Home நாடு கலப்புத் திருமணங்களால் பாரம்பரியத்தை மறக்காத மலாக்கா செட்டிகள்

கலப்புத் திருமணங்களால் பாரம்பரியத்தை மறக்காத மலாக்கா செட்டிகள்

2266
0
SHARE
Ad

மலாக்கா – ஒவ்வொரு வருடமும் போகி தொடங்கி கன்னிப்பொங்கல் வரை, மலாக்கா ஊடகவியலாளர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது மலாக்கா செட்டி சமூகத்தினரின் பொங்கல் விழா கொண்டாட்டம்தான்.

மலாக்கா செட்டி கிராமத்தில் வாழும் மலாக்கா செட்டி சமூகத்திற்கென்றே உடைமையாகிவிட்ட, தனிச்சிறப்புக் கொண்ட பாரம்பரியச் சடங்குகளுடன் பொங்கல் விழா இந்த ஆண்டும் அக்கிராம மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

பொங்கலுக்கு முதல் நாள் ” பார்ச்சு”

மலாக்கா காஜா பேராங்கில் (காஞ்சிபுரம்) உள்ள அவர்களது கிராமத்தில் கொண்டாடப்பட்ட இப்பொங்கல் விழா, மூதாதையர்கள் வழிப்பாட்டுடன் தொடங்கியது. மலாக்கா செட்டி சமூகம் இந்நாளை ” போகி பார்ச்சு மூதாதையர்கள் பிராத்தனை ” என்று அழைப்பர். இந்தக் கொண்டாட்டத்தில் மலாய், இந்தியர், சீனர் ஆகிய மூவினங்களின் பண்பாட்டுக் கூறுகளைக் கலவையாகக் காணலாம்.

#TamilSchoolmychoice

வாழை இலையில் “நாசி லெமாக்” எனும் மலாய்க்காரப் பண்பாட்டு உணவை படையலாகப் படைக்கும் வழக்கம் வாழையடி வாழையான நடைமுறை என்று கூறுகிறார் கனகலிங்கம் பிள்ளை (வயது 56). இவர் இச்சமூகத்தின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர் ஆவார்.

??

அவருடைய இல்லத்தில் நடத்தப்பட்ட பார்ச்சு முன்னோர்கள் பிராத்தனைக்கு தமிழ் பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாதா பிதா குரு தெய்வம் என்பது இந்துக்களின் வாழ்வியல் கோட்பாடாகும். இறைவனைத் தொழுவதற்கு முன் நம் முன்னோர்களைத் தொழ வேண்டும் என்பதற்காக, பார்ச்சு பிராத்தனை செய்யப்படுகிறது என்றார் பிரார்த்தனையில் கலந்து கொண்ட சிதம்பரம் பிள்ளை.

முன்னோர்களுக்கு வைக்கப்பட்டப் படையலில் சைவ உணவும் அசைவ உணவும் படைக்கப்பட்டிருந்தது. ஒற்றைப்படை எண்ணிக்கையில் இலைகள் போடப்பட்டிருந்தன. பிற உணவு பதார்த்தங்களும், தேநீர், மது போன்ற பானங்களும் படைக்கப்பட்டிருந்தன. இந்நாளில் மூதாதையர்களின் ஆத்மாக்கள் வீட்டிற்குள் வருவதாக மலாக்கா செட்டிகளின் நம்பிக்கையாகும். அதன் படி ஆத்மாக்களுக்குப் பிடித்த உணவு பண்டங்கள் படைக்கப்பட்டிருந்தன.

வீட்டுத் தலைவரான கனகலிங்கம் பிள்ளை, வீடு முழுக்க சாம்பிராணி புகையை ஏவினார். இறந்த முன்னோர்களின் ஆத்மாக்களின் பெயர்களைச் சொல்லி, வீட்டிற்கு வந்து வைத்திருக்கும் படையலை சாப்பிட்டுப் போகச் சொன்னார். அதன் பிறகு நடந்த இலை இழுக்கும் சடங்கு பிராத்தனை முடிந்து விட்டதற்கான அறிகுறியாகும். இறுதியாக குடும்ப உறுப்பினர்கள் விருந்துபசரிப்பில் கலந்து கொண்டனர்.

கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கூ போய் தியோங் அக்கிராமத்தில் அன்று நடந்த கலாச்சார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கிளேபாங் சட்டமன்ற உறுப்பினர் லாவ் சீ லியோங் உடன் கலந்து கொண்டு பாரம்பரியம் நமது அடையாளமாக இருப்பதால் அதனைக் கட்டிக் காப்பது நமது கடமை என்றார் .

பொங்கலோ பொங்கல்

முதல் நாள் பொங்கல் கொண்டாட்டம், அக்கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஸ்ரீ கைலாசர் நாதர் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது.காலை 10 மணியளவில் பூஜை புனஸ்காரங்களுடன் மட்சட்டியில் பொங்கல் வைக்கப்பட்டது.

ஆலய தர்மகர்த்தா நடராஜன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பண்டாரம் பொறுப்பில் பொங்கல் வைக்கப்பட்டு கூடியிருந்த அக்கிராமத்து மக்களுக்குப் பொங்கல் பரிமாறப்பட்டது. 30 குடும்பங்கள் இக்கிராமத்தில் வசித்து வந்தாலும் பொங்கல் வைப்பது என்பது ஆலயத்தில் மட்டுமே. வீட்டில் யாரும் பொங்கல் வைக்கமாட்டார்கள் என்றார் இளைஞர் சிதம்பரம் பிள்ளை (வயது 32).

மாட்டுப் பொங்கல்

மாலை 5 மணிக்கு, அக்கிராமத்தில் உள்ள ஸ்ரீ கைலாசர் நாதர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பொங்கலும், வெண்பொங்கலும் சமைத்து இரு காளை மாடுகளுக்கும் ஊட்டிவிடப்பட்டது. மாடுகளுக்கு பழங்களையும் ஊட்டி மகிழ்ந்தனர்.

மாட்டைக் குளிப்பாட்டியப் பிறகு, கொம்பில் பரிவட்டம் கட்டி , அதன் மேனியில் சால்வா போன்ற வண்ணத் துணி சார்த்தி, மாலையிட்டு திலகமிட்டு , ராஜ மரியாதையுடன் அனைத்துச் சடங்குகளும் செய்யப்பட்டன. பிறகு அக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும் மாடுகளை அழைத்துச் சென்றனர். நிலத்தில் உழைக்கும் வர்க்கமான மாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதை மகாலட்சுமியாக வணங்கி வரவேற்றனர் கிராமத்தார்கள்.

கன்னிப் பொங்கல்

போகியில் தொடங்கி இறுதியாக முடியும் கொண்டாட்டம் கன்னிப் பொங்கல். கன்னிப் பொங்கலை அக்கிராமத்தில் உள்ள மற்றொரு பண்டைய ஆலயமான ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கொண்டாடினர் அக்கிராமத்தில் வசிக்கும் இளம் வஞ்சிகள்.

“பாஜு கேபாயா” (மலாக்கா செட்டிகளின் பாரம்பரிய உடை) உடையில் பொங்கல் வைக்கும் மலாக்கா செட்டிகளின் வாரிசுகளான இளம் பெண்களைப் பார்க்கும் ஒரு கணத்தில் மலாய் பெண்மணிகள் ஒன்று கூடி பொங்கல் வைப்பதுபோல் காட்சியளித்தது.

சட்டிக்குள்ளிருந்து பொங்கி வந்த பொங்கலை வரவேற்க பண்டாரம் சங்கை முசங்கினார். பொங்கல் பொங்கி வரும் காட்சி அனைவரின் மனங்களையும் மகிழ்விக்கிறது. இது புத்தாண்டுக்கான மங்கள வரவேற்பு என்பதால் சங்கு முழங்கப்படுகிறது என்றார் சிதம்பரம்.

“நாங்கள் இந்துக்கள்தான்”

மலாக்கா செட்டி சமூகமும் இந்து பாரம்பரியமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவையாகும். மலாக்கா செட்டி என்று சொன்னாலே அவர் இந்து பரம்பரியத்தினைக் கொண்டவராக இருக்க வேண்டும். இது வாய் மொழி தீர்ப்பு அல்ல. எங்கள் சமூகத்தின் பாரம்பரிய சாசனத்தில் எழுத்துப் பூர்வமாக எழுதப்பட்டுள்ளது என்றார் கனகலிங்கம் பிள்ளை.

உடை,உணவு, மொழி அனைத்திலும் மலாய் பரம்பரியம் கலந்து விட்டபோதிலும் மலாக்கா செட்டி என்பவர்  இந்துவாகத்தான் இருக்க முடியும். இந்துவிலிருந்து விலகுபவர்கள் மலாக்கா செட்டி என்று கூறிக்கொள்ள முடியாது என்றார் கனகலிங்கம்.

நன்றி : செய்தி – படங்கள் : இரா.சரவண தீர்த்தா