பாஸ்டன், ஏப்ரல் 19-பாஸ்டன் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பாஸ்டன் மரதன் ஓட்டப்போட்டியின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகியிருந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் இத்தொடர் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களின் புகைப்படங்களை புலனாய்வு துறையினர் நேற்றிரவு வெளியிட்டனர். குறித்த சந்தேக நபர்களை அடையாளம் காட்டக்கூடியவர்கள் உடனடியாக முன்வருமாறும் கோரியிருந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு வாடர்டவுனில் வைத்து ஒரு சந்தேக நபரை காவல்துறையினர் துரத்திப்பிடித்துள்ளதாகவும் மற்றுமொருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து குறித்த நகரம் காவல்துறையினரின் தீவிர முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதுடன் இதன் மூலம் இரண்டாவது சந்தேக நபரை கைது செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
பொது இடங்களில் நடமாட வேண்டாம் எனவும், வீட்டுக்கதவுகளை காவல்துறையினரை தவிர வேறு எவர் வந்து தட்டினாலும் திறக்கவேண்டாம் எனவும், இரண்டாவது சந்தேக நபர் துப்பாக்கியுடன் நடமாடக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் வார்டர்டவுனில் பொதுமக்கள் விழிப்பாக இருக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.