கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் திறன்வாய்ந்த ஏழை இந்திய மாணவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்கு இலவசமாக மடிக் கணினிகள் வழங்கியுள்ளார்.
முதல் கட்டமாக பி-40 எனப்படும் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள இந்தியக் குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 115 பேர்களுக்கு சந்தாரா குமார் இந்த மடிக் கணினிகளை வழங்கினார்.
தலைநகரிலுள்ள தனது கூட்டரசுப் பிரதேச அமைச்சின் அலுவலகத்தில் கொவிட் கட்டுப்பாட்டு நிபந்தனைகளுடன் எளிமையாக நேற்று புதன்கிழமை (ஜூன் 30) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் கட்டமாக செந்துல் தம்புசாமிப் பிள்ளை மாணவர்களுக்கு சந்தாரா குமார் மடிக் கணினிகளை நேரடியாக வழங்கினார்.
கொவிட் காரணமாக அமுலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாகவும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாலும், நேரடியாகப் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு வழங்க இயலாத சூழ்நிலை நிலவுவதாக சந்தாரா குமார் தெரிவித்தார்.
இதன் காரணமாக, தற்போது, இயங்கலை வழியாக வீட்டில் இருந்தபடி இணையத் தொடர்பு மூலம் கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு உதவும் பொருட்டு அவர்களுக்கு இந்த மடிக்கணினிகளை வழங்குவதாகவும் சந்தாரா குமார் தெரிவித்தார்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவர்கள் ஏழ்மையில் இருந்தாலும், விடாமுயற்சியோடு, கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் நேற்று மடிக் கணினிகளைப் பெற வந்திருந்த மாணவர்களிடம் சந்தாரா குமார் வலியுறுத்தினார்.
ஏழை இந்திய மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கும் இந்தத் திட்டத்திற்கு பேருதவி புரிந்து ஒத்துழைத்த கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கும், கோலாலம்பூர் ரோட்டரி கிளப் மன்றத்திற்கும், மைக்ரோசோப்ட் நிறுவனத்திற்கும் சந்தாரா குமார் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நேற்று ஜூன் 30 முதல் தொடங்கிய கூட்டரசுப் பிரதேச ஏழை இந்திய மாணவர்களுக்கான மடிக் கணினிகள் வழங்கும் திட்டமானது மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் என்றும் சந்தாரா குமார் விளக்கினார்.
முதல் கட்டமாக நேற்று தம்புசாமி தமிழ்ப் பள்ளியின் 15 மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டன. கூடிய விரைவில் இரண்டாம், மூன்றாம் கட்ட நடவடிக்கைகளாக மடிக் கணினிகள் வழங்குவது தொடரப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் கிடைத்ததும் உடனடியாக அவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் சந்தாரா குமார் மேலும் தெரிவித்தார்.
தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் ஏழை இந்திய மாணவர்களின் கல்வி, கொவிட்-19 பாதிப்புகளால் தடைப்படாமல் இருக்கத் தங்களின் இந்தத் திட்டம் பெருமளவில் உதவி புரியும் என எதிர்பார்ப்பதாகவும் சந்தாரா குமார் நேற்றைய நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற மடிக் கணினிகள் வழங்கும் நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: