Home அரசியல் ஜசெக சின்னத்தைப் பயன்படுத்தலாம் – சங்கப் பதிவிலாகா இரவோடு இரவாக இறுதி நேர பதில்; தே.மு.வுக்கான...

ஜசெக சின்னத்தைப் பயன்படுத்தலாம் – சங்கப் பதிவிலாகா இரவோடு இரவாக இறுதி நேர பதில்; தே.மு.வுக்கான வாக்குகள் பெரும் பாதிப்பு

695
0
SHARE
Ad

DAP-LOGO-SLIDERகோலாலம்பூர், ஏப்ரல் 20 நேற்று மாலை வரை ஜனநாயக செயல் கட்சி (ஜசெக) விதித்த கெடுவுக்கு பதிலளிக்காத சங்கப் பதிவிலாகா, நேற்று நாடு முழுதும் பிரதிபலித்த கொந்தளிப்புகள், எதிர்ப்பு உணர்வுகள் காரணமாக இறங்கி வந்து, இரவோடு இரவாக அந்த கட்சிக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

#TamilSchoolmychoice

அந்த கடிதத்தில் ஜசெகவின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல்தான் செல்லாது என்றும் இன்று நடைபெறும் வேட்பு மனுத்தாக்கலின் போது அந்த கட்சி தங்களின் ராக்கெட் சின்னத்தைப் பயனபடுத்தலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

சங்கப் பதிவிலாக தலைமை இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் இந்த விளக்கத்தை கடிதம் மூலம் ஜசெகவுக்குத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இரண்டு கடிதங்களோடு ஜசெக வேட்பாளர்கள்

இது குறித்து மலேசியா கினியிடம் கருத்துரைத்த ஜசெகவின் தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக், இருப்பினும் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்யும் ஜசெக வேட்பாளர்கள் தங்கள் வசம் இரண்டு கடிதங்களை வைத்திருப்பர் என்றும் ஜசெக சின்னம் பயன்படுத்த முடியாது என்ற நிலைமை வருமானால், அதற்குப் பதிலாக பாஸ் அல்லது பிகேஆர் கட்சிகளின் சின்னத்தைப் பயன்படுத்தும் அங்கீகாரக் கடிதங்களை சமர்ப்பிப்பர் என்றும் கூறியுள்ளார்.

நேற்று ஜசெக செய்த அறிவிப்பின்படி மேற்கு மலேசியாவில் ஜசெக வேட்பாளர்கள் பாஸ் சின்னத்தின் கீழ் போட்டியிடும் அதே வேளையில் சபா, சரவாக் மாநிலங்களின் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.

தேசிய முன்னணிக்கான வாக்குகள் பெரும் பாதிப்பு

தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சங்கப் பதிவிலாகா மேற்கொண்ட நடவடிக்கையால், ஜசெகவின் ராக்கெட் சின்னம் முடக்கப்படும் என்ற அச்சம் நாடு முழுமையிலும் பரவி ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் ஜசெகவின் பதிவு ரத்தாகலாம், ராக்கெட் சின்னம் பறிபோகலாம், பொதுத் தேர்தல் முடிந்தவுடன் சங்கப் பதிவிலாக கடிதத்தைக் காரணம் காட்டி வெற்றி பெற்ற ஜசெக வேட்பாளர்களின் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்படலாம் என பல முனைகளில் சட்ட சிக்கல்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளது.

இத்தகைய மறைமுகமான – கீழறுப்பான – “இடுப்புக்கு கீழே அடிக்கும்” உத்தியை தேசிய முன்னணி கையாண்டுள்ளதால் நாடு முழுமையிலும் தேசிய முன்னணிக்கு எதிர்ப்பான மனப்போக்கு குறிப்பாக சீனர்களிடத்தில்  பெருமளவில் பெருகியுள்ளது.

இதனால் முன்பு எதிர்பார்த்ததை விட மிக மோசமாக அளவில் சீன வாக்குகளை தேசிய முன்னணி இழக்கும் என்பதோடு, அதனால் வெற்றி வாய்ப்பு இருந்த பல தொகுதிகளில் தோல்வியைச் சந்திக்கும் அபாயத்திற்கு தேசிய முன்னணி தள்ளப்பட்டுள்ளது.