Home இந்தியா இந்தியாவின் 5 மாநில சட்டமன்ற முடிவுகள் – பாஜக பின்னடைவு – காங்கிரஸ் முன்னேற்றம்

இந்தியாவின் 5 மாநில சட்டமன்ற முடிவுகள் – பாஜக பின்னடைவு – காங்கிரஸ் முன்னேற்றம்

1207
0
SHARE
Ad

புதுடில்லி – (மலேசிய நேரம் மாலை 5.15 மணி நிலவரம்) இந்தியாவின் 5 மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கார், தெலுங்கானா, மிசோராம், ஆகியவற்றில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

அதே வேளையில் ராகுல் காந்தியின் தலைமைக்கான அங்கீகாரமாகவும், காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.

மாநில ரீதியாக மாநிலங்களின் தற்போதைய முடிவுகள் பின்வருமாறு :

#TamilSchoolmychoice

ராஜஸ்தான் – பாஜகவை வீழ்த்தியது காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தோற்கடிக்கப்படும் என்றும், அதன் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா பதவியை இழப்பார் என்றும் தெரிவித்த கருத்துக் கணிப்புகள் உண்மையாகிவிட்டன.

மொத்தமுள்ள 199 இடங்களில் 104 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி அல்லது முன்னணி வகித்து அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. பாஜக 68 தொகுதிகளை மட்டுமே பெற்றிருக்கிறது.

மத்தியப் பிரதேசம் – பாஜக, காங்கிரஸ் இடையில் இழுபறி

மத்தியப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 230 தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில் 110 தொகுதிகளில் பாஜக முன்னணி வகிக்கிறது. காங்கிரசும் 110 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

மற்ற கட்சிகள் 6 தொகுதிகளைப் பெற்றிருக்கும் வேளையில், மாயாவதியின் பிஎஸ்பி கட்சி 4 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. வழக்கமாக பீகார் மாநிலத்தில் மட்டும் அரசியல் அரங்கில் முன்னணி வகித்து வந்த பிஎஸ்பி கட்சி தற்போது மத்தியப் பிரதேசத்திலும் கால் பதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கத் திருப்பமாகும்.

சட்டீஸ்கார் – காங்கிரஸ் முன்னணி

பாஜக ஆட்சியிலிருந்த சட்டீஸ்கார் மாநிலத்தை பாஜக இழந்திருக்கிறது. இந்த மாநிலத் தேர்தல்களில் சட்டீஸ்கார் உள்ளிட்ட மூன்று மாநிலங்களை (ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்ற இரண்டு) பாஜக இழந்திருக்கிறது.

சட்டீஸ்காரில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் 63 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. பாஜக 19 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது.

எஞ்சிய 8 தொகுதிகளில் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

மிசோராம் –  புதிய கட்சி ஆட்சி அமைக்கிறது

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோராம் 40 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கிறது. இங்கு மிசோ நேஷனல் பிரண்ட் (MIZO National Front) என்ற கட்சி 25 இடங்களைக் கைப்பற்ற பாஜக ஒரே ஒரு தொகுதியில் முதன் முறையாக வெற்றி பெற்றிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி 6 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது.

தெலுங்கானா – சந்திரசேகர் மீண்டும் முதலமைச்சர்

அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்த்தபடி தெலுங்கானாவில் சந்திரசேகர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். மொத்தமுள்ள 119 இடங்களில் சந்திரசேகரின் டிஆர்எஸ் கட்சி இதுவரையில் 85 இடங்களில் முன்னணி வகிக்க காங்கிரஸ் 23 இடங்களில் மட்டுமே முன்னணி வகிக்கிறது.