Home நாடு 10,190 பள்ளிகளில் இணையச் சேவை- கல்வி அமைச்சு

10,190 பள்ளிகளில் இணையச் சேவை- கல்வி அமைச்சு

1310
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டிலுள்ள 10,190 பள்ளிகள் இணைய வசதியைக் கொண்டுள்ளது எனக் கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கையிலிருந்து, 9,786 அல்லது 96 விழுக்காடு பள்ளிகளுக்கு, 1பெஸ்தாரிநெட் (1BestariNet) திட்டத்தின் கீழ் இணையச் சேவை வழங்கப்பட்டிருப்பதாகவும், இதர 404 பள்ளிகளுக்கு மேக்சிஸ், டிஎம் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கியிருப்பதாகவும் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் மேலும் தெரிவித்தார்.

பள்ளிகளில் இணையச் சேவையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பதாக ஒரு சில காரணிகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளதை அமைச்சர் குறிப்பிட்டார். அதாவது, குறிப்பிட்ட ஒரு பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதம், பள்ளியின் அளவு, கணினி ஆய்வகங்களின் எண்ணிக்கை, புவியியல் மற்றும் அரசாங்கத்தின் நிதி நிலைமை போன்ற பல்வேறு காரணிகளை சார்ந்து இந்தச் சேவையானது கொடுக்கப்பட்டு வருவதை அவர் தெளிவுப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

இன்னமும் 1,578 பள்ளிகளில் 1பெஸ்தாரிநெட் திட்டத்தினை தர இயலாமல் போனதை அமைச்சர் ஒப்புக் கொண்டதுடன், இந்தப் பள்ளிகள் கிராமப்புறங்களில் உள்ளதாகவும், தொழில்நுட்பம் இன்னமும் முழுமையாக சென்றடையாதப் பகுதிகளாக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆயினும், அமைச்சின் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் நடத்திய மதிப்பாய்வின் அடிப்படையில் 1பெஸ்தாரிநெட் குறித்த திட்டத்தினை அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.   

இவ்வாறான மறுபரிசீலனைகள் எதிர் காலத்தில் பள்ளிகளில் அகண்ட அலைவரிசையை (Broadband) எப்படி கொண்டு செல்லலாம் எனும் முயற்சிக்கு வித்திடலாம் எனவும் மஸ்லீ நம்பிக்கைத் தெரிவித்தார்.