Home உலகம் ஈரோ 2020 : பிரான்ஸ் 3 – சுவிட்சர்லாந்து 3 ; பினால்டி கோல்களில் தோல்வி...

ஈரோ 2020 : பிரான்ஸ் 3 – சுவிட்சர்லாந்து 3 ; பினால்டி கோல்களில் தோல்வி கண்டது பிரான்ஸ்

741
0
SHARE
Ad

புச்சாரெஸ்ட் (ரோமேனியா) : ஈரோ 2020 ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் தற்போது நடைபெற்று வரும் 16 குழுக்களுக்கிடையிலான ஆட்டத்தில் திங்கட்கிழமை (ஜூன் 28) நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், மற்றொரு பலம் வாய்ந்த குழுவான சுவிட்சர்லாந்திடம் தோல்வி கண்டு போட்டிகளில் இருந்து வெளியேறியது.

ஆட்டத்துக்கான நேரம் முடிவடைந்தும் இரண்டு குழுக்களும் 3-3 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டதால் பினால்டி கோல்களின் மூலம் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நிலைமை ஏற்பட்டது.

பினால்டி கோல்களில் சுவிட்சர்லாந்து 5 கோல்களைப் போட பிரான்ஸ் 4 கோல்களை மட்டுமே போட்டு தோல்வி கண்டது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து ஐரோப்பியக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் எனக் கணிக்கப்பட்ட பிரான்ஸ் பரிதாபமாக வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இந்த ஆட்டம் ரோமேனியாவின் புச்சாரெஸ்ட் நகரில் மலேசிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்றது.

ஸ்பெயினும் கால் இறுதி ஆட்டத்தில் நுழைந்தது

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் 5-3 என்ற கோல் எண்ணிக்கையில் குரோஷியாவைத் தோற்கடித்து கால் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியது.

ஸ்பெயின் 3 கோல்களை அடித்து 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி வாகை சூடும் தருணத்தில் குரோஷியா ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருக்கும் வேளையில் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டு 3-3 என ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்திற்கான 90 நிமிட நேரம் முடிவடைந்த வேளையில் இரண்டு குழுக்களுமே 3-3 என சமநிலையில் இருந்ததால் அரை மணி நேரம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இந்தக் கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் மேலும் 2 கோல்கள் போட்டு 5-3 என்ற கோல் எண்ணிக்கையில் குரோஷியாவைத் தோற்கடித்தது.

ஸ்பெயின் 2012-ஆம் ஆண்டில் ஐரோப்பியக் கிண்ணத்தை வெற்றி கொண்ட நாடாகும். அந்த ஆண்டில் இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இத்தாலி குழுவை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்து ஐரோப்பியக் கிண்ணத்தை ஸ்பெயின் வெற்றி கொண்டது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து கால் இறுதி ஆட்டத்திற்கு ஸ்பெயின் செல்கிறது.

அடுத்த சுற்றுக்குத் தேர்வான 16 குழுக்கள்

மொத்தம் 24 நாடுகள் கலந்து கொண்ட ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் அந்த நாடுகள் ஒரு பிரிவுக்கு 4 நாடு என்ற கணக்கில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 2 குழுக்கள் என்ற அளவில் 12 நாடுகள் 6 பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன.

மேலும் சிறந்த 3 இடத்தைப் பெற்ற 4 குழுக்களும் கூடுதலாகத் தேர்வு செய்யப்பட்டன.

தேர்வு செய்யப்பட்ட இந்த 16 குழுக்களுக்கு இடையிலான போட்டிகள் சனிக்கிழமை ஜூன் 26 முதல் தொடங்கின.

6 பிரிவுகளில் சிறந்த குழுக்களாகத் தேர்வு பெற்ற 6 நாடுகள் பின்வருமாறு:

  1. இத்தாலி
  2. பெல்ஜியம்
  3. நெதர்லாந்து
  4. இங்கிலாந்து
  5. சுவீடன்
  6. பிரான்ஸ்

6 பிரிவுகளில் சிறந்த 2-வது குழுவாகத் தேர்வான 6 நாடுகள் பின்வருமாறு:-

  1. வேல்ஸ்
  2. டென்மார்க்
  3. ஆஸ்திரியா
  4. குரோஷியா
  5. ஸ்பெயின்
  6. ஜெர்மனி

பிரிவுகளில் சிறந்த 3-வது குழுவாகத் தேர்வாகும் நாடுகள் :-

  1. சுவிட்சர்லாந்து
  2. செக் குடியரசு
  3. உக்ரேன்
  4. போர்ச்சுகல்

அடுத்து 16 குழுக்களுக்குள் இடையிலான போட்டிகள் பின்வருமாறு நடைபெறும்:

26/06: வேல்ஸ் – டென்மார்க் (நடைபெறும் இடம் ஆம்ஸ்டர்டாம்)

26/06: இத்தாலி – ஆஸ்திரியா (நடைபெறும் இடம் இலண்டன்)

27/06: நெதர்லாந்து – செக் குடியரசு (நடைபெறும் இடம் புடாபெஸ்ட்)

27/06: பெல்ஜியம் – போர்ச்சுகல் (நடைபெறும் இடம் செவில்)

28/06: குரோஷியா – ஸ்பெயின் (நடைபெறும் இடம் கோப்பன்ஹேகன்)

28/06: பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து (நடைபெறும் இடம் புச்சாரெஸ்ட்)

29/06: இங்கிலாந்து – ஜெர்மனி (நடைபெறும் இடம் இலண்டன்)

29/06: சுவீடன் – உக்ரேன் (நடைபெறும் இடம் கிளாஸ்கோ)