Home நாடு தமிழ் மூதறிஞர் இரா.இளங்குமரனார் மறைவு – சுப.நற்குணன் இரங்கல்

தமிழ் மூதறிஞர் இரா.இளங்குமரனார் மறைவு – சுப.நற்குணன் இரங்கல்

1316
0
SHARE
Ad

ஈப்போ : தமிழறிஞர் புலவர் இரா.இளங்குமரனார் கடந்த ஜூலை 25-ஆம் தேதி தமிழகத்தில் மறைந்தார். அவருக்கு வயது 91.

அன்னாரின் மறைவுக்கு ஈப்போ சுப.நற்குணன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

” தமிழ் மூதறிஞர் மதுரை இரா.இளங்குமரனாரின் மறைவு தமிழ் உள்ளங்களை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகத்தில் அறிஞர் பெருமக்கள் எல்லோராலும் ஏற்றிப் போற்றத்தக்கவராக விளங்கியவர். திருக்குறள் முழுதுமாகத் தமிழில் எழுதப்பட்டது. பிறமொழிக் கலப்பற்ற நூலெனச் சான்றுபட நிறுவிய மொழிச் சான்றோர். மலேசியத் தமிழ்ப் பற்றாளர்களின் மனங்களில் நிறைந்தவர். மலேசியாவுக்கு வருகையளித்து தமிழர் நெஞ்சங்களில் தமிழ் உணர்வை செழிக்கச் செய்த பெருமகர். அன்னாரின் மறைவினால் மனம் மிகவும் கலங்கி நிற்கின்றது”  என சுப.நற்குணன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மாந்தனை மாந்தன்
ஆக்குவது திருக்குறள்
மாந்தனைச் சான்றோன்
ஆக்குவது திருக்குறள்
மாந்தனை இறைவன்
ஆக்குவது திருக்குறள்
மாந்தனைப் பெயராக் கடவுட்
பெருநிலையில் ஒன்றச்செய்வதும்
திருக்குறள்

சுப.நற்குணன்

“இந்த வாழ்வியல் மெய்ம்மத்தைத் தமிழர்களுக்கு வழங்கி இறுதி மூச்சு வரையில் திருக்குறள் நெறியிலும் தமிழ் மரபு வழியிலும் தமிழ்த் துறவியாக வாழ்ந்த அன்னாரைப் போற்றி வணங்குவோமாக! அன்னாரின் ஆதன் பெயராக் கடவுட் பெருநிலையில் ஒன்றி அமைதிபெற வேண்டுவோமாக!” என்றும் தனது இரங்கல் செய்தியில் சுப.நற்குணன் இளங்குமரனாருக்கு புகழாரம் சூட்டினார்.

தமிழறிஞர் இரா.இளங்குமரனார்

தமிழறிஞர் புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் 30 ஜனவரி 1930-ஆம் பிறந்தவர். கடந்த ஜூலை 25-ஆம் தேதி மறைந்தார்.

ஐநூறுக்கு மேற்பட்ட நூல்களை வழங்கித் தமிழ் வாழ்வே தம்வாழ்வு என வாழ்ந்தவர் புலவர் இரா.இளங்குமரனார்!

இளங்குமரனாரின் இயற்பெயர் கிருட்டிணன். எட்டாவது குழந்தையென்பதால் வைக்கப்பட்ட பெயர். தனித்தமிழ் இயக்க ஈடுபாடும் மறைமலையடிகளார், ஞா.தேவநேயப்பாவாணர் நூல் தொடர்பும் இவரைப் புலவர் இரா.இளங்குமரனார் ஆக்கின.

பதினாறு வயதில் திருமணம். மனைவியார் பெயர் செல்வம். கலைமணி, இளங்கோ, பாரதி, திலகவதி இவர்களின் மக்கள்.

தொடக்கப் பள்ளி ஆசிரியராகத் தாம் பிறந்த நெல்லை மாவட்ட வாழவந்தாள்புரத்தில் பணியைத் தொடங்கினார். இறுதி நான்காண்டுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பணி ஓய்விற்குப்பின் திருச்சிராப்பள்ளி காவிரியாற்றங்கரையில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துத் தமிழ்நெறி வாழ்வியல் பணிகளை ஒருங்கிணைத்தார்.

தமிழாசிரியர் பணியை 1951இல் கரிவலம்வந்தநல்லூரிலும் பின்பு தளவாய்ப்புரத்திலும் தொடர்ந்த இவர்,  நீண்டகாலம் பணியாற்றியது மதுரை மு.மு.மேல்நிலைப்பள்ளியில்!

தமிழறிஞர் இளங்குமரனார் மலேசிய வருகையின்போது….

இவர் நூல்கள் அனைத்தையும் சென்னைத் தமிழ்மண் பதிப்பகம் பொருள்வாரித் தொகுப்புகளாக வெளியிட்டு, இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.

அறிஞர் சி.இலக்குவனாரோடு இணைந்து தமிழ் வளர்ச்சிக் களம் கண்டவர் இளங்குமரனார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தில் சிறப்புத் தொகுப்பாளராக இவரை இணைத்துக் கொண்டவர் மொழிப்பேரறிஞர் பாவாணர்.

பாவாணர் வரலாறு , பாவாணர் மடல்கள் (இருதொகுதி) , பாவாணர் வேர்ச்சொல்லாய்வுத் தொகுப்பான ‘தேவநேயம்’ (14 தொகுதிகள்) , தமிழ்ச் சொற்களுக்குப் பொருட்காரணம் தரும் அருமுயற்சிப் பெருந்தொகுப்பு ‘செந்தமிழ்ச் சொற்பொருட்களஞ்சியம்’ (பத்துத் தொகுதி) – இப்படித் தனித்தன்மையான நூல்வரிசைகளை வழங்கியுள்ளவர் இரா.இளங்குமரனார்.

‘ஒருநூல் படித்தே அறிஞராகிவிடலாம் எனுமளவிற்குச் சிறந்த நூல்’ என்று இளங்குமரனார் வியந்து பேசும் நூல் “புறத்திரட்டு’.

அழிந்துபோன நூல்களாகக் கருதப்பட்ட ‘காக்கைப்பாடினியம்’, ‘தமிழக ஒழுகு’ முதலிய பலநூல்கள் இவர் பதிப்பால் உயிர்பெற்றுள்ளன.

சுவடிகள் அச்சேறிய வரலாற்றை விளக்கும் இவரின் ‘சுவடிக்கலை’ எனும் பெருநூல் தருவதோ பெருவியப்பு! பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு முதுமுனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

எலும்பு முறிவாலும் நெஞ்சகச் சிக்கலாலும் கோவை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த அறிஞர் இளங்குமரனார், ஓரளவு நலம்பெற்று அண்மையில் மதுரை திரும்பினார்.

மதுரை திருநகர் இராமன்தெரு இல்லத்தில் 25.7.2021 இரவு 7.30-க்குக் காலத்தில் கரைந்துவிட்டார் இளங்குமரனார்.

புலமையால் பொழுதளந்து தமிழுக்கு வளம்சேர்த்த பெருமகனாரின் நினைவிற்கு வலிமை சேர்ப்போம்.