கள் தொலைபேசிகளின் வழியும் நேரடியாக சந்திக்கும் போதும் தங்களுக்குள் செய்து கொண்ட கருத்துப் பரிமாற்றங்களை வைத்துப் பார்க்கும் போது எவ்வளவு தூரம் அவர்கள் நெஞ்சம் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை – புண்பட்டிருக்கின்றார்கள் என்பதை உணர முடிந்தது.

இனியும் பிரிவினை வாதம் – இனபேதம் தேவையா?

வேதமூர்த்தி நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்! 2007ஆம் ஆண்டில் ஹிண்ட்ராப் சமர்ப்பித்த 18 அம்ச கோரிக்கைகளில் இத்தனை ஆண்டுகளில் எதனை தேசிய முன்னணி அரசாங்கம் சாதகமாக செய்து முடித்திருக்கின்றது?

கடந்த 4 வருடங்களில் பிரதமராக இருந்து ஏதாவது ஒரு சில அம்சங்களை நஜிப்  செயல்படுத்தியிருக்க முடியாதா?

18 அம்சத் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு – இவர்களாகவே, தாங்கள் விலை போவதற்கு தோதாக – ஐந்தாண்டு திட்டம் என்ற பெயரில் ஒன்றைத் தயாரித்து, அதனை ஏற்றுக் கொள்ளவேண்டும் என உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி – ஆனால் கடைசியில் இந்த நாடகமெல்லாம் தேசிய முன்னணி ஏற்றுக் கொண்டது எனக் காட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்கள்.

மக்கள் கூட்டணி ஏன் ஹிண்ட்ராப் திட்டத்தை ஏற்கவில்லை?

மக்கள் கூட்டணி என்பது மூன்று வெவ்வேறு கட்சிகளின் சங்கமம். இன்னும் மத்திய அரசாங்கத்தை அமைக்காதவர்கள் அவர்கள்!

ஆனால் எல்லா மலேசியர்களுக்கும் இன பேதமின்றி – விடிவெள்ளியாக – விடியலாக நாங்கள் இருப்போம் என்ற தாரக மந்திரத்துடன் தேர்தல் களத்தில் நிற்பவர்கள் அவர்கள்.

அவர்களிடம் போய், இந்தியர்களுக்கு என்று இதைச் செய்வேன் என்று கையெழுத்திடுங்கள் என்றால்  பின்னர் அவர்கள் இதே போன்று சீனர்களுக்கு என்று ஒரு ஐந்தாண்டு வரைவு, பின்னர் மலாய்க்காரர்களுக்கு என்று ஒரு ஐந்தாண்டு வரைவு, சபாவில் கடாசான்காரர்களுக்கு, சரவாக்கில் இபான்காரர்களுக்கு என்று பிரித்துக் கொண்டே செல்ல வேண்டும்.

இத்தனை ஆண்டுகால இன ரீதியான பிரிவினை வாதம் வேண்டாம் – அனைவரும் மலேசியர்கள் என செயல்படுவோம் என்று முன்வந்துள்ள மக்கள் கூட்டணி, ஹிண்ட்ராப்பின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று மக்கள் கூட்டணித் தலைவர்களைப் பார்த்து வேதமூர்த்தி குழுவினர் அவர்களைத் திட்டுவதில் என்ன நியாயம்?

சுல்கிப்ளி நோர்டின் போன்ற இனவாதிகளை – நம்மை வந்தேறிகள் என இழிவு படுத்தி – ஏளனப்படுத்திய – பெர்காசா அமைப்பின் துணைத் தலைவரான ஒருவரை – அம்னோவுக்கு வெளியே இருந்து கொண்டு வந்து அவரை வேட்பாளராக அறிவித்த பின்னரும் – அதற்கு மறுநாளே, நஜிப்புடனும் – அம்னோ – தேசிய முன்னணியுடனும் கைகோர்க்க முன்வந்திருக்கின்றார்கள் இந்த ஹிண்ட்ராப் பிரிவினர் என்றால் எந்த அளவுக்கு அரசியலில் சோரம் போயிருக்கின்றார்கள் என்பதை நாம்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

சுல்கிப்ளி நோர்டினை அம்னோ வேட்பாளராக அறிவித்த அதே நஜிப்பின் கைகளைப் பற்றி குலுக்கிக் கொள்ள எப்படி இவர்களுக்கு மனம் வந்தது?

இனி இவர்கள் ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவினர்

HINDRAFஆம்! இவர்கள் – வேதமூர்த்தி குழுவினர் – இனி ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவினர்தான். இவர்களை ஹிண்ட்ராப் என்று மலேசிய இந்தியர்கள் யாருமே இனியும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சொந்த அண்ணனே – ஹிண்ட்ராப் போராட்டத்துக்காக பல மாதங்கள் சிறையில் வாடிய – ஹிண்ட்ராப்பின் உதயத்திற்கும் உயர்வுக்கும் ஊன் உறக்கத்தை தியாகம் செய்த உதயகுமாரே ஏற்றுக் கொள்ளாத ஒரு திட்டம் எப்படி ஹிண்ட்ராப்பின் திட்டமாக இருக்க முடியும்?

எனவே, வேதமூர்த்தி தலைமையில் உள்ளது ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவினர்தான்!

இந்தியர்களின் நலனுக்காக நாங்கள் வரைந்த ஐந்தாண்டுத் திட்டத்தை, தேசிய முன்னணி மட்டுமே ஏற்றுக் கொள்கிறது, எனவே பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்கப் போகிறோம் என்று வாய்கூசாமல் இந்த ஹிண்ட்ராப் பிரிவினர் கூறுவது எந்த வகையில் நியாயம்?

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தன்னை ஒரு அரசியல் அமைப்பாக அங்கீகரித்துக் கொள்ளும் முயற்சியில் ஹிண்ட்ராப் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தையும் பலியாடுகளாய் ஆக்கிவிட்டது.

இப்போது மட்டும் எப்படி நம்பப் போகின்றார்கள்?

Najib நஜிப் இந்த ஐந்தாண்டு திட்ட வரைவினை ஏற்றுக் கொண்டதால் அதனை செயல்படுத்தி விடுவார் என்று இவர்கள் எப்படி நம்புகின்றார்கள்?

55 ஆண்டுகளாக இந்திய சமுதாயத்திற்கு ஒன்றும் செய்யாதவர்கள் – அவர்களை நட்டாற்றில் விட்டவர்கள் – என்று தெருவுக்கு தெரு தேசிய முன்னணியைத் திட்டி முழக்கம் செய்த இதே ஹிண்ட்ராப் பிரிவினர் இப்போது மட்டும் அதே தேசிய முன்னணியின் நஜிப் இதையெல்லாம் செய்து முடிக்கப் போகின்றார் என எப்படி நம்புகின்றார்கள்?

தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நஜிப் – மத்திய அரசாங்கத்தை மக்கள் கூட்டணியிடம் இழப்பதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டுள்ள நஜிப் – தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு – தேசிய முன்னணியை காப்பாற்றிக் கொள்வதற்கு எதை வேண்டுமானால் செய்யக் கூடிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றார் என்பதைக் கூடவா இந்த ஹிண்ட்ராப் பிரிவினரால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை!

இது சரித்திரபூர்வமான நிகழ்வா?

சரித்திர பூர்வமான நிகழ்வு இது என்று வேதமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

ஆம் சரித்திர பூர்வ நிகழ்வுதான் – 13வது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளை தேசிய முன்னணிக்கு எதிராக திசை திருப்பிய சரித்திரபூர்வமான நிகழ்வுதான் இந்த ஹிண்ட்ராப் ஒப்பந்தம் என்பதை நாளைய சரித்திரம் சொல்லும்!

வேதமூர்த்தியும் – நஜிப்பும் கைகுலுக்கிக் கொண்டால் அதனால் இந்திய சமுதாயம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு இவர்களின் பின்னால் ஒட்டு மொத்தமாகப் போய்விடுவார்கள் என்று எதிர்பார்த்தால் – தேசிய முன்னணிக்கு தங்களின் பொன்னான வாக்குகளை வாரி வழங்குவார்கள் என நினைத்தால் – அது ஏமாற்றத்தில்தான் முடியப் போகின்றது என்பதை மே மாதம் 5ஆம் தேதி இரவு சொல்லும்.

-இரா.முத்தரசன்