செமினி – கேமரன் மலை இடைத் தேர்தல் போராட்டத்தின் தாக்கங்கள் ஓய்ந்துவிட்ட நிலையில், தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி இடையிலான அடுத்த கட்டப் போராட்டத்தின் களமாக செமினி திகழப் போகிறது.
அதற்கானக் காரணம், பெரும்பான்மையான மலாய் வாக்காளர்களைக் கொண்டிருக்கும் தொகுதி இதுவாகும். கேமரன் மலையில் அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்ததால் மலாய்-முஸ்லீம் வாக்குகளை பெரும்பான்மையாக ஈர்த்ததன் மூலமே வெற்றி பெற முடிந்தது என்ற அரசியல் பார்வை நிலவுவதால், 68 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்டிருக்கும் இந்தத் தொகுதியில் எந்த அணிக்கு அவர்களின் வாக்குகளின் கிடைக்கும் என்பதே இந்த இடைத் தேர்தல் போராட்டத்தின் மையப் புள்ளியாக இருக்கும்.
NEGERI | SELANGOR |
---|---|
DUN | N.24 – SEMENYIH |
PARTI MENANG | PKR |
MAJORITI UNDI | 8964 |
NAMA PADA KERTAS UNDI | BIL. UNDI |
DATUK HAJI JOHAN BIN ABD AZIZ (BN) | 14464 |
HAJI MAD SHAHMIOUR MAT KOSIM (PAS) | 6966 |
ARUL (PSM) | 1293 |
BAKHTIAR BIN MOHD NOR (PKR) | 23428 |
சீனர்கள் 17 விழுக்காடும், இந்தியர்கள் 14 விழுக்காடும், வாக்காளர்களாக இருக்கும் இந்தத் தொகுதியில், அவர்களின் பெரும்பான்மை வாக்குகள் நம்பிக்கைக் கூட்டணிக்கே செல்லும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக சிலாங்கூரில் நடைபெற்ற கடந்த கால இடைத் தேர்தல்கள் இதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.
உதாரணமாக, 14-வது பொதுத்தேர்தலில் பெர்சாத்து கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட பக்தியார் பின் முகமட் நோர் 8,964 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். அவரின் அகால மரணத்தைத் தொடர்ந்துதான், செமினி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தத் தொகுதியில் போட்டியிட்ட பாஸ் கட்சி 6,966 வாக்குகள் பெற்றது. இப்போது அம்னோவும், பாஸ் கட்சியும் கைகோர்த்து இருக்கும் நிலையில், அவர்கள் இணைந்து பெறக்கூடிய மொத்த வாக்குகள் 21,430 என்பதாக இருக்கும்.
இந்த கணக்குப்படி பார்த்தால், நம்பிக்கைக் கூட்டணி 14-வது பொதுத் தேர்தலில் பெற்றிருக்கும் பெரும்பான்மை வெறும் 1,998 வாக்குகள் தான்.
ஆக, இந்த முறை அம்னோ-பாஸ் இரு கட்சிகளும் தங்களின் பழைய வாக்கு வங்கியை அப்படியே தக்க வைத்துக் கொண்டு, கூடுதலாக ஆயிரம் முதல் இரண்டாயிரம் வாக்குகளைப் பெற்றாலே போதும்! செமினியைத் தங்களின் கைவசப்படுத்தி, நம்பிக்கைக் கூட்டணிக்கு இன்னொரு அதிர்ச்சி வைத்தியம் தர முடியும்.
செமினி இடைத் தேர்தலில் மேலும் சில சுவாரசியங்களும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன.
கடந்த பொதுத்தேர்தலில் இங்கு போட்டியிட்ட பிஎஸ்எம் கட்சியின் அருட்செல்வன் 1,293 வாக்குகள் பெற்றார். இந்த முறை அருட்செல்வன் மீண்டும் போட்டியிட்டால், அதே அளவு வாக்குகள் பெறுவாரா என்ற கேள்வி புறம் இருக்க,
பிஎஸ்எம் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டால், அவர்களின் வாக்குள் எந்தப் பக்கம் செல்லும், தேசிய முன்னணிக்கா? அல்லது நம்பிக்கைக் கூட்டணிக்கா? என்பது இன்னொரு சுவாரசியக் கேள்வி.
இதற்கிடையில், கெராக்கான் கட்சியும் தங்களின் பலத்தைச் சோதிக்க செமினி இடைத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.
கேமரன் மலை தொகுதி மலேசியாவின் மற்ற தொகுதிகளை விட மாறுபட்டது – 22 விழுக்காடு பூர்வ குடி வாக்காளர்களைக் கொண்டிருக்கும் தொகுதி என்பதால்தான் – தேசிய முன்னணி வெல்ல முடிந்தது எனக் கூறப்பட்டு வரும் அரசியல் பார்வைகளுக்கு இடையில், தங்களின் பலத்தைக் காட்ட தேசிய முன்னணிக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு அற்புதமான வாய்ப்பு செமினி இடைத் தேர்தல்.
சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் செமினி தொகுதியை மட்டும் தேசிய முன்னணி இந்த முறை கைப்பற்றி விட்டால், தேசிய முன்னணி வட்டாரங்களில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும், அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தையே கைப்பற்றி விடுவோம் என்ற அவர்களின் முழக்கமும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிடும்.
நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் பெர்சாத்து கட்சி போட்டியிடுவது உறுதியாகியிருக்கும் நிலையில், தேசிய முன்னணி சார்பில் அம்னோ போட்டியிடும் என்பதும் உறுதியாகியிருக்கிறது.
ஆக, பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேட்புமனுத் தாக்கலின்போது, மற்ற எந்தக் கட்சிகள் போட்டியிடுகின்றன – என்ற விவரங்கள் உறுதிப்படுத்தப்படும்போது, செமினி இடைத் தேர்தலில் சுவாரசியமும், பரபரப்பும், விறுவிறுப்பும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
-இரா.முத்தரசன்