பாகிஸ்தான், ஏப்ரல் 19-நீதிபதிகளை பதவிநீக்கம் செய்த வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை இரு நாட்களுக்குள் தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2007ம் ஆண்டு முஷாரப்பின் இராணுவ ஆட்சி நிலவிய போது, அவசர நிலையை பிரகடனப்படுத்தி நாட்டின் மிக முக்கிய 60 நீதிபதிகளை முஷாரப் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். இது தொடர்பிலான வழக்கு நேற்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இவ்வழக்கிற்கு ஏற்கனவே இடைக்கால ஜாமின் பெற்றிருந்த முஷாரப் அதனை நீட்டிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜாரானார்.
ஆனால் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி, முஷாரப்பை உடனடியாக கைது செய்யும் படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதை சற்றும் எதிர்பாராத முஷாரப், உடனடியாக தனது பாதுகாவலர்களுடன் அவசரமாக காரில் ஏறி நீதிமன்ற வளாகத்திலிருந்து வெறியேறினார்.
இந்நிலையில் இன்று காலை, இஸ்லாமாபாத் புறநகர் பகுதியான சக் ஷாஸாத் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்டார். முஷாரப்பை போலீஸ் காவலில் எடுத்து 2 நாடுகளுக்குள் தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும் என நீதிபதி சவுக்கத் அஜஸ் சித்திக்கி உத்தரவிட்டுள்ளார். முஷாரப்பின் பண்ணை வீடு கிளைச்சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முஷாரப் விரைவில் இஸ்லாமாபாத் சிறைச்சாலையில் நிரந்தரமாக அடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சியிலிருந்து விலகிய முஷாரப், கடந்த நான்கு வருடங்களாக வெளிநாடுகளில் தொடர்ந்து வசித்து வந்தார். எனினும் பாகிஸ்தானில் எதிர்வரும் மே 11ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கைது அபாயம், உயிர் ஆபத்து என்பவற்றையும் மீறி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தார்.
அவர் மீது ஏற்கனவே பல வழக்குகளில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் அவை அனைத்திலும் முன் ஜாமீன் வாங்கி வைத்துள்ளார். இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முஷாரப் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையமும் அறிவித்திருந்தது.