Home நாடு விக்னேஸ்வரன் கோரிக்கையை ஏற்று சுங்கை சிப்புட்டில் தடுப்பூசி மையம் செயல்படத் தொடங்கியது

விக்னேஸ்வரன் கோரிக்கையை ஏற்று சுங்கை சிப்புட்டில் தடுப்பூசி மையம் செயல்படத் தொடங்கியது

969
0
SHARE
Ad

சுங்கை சிப்புட் : சுங்கை சிப்புட் வட்டாரத்தில் வாழும் பொதுமக்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், தேசியப் பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சு, கொவிட் தடுப்பூசி ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வந்தார்.

டான்ஸ்ரீயின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சுங்கை சிப்புட் மக்களுக்கான தடுப்பூசி மையம் இன்று வியாழக்கிழமை ஜூலை 1 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. சுங்கை சிப்புட் மாவட்ட மன்ற மண்டபத்தில் தடுப்பூசி போடும் இந்த மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர் சுங்கை சிப்புட் வட்டார மக்கள் கோலகங்சார் சென்றுதான் தடுப்பூசிகளைப் பெற முடியும் என்ற நிலைமை இருந்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கை சிப்புட் வட்டார மக்கள் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ள இந்தப் புதிய மையத்தில் பதிந்து கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக, சுங்கை சிப்புட் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். ஒருவர் இரண்டு தடவை தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள கோலகங்சார் சென்று வர சுமார் 180 ரிங்கிட் வரை செலவழிக்க வேண்டிய நிலைமை இதற்கு முன் இருந்தது.

தற்போது அந்த இக்கட்டான நிலைமை மாறிவிட்டது. டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஏற்பாட்டின் காரணமாக உள்ளூரிலேயே சுலபமாகவும், செலவு குறைந்த வழியிலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பு சுங்கை சிப்புட் மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.

கோலகங்சாரில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த காலகட்டத்தில் கூட வசதி குறைந்தவர்கள் கோலகங்சார் சென்று வர வேன் வாகனம் ஒன்றை விக்னேஸ்வரன் இலவசமாக வழங்கியிருந்தார். இந்த வேன் மூலம் பொதுமக்கள் கட்டணம் ஏதுமின்றி இலவசமாகப் பயணம் செய்து கோலகங்சார் சென்று தடுப்பூசிகளைப் பெற்று வந்தனர்.

இனி சுங்கை சிப்புட்டிலேயே தடுப்பூசிகள் போடப்படும் என்பதால் அந்த சிரமம் கூட இனி சுங்கை சிப்புட் மக்களுக்கு இருக்காது.

கணிசமான மருத்துவ அதிகாரிகளின் ஒத்துழைப்போடு ஒருநாளைக்கு 500 பேர்கள் வீதம் இந்த மையத்தில் தடுப்பூசிகள் போடப்படும். அடுத்த 6 மாதங்களுக்கு இந்தத் தடுப்பூசி மையம் இந்த இடத்தில் இயங்கும்.

இது குறித்துக் கருத்துரைத்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது கோரிக்கைக்கு ஏற்ப சுங்கை சிப்புட் மக்களின் நலன் கருதி நடவடிக்கைகள் எடுத்த அரசாங்கத்தரப்புக்கும் சம்பந்தப்பட்ட இலாகாக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சுங்கை சிப்புட் மக்கள் அனைவரும் தங்களுக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டு, கொவிட் தொற்றுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

மேலும் தடுப்பூசிகள் தொடர்பான ஆலோசனைகளைப் பெறவும் இதற்கான போக்குவரத்து வசதிகள் குறித்த தகவல்களைப் பெறவும் பொதுமக்களும், மைசெஜாத்திரா செயலி இல்லாதவர்களும் சுங்கை சிப்புட்டிலிருக்கும் தனது சேவை மையத்தையும், மஇகா தொகுதி அலுவலகத்தையும், அல்லது மஇகா கிளைப் பொறுப்பாளர்களையும் அணுகலாம் என்றும் விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

சுங்கை சிப்புட் மக்கள் இந்த நல்ல வாய்ப்பைப்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உடனடியாகப் பதிந்து கொண்டு கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டு கொவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்பதோடு தங்களின் உடல் நலத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

சுங்கை சிப்புட் தடுப்பூசி மையத்திற்கு விரைவில் தான் நேரடியாக வருகை தந்து, அங்குள்ள வசதிகளையும், ஏற்பாடுகளையும் ஆய்வு செய்யப் போவதாகவும் அந்த மையம் மேலும் சிறப்பாக இயங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப் போவதாகவும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.