Home நாடு பேராக் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப் பள்ளி புத்தாக்கப் போட்டியில் பங்கெடுக்க பாங்காக் பயணம்

பேராக் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப் பள்ளி புத்தாக்கப் போட்டியில் பங்கெடுக்க பாங்காக் பயணம்

1463
0
SHARE
Ad
அ.சிவநேசனுடன் தலைமையாசிரியர் மனஹரன் மற்றும் ஆசிரியர் பிரபு ஆகியோர்

ஈப்போ – “வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம்” என்னும் முழக்கவரிக்கு ஏற்ப பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் கடந்த ஆண்டில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிறந்துள்ள 2019-ஆம் ஆண்டில் முதலாவது வெற்றியாக பேராக் மாநிலத்தில் உள்ள பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புத்தாக்கப் போட்டியில் கலந்துகொள்ள நாளை வெள்ளிக்கிழமை பிப்ரவரி 1-ஆம் தேதி பாங்காக் நோக்கிப் பயணமாகிறார்கள்.

இப்பள்ளி மாணவர்களான மாணவர் சூரியமூர்த்தி சிவம், தாமரைச்செல்வி கிருஷ்ணன் ஆகிய இருவர் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். ஆசிரியர் திருமதி மு. அனுராதா,திருமதி மு. நிர்மலா தேவி ஆகியோர் உடன் செல்கிறார்கள். இப்போட்டி பிப்ரவரி 2 முதல் 7-ம் தேதி வரை தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் மாநகரில் நடைபெறுகிறது என்னும் தகவலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மனஹரன் தெரிவித்தார்.

புத்தாக்கப் போட்டிக்காக பாங்காக் புறப்படும் மாணவர்களும், ஆசிரியர்களும்…
#TamilSchoolmychoice

இப்போட்டியில் மாணவர்கள் கலந்து கொள்ளும் செலவுகளில் பெரும் பகுதியை பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் ஏற்றுக் கொண்டார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாக மனஹரன் கூறினார்.

இது குறித்துக் கருத்துரைத்த பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன், “அனைத்துலக நிலையில் தொடர்ந்து தடம் பதித்து வரும் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். தொடர்ந்து சிறப்பான முயற்சியையும் முனைப்பையும் வெளிப்படுத்தும் இப்பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்” என்று கூறினார்.

பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன்

பேராக் மாநிலத்தில் பலரும் வியந்து பாராட்டும் வகையில் இந்தப் பள்ளியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என்றும் தெரிவித்த சற்குணன், மாணவர்களை நன்முறையில் உருவாக்கி சாதனைகளில் மிளிரும் இப்பள்ளி இந்தப் பாங்காக் புத்தாக்கப் போட்டியிலும் வெற்றிபெற தமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகப் சுப.சற்குணன் கூறினார்.

கல்வி அமைச்சின் அனுமதியோடு இந்தப் போட்டிக்குப் பயணமாகும் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளியானது கடந்த ஆண்டுகளிலும் பல சாதனைகளைச் செய்துள்ளது.

2016-இல் பாங்காக்கில் நடந்த புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் 2017 இல் இந்தோனேசியா சுராபாயாவில் தங்கப் பதக்கமும் வென்ற பெருமை இப்பள்ளிக்கு உள்ளன. மேலும் 2018 ஆம் ஆண்டில் கங்காரு கணிதப் போட்டி, புத்தாக்கப் போட்டி ஆகியவற்றில் இப்பள்ளி மாணவர்கள் தங்கம் பெற்றதோடு தேசிய நிலையில் இணைப்பாடத்திற்கான சிறந்த பள்ளியாக இரண்டாம் பரிசையும் இப்பள்ளி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சரியான முறையில் மாணவர்களைப் பயிற்றுவித்து ஊக்கமளித்தால் தோட்டத்தில் பிறந்தாலும் அனைத்துலக நிலையில் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்தப் பள்ளி நாட்டுக்கே நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது.