Home நாடு “நானே இன்னும் பிரதமர்! பெரும்பான்மையை நிரூபிப்பேன்” மொகிதின் பதிலடி

“நானே இன்னும் பிரதமர்! பெரும்பான்மையை நிரூபிப்பேன்” மொகிதின் பதிலடி

1048
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை காலை 11.00 மணிக்கு மாமன்னரை அரண்மனைக்குச் சென்று நேரடியாகச் சந்தித்த பிரதமர் மொகிதின் யாசின், அதன் பிறகு தொலைக்காட்சி வழி உரையாற்றினார்.

அவர் உரையாற்றும்போது துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி உள்ளிட்ட சக அமைச்சர்கள் உடனிருந்தனர். உடனிருந்த 9 அமைச்சர்களில் மஇகா அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், மசீச அமைச்சர் வீ கா சியோங், அஸ்மின் அலி, பாஸ் கட்சியின் அமைச்சர்கள் ஆகியோரும் அடங்குவர்.

அரசாங்கத்தின் திட்டங்கள், மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மொகிதின் அந்த உரையின்போது உறுதியளித்தார்.

#TamilSchoolmychoice

பிரதமராகத் தொடர்வேன் என்றும் பெரும்பான்மையை எதிர்வரும் செப்டம்பரில் நிரூபிப்பேன் என்றும் மொகிதின் சூளுரைத்தார்.

“ஒரு சிலர் தங்களின் குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுதலையாவதற்காக நான் நீதிமன்ற வழக்குகளில் தலையிட வேண்டும் என்று எனக்கு நெருக்குதல் தந்தார்கள். அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் என்மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள்” எனவும் மொகிதின் தெரிவித்தார்.

எனினும் அவர்கள் யார் என்பதை மொகிதின் பெயர் குறிப்பிடவில்லை. நேற்று அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் மொகிதினுக்கு ஆதரவு தருவதில்லை என அறிவித்தார்கள். அவர்களில் நால்வர் நீதிமன்ற ஊழல்  வழக்குகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

நஜிப் துன் ரசாக், சாஹிட் ஹாமிடி, அகமட் மஸ்லான், அசிஸ் அப்துல் ரஹிம் ஆகியோரே அந்த நால்வராவர்.

தான் தேசநிந்தனை குற்றச்சாட்டு புரிந்ததாக எழுந்துள்ள புகார்களையும் மொகிதின் மறுத்தார்.தனது நடவடிக்கைகள் யாவும் மலேசிய அரசியலமைப்பு சட்டத்தையும், மாமன்னரின் தலைமையிலான ஜனநாயக நாடாளுமன்ற அமைப்பு முறையைத் தற்காக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்றும் மொகிதின் தெரிவித்தார்.

நாட்டுக்கும், ஏற்றுக் கொண்ட பதவிக்கும், மாமன்னருக்குமான கடமைகளையும் பொறுப்புகளையும் தொடர்ந்து ஆற்றி வருவேன் என்றும் மொகிதின் கூறினார்.

எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க ஏன் செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டும், இப்போதே நிரூபியுங்கள் என எதிர்க்கட்சிகள் மொகிதினுக்கு சவால் விடுத்துள்ளன.

நேற்று இரவு நடந்த சந்திப்புக் கூட்டங்கள்

மொகிதின் யாசினுக்கான ஆதரவை அம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை அடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை இரவில் அவரின் இல்லத்தில் அவரின் சக அமைச்சர்கள், அவரை ஆதரிக்கும் மற்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கூடி சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இன்று புதன்கிழமை காலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதற்கு முன்பாக மொகிதின் யாசின் மாமன்னரை இன்று காலையில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி மொகிதின் யாசின் காலை 11.00 மணியளவில் அரண்மனை சென்று மாமன்னரை நேரடியாகச் சந்தித்தார்.

நேற்று இரவு 7.00 மணி முதற்கொண்டே முக்கியத் தலைவர்கள் மொகிதினின் புக்கிட் டாமன்சாரா இல்லத்திற்கு வருகை தரத் தொடங்கினர்.

துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி, பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு, பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், ஆகியோருடன் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் மொகிதின் இல்லத்திற்கு வருகை தந்தார்.

பெர்சாத்து உதவித் தலைவர் ரோனால்ட் கியாண்டி, உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின், மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சரும் பெர்சாத்து மகளிர் பிரிவுத் தலைவியுமான ரீனா முகமட் ஹாருண் ஆகியோரும் நேற்று இரவு மொகிதின் இல்லத்திற்கு வந்தவர்களில் அடங்குவர்.

சட்டத் துறைத்தலைவர் இட்ருஸ் ஹாருணும் மொகிதின் இல்லத்தில் நேற்று இரவு காணப்பட்டார்.