கோலாலம்பூர் : 28 ஜூலை 2015 – இன்றிலிருந்து பின்னோக்கிப் பார்த்தால் சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக் –அப்போதைய துணைப் பிரதமர் மொகிதின் யாசின் இருவருக்கும் இடையில் அந்த தேதியில் நிகழ்ந்த மோதல்கள் நினைவுக்கு வருகின்றன.
1-எம்டிபி ஊழல் குறித்து மொகிதின் யாசின் நஜிப்புக்கு எதிராகக் கருத்துரைக்க, அவரை துணைப்பிரதமர் பதவியிலிருந்து அந்த ஜூலை 28-ஆம் தேதிதான் அகற்றினார் நஜிப்.
கால ஓட்டத்தில் எத்தனையோ காட்சிகள் மாறிவிட்டன.
அம்னோவிலிருந்து விலகிய மொகிதின் மகாதீருடன் இணைந்து பெர்சாத்து கட்சியைத் தோற்றுவித்தார்.
2020-இல் ஷெராட்டன் நகர்வு மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். பிரதமரானார். எந்த அம்னோவிலிருந்து பிரிந்து வந்தாரோ அதே அம்னோவின் ஆதரவுடன் மொகிதின் பிரதமரானதுதான் அரசியல் திருப்பம்.
அவரை விலக்கிய அதே நஜிப் துன் ரசாக் மொகிதின் பிரதமராவதற்கும் ஆதரவுக் கரம் நீட்டியதுதான் விதியின் இன்னொரு அரசியல் விளையாட்டு!
“மொகிதினின் கடந்தகால வரலாறே, ஏமாற்று வார்த்தைகளும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும் நிறைந்தது. 5-வது பிரதமராக இருந்த துன் அப்துல்லா படாவி, 6-வது பிரதமராக இருந்த நான், 7-வது பிரதமராக இருந்த துன் மகாதீர், என எல்லாப் பிரதமர்களுக்கும் துரோகம் செய்தவர் மொகிதின். நாடாளுமன்றத்தில் பொய் கூறியவர். மாமன்னருக்கும், மலாய் ஆட்சியாளர்களுக்கும் எதிராக தேச நிந்தனை புரிந்தவர். எனவே,இன்று அவர் கூறியிருக்கும் அறிக்கையில் எதை நம்புவது”என இன்று கடுமையாகச் சாடியிருக்கிறார் நஜிப் துன் ரசாக்.
இன்று தொலைக்காட்சியில் நேரலையாக உரையாற்றிய மொகிதின் “ஒரு சிலர் தங்களின் குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுதலையாவதற்காக நான் நீதிமன்ற வழக்குகளில் தலையிட வேண்டும் என்று எனக்கு நெருக்குதல் தந்தார்கள். அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் என்மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள்” எனவும் மொகிதின் தெரிவித்தார்.
எனினும் அவர்கள் யார் என்பதை மொகிதின் பெயர் குறிப்பிடவில்லை. நேற்று அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் மொகிதினுக்கு ஆதரவு தருவதில்லை என அறிவித்தார்கள். அவர்களில் நால்வர் நீதிமன்ற ஊழல் வழக்குகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
நஜிப் துன் ரசாக், சாஹிட் ஹாமிடி, அகமட் மஸ்லான், அசிஸ் அப்துல் ரஹிம் ஆகியோரே அந்த நால்வராவர்.
இதைத் தொடர்ந்து இன்று விடுத்த அறிக்கையில் நஜிப் “மொகிதின் அவருக்கு ஏற்றபடி அவரைக் குளிர்விக்கும்படி நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார். அவரை எதிர்த்து போராடக்கூடாது.இதை நீங்கள் சேவியர் ஜெயகுமார் போன்றவர்களிடமும் மற்ற சிலரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” எனவும் நஜிப் கிண்டலாகக் கூறியுள்ளார்.
நியாயமான நீதி விசாரணை மூலமாகவே குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தன்மீதான களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடியும் என்றும் நஜிப் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.