Home இந்தியா மத்திய பிரதேசம் : கமல்நாத் முதல்வர் – ஜோதிர் ஆதித்யா துணை முதல்வர்

மத்திய பிரதேசம் : கமல்நாத் முதல்வர் – ஜோதிர் ஆதித்யா துணை முதல்வர்

1627
0
SHARE
Ad
ஜோதிர்ஆதித்யா சிந்தியா-ராகுல் காந்தி-கமல்நாத்

புதுடில்லி – இந்தியாவின் 5 மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கார், தெலுங்கானா, மிசோராம், ஆகியவற்றில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் இறுதி முடிவுகளைத் தொடர்ந்து  மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் கமல்நாத் முதல்வராகப் பதவியேற்கிறார்.

அதே வேளையில் காங்கிரசில் இளைஞர்களை அதிக அளவில் கொண்டு வரவேண்டும் என  எழுந்திருக்கும் அறைகூவல்களைத் திருப்திப்படுத்தும் வகையில் மத்தியப் பிரதேசத்தின் புதிய எழுச்சி முகமாகப் பார்க்கப்படும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை துணை முதல்வராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகால பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் மத்தியப் பிரதேசத் தலைவர்களாகப் பார்க்கப்படும் மூத்த தலைவர் கமல்நாத் அல்லது ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகிய இருவருமே இணைந்து மாநிலத்தை சிறப்பாக வழிநடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த மாதவராவ் சிந்தியாவின் புதல்வரான, 47 வயதான, ஜோதிர் ஆதித்யா (படம்) இன்றைய காங்கிரசின் இளையத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்த அனுபவமும், நீண்ட கால அரசியல் அனுபவமும் கொண்ட கமல்நாத், நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது அதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்றும், அப்படியே காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு நடந்தால், அதன் பின்னர் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக ஜோதிர் ஆதித்யா நியமிக்கப்படலாம் எனவும் காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 230 தொகுதிகளிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிகள் பெற்றிருக்கும் சட்டமன்றத் தொகுதிகள் பின்வருமாறு:

காங்கிரஸ் – 114

பாஜக – 109

அகிலேஷ் யாதவ்வின் சமஜ்வாடி கட்சி – 1

மாயாவதியின் பகுஜன் சமாஜ் – 2

சுயேச்சைகள் – 4

மொத்தமுள்ள 230 தொகுதிகளில் தனிப் பெரும்பான்மை பெற 115 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் தற்போது 114 தொகுதிகளை மட்டுமே கொண்டிருக்கிறது.

ஒரே தொகுதி குறைவாக இருந்தாலும், மேலே குறிப்பிட்டபடி பாஜக தவிர்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தந்திருக்கின்றன. மாயாவதியும், அகிலேஷ் யாதவ்வும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 121 தொகுதிகளைத் தற்போது காங்கிரஸ் கூட்டணி கொண்டிருக்கிறது. பாஜக 109 தொகுதிகளை மட்டுமே கொண்டிருக்கிறது.

-செல்லியல் தொகுப்பு