ஷா ஆலாம் : கொவிட்-19 தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை சிலாங்கூரில் அதிக அளவில் இருந்து வரும் நிலையில் அங்கு புதிதாகத் தொற்று கண்டவர்கள் கொவிட் மையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்ற தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
கொவிட் தொற்று கண்ட ஒரு நபர் நேற்று ஷா ஆலாமில் உள்ள கொவிட்-19 பதிவு மையத்திற்கு தன்னைப் பதிந்து கொள்ளச் சென்றிருக்கிறார். அங்கு இவரைப் போல் கொவிட் தொற்றுக்கான குறியீடுகளைக் கொண்டவர்கள் நூற்றுக் கணக்கில் காத்திருந்திருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் வரிசை எண் கொடுக்கப்பட்டு காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் ஒருநாள் முழுக்கக் காத்திருந்தும் அவரின் எண் அழைக்கப்படவே இல்லை. காத்திருந்த மண்டபத்தில் உணவுகூட உண்ண முடியாமல் அந்த நபர் பட்டினியோடு காத்திருந்திருக்கிறார். இரவில்தான் அவரின் எண் அழைக்கப்பட்டு அவருக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டு, அவருக்கு கொவிட் தொற்று இருக்கிறது என்பதையும் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்பதையும் குறிக்கும் கைவளையம் அணிவிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.
இந்த நிலைமை மோசமான கொவிட் தொற்றாளர்களைப் பதிவு செய்யும் நடைமுறைகள் எந்த அளவுக்கு மோசமாக இருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.
ஒருநாள் முழுக்கக் காத்திருந்து கைவளையம் பெற்றுக் கொண்ட அந்த நபர் தற்போது தனது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். பெயர் குறிப்பிட விரும்பாத அவர் பகிர்ந்து கொண்ட படங்களை இங்கே காணலாம்.