Home Photo News அனைத்துலக மாணவர் முழக்கம் – வரலாறு படைத்தது மலேசியா

அனைத்துலக மாணவர் முழக்கம் – வரலாறு படைத்தது மலேசியா

2982
0
SHARE
Ad

சிங்கப்பூர் – சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் அண்மையில் (1 டிசம்பர் 2018) நடந்த அனைத்துலக மாணவர் முழக்கம் 2018-இல் முதலாவது பரிசு மற்றும் இரண்டாவது பரிசையும் ஒருசேர வென்று மலேசியா வரலாறு படைத்தது.

ஐந்தாம் ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த கமல்ராஜ் குணாளன் முதல் பரிசையும் கிவேசா சுந்தர் இரண்டாம் பரிசையும் வென்றனர்.

முதல் பரிசு பெற்ற கமல்ராஜ் குணாளனுடன் சுப.சற்குணன்

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, ஸ்ரீலங்கா, ஐக்கிய அரபு சிற்றரசு, ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்களாகிய 16 போட்டியாளர்கள் இதில் பங்கெடுத்தனர். அவர்களுள் இறுதிச் சுற்றுக்கு 4 மாணவர்கள் தேர்வுப்பெற்றனர்.

#TamilSchoolmychoice

இறுதிச் சுற்றில் ‘மாணவர்களின் நலனில் அதிகம் அக்கறை காட்டுபவர்கள் பெற்றோர்களா? உடன்பிறந்தவரா? நண்பர்களா? ஆசிரியர்களா?’ எனும் தலைப்பில் மலேசியா, ஸ்ரீலங்கா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த நால்வர் தங்களின் வாதத்திறமையால் அரங்கம் நிறைந்த கூட்டத்தினரைக் கட்டிப்போட்டனர்.

இரண்டாம் பரிசு பெற்ற மகிழம்பூ தமிழ்ப் பள்ளி மாணவி கிவேசா சுந்தருடன் சுப.சற்குணன்

வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்று எல்லாரையும் எதிர்பார்க்கும் அளவுக்குப் போட்டியாளர்கள் மிகவும் சிறந்த முறையில் பேசினார்கள். மலேசியாவைச் சேர்ந்த கமல்ராஜ் மற்றும் கிவேசாவின் அனல்பறக்கும் பேச்சு அரங்கத்தையே அதிர வைத்தது. இவர்களுக்குச் சற்றும் சளைக்காமல் சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவி சுபாசினி பாண்டியன் பலமான போட்டியை வழங்கினார். ஸ்ரீலங்காவைச் சேர்ந்த போட்டியாளர் பிரவின் கணேசமூர்த்தி இலங்கைத் தமிழில் இலாவகமான உடல்மொழியோடு பேசி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார்.

இறுதியில், மலேசியாவைச் சேர்ந்த கேப்பிஸ் தமிழ்ப்பள்ளி மாணவரான கமல்ராஜ் குணாளன் முதல்பரிசுக்கான வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பொழுது பார்வையாளர்களின் கரவொலியில் அரங்கமே அதிர்ந்தது.

இரண்டாம் பரிசு வெற்றியாளராக மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவியாகிய கிவேசா சுந்தர் அறிவிக்கப்பட்டதும் அதே அளவுக்குக் கைதட்டல் அதிர்ந்தது. இந்த இரண்டு மாணவர்களும் பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரைச் சேர்ந்த சேர்ந்த சுபாசினியும் ஸ்ரீலங்கா போட்டியாளர் பிரவினும் மூன்றாவது பரிசைப் பகிர்ந்துகொண்டனர்.

சிங்கப்பூர் புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார். முன்னதாக, சிறப்பு நடுவராகக் கலந்துகொண்ட பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தம்முடைய நகைச்சுவை கலந்த பேச்சினால் ஒரு மணி நேரம் அரங்கத்தை கலகலக்க வைத்தார்.

மலேசியாவின் இந்த வெற்றியைப் பற்றி கூறுகையில், “2018-இல் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த வெற்றிகளையும் சாதனைகளையும் பதிவு செய்துள்ளனர். அனைத்துலக மாணவர் முழக்கத்தில் கிடைத்துள்ள இந்த இரட்டை வெற்றியானது எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகவும் மகுடம் சூட்டுவதாகவும் அமைந்துள்ளது.

வெற்றி பெற்ற பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இருவருக்கும், அவர்களுக்கு ஊக்கமளிப்பதற்காகச் சிங்கப்பூர் வரையில் வந்து ஆதரவு வழங்கிய இரண்டு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மாரியம்மா, பொன்னி இருவருக்கும் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாக, பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் கூறினார்.

பேரா மாநிலக் கல்வித் துணை இயக்குனர் துவான் ஹாஜி முகமட் ரோஸ்லி இரண்டு பள்ளிகளுக்கும் அதன்  மாணவர்களுக்கும் தமது வாழ்த்தினைத் தெரிவித்தார். பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் மாணவர்கள் இருவருக்கும் விரைவில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை பரிசளிக்கிறார்

அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியில் கலந்து கொள்ளத் தேர்வாகியிருந்த மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவி கிவேசா சுந்தருக்கு அண்மையில் நடத்தப்பட்ட சிறப்பு வழியனுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் பொழுது சுப.சற்குணன், “எட்டு ஆண்டுகால மாணவர் முழக்கம் போட்டிக் களத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இந்த ஆண்டில் அனைத்துலக நிலைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பேராக் மாநிலத்தைச் சேர்ந்த மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, மலேசியாவே மகிழும் பூவாக வெற்றியோடு திரும்ப வேண்டும்” என பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் புகழாரம் சூட்டி வாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.