கோலாலம்பூர் : கடுமையான அரசியல் நெருக்கடிக்கு பிரதமர் மொகிதின் யாசின் உள்ளாகியிருக்கும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவில் அவரின் இல்லத்தில் அவரின் சக அமைச்சர்கள் குழுமத் தொடங்கியிருக்கின்றனர்.
அவரை ஆதரிக்கும் மற்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் அவரின் இல்லத்தில் தற்போது குவிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இதுவரையில் தேசியக் கூட்டணிக்கான ஆதரவை 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, 11 பேர் பகிரங்கமாகத் தங்களின் ஆதரவை மொகிதினுக்கு எதிராக மீட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மேலும் 3 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் எனவும் ஊடகத் கவல்கள் தெரிவிக்கின்றன,
அந்த மூவரில் ஒருவர் இன்று பதவி விலகிய அமைச்சர் ஷாம்சுல் அனுவார் நசரா என்ற அமைச்சர் என்றும் மற்றொருவர் சபா நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அம்னோ சார்பில் மொகிதின் யாசின் அமைச்சரவையில் எரிசக்தி, இயற்கை வள அமைச்சராகப் பதவி வகித்து வந்த டத்தோஸ்ரீ டாக்டர் ஷாம்சுல் அனுவார் நசரா இன்று தனது பதவியிலிருந்து விலகினார்.
தனது பதவி விலகலை அறிக்கை ஒன்றின் மூலம் ஷாம்சுல் அனுவார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மொகிதின் யாசினுக்கான ஆதரவை மீட்டுக் கொள்வதாக இன்றைய அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் அம்னோவின் அமைச்சர் ஒருவர் பதவி விலகுவது முக்கியமானத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 9 அம்னோ அமைச்சர்கள் மொகினுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என்ற அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இன்று அமைச்சர் ஒருவரின் பதவி விலகல் நிகழ்ந்திருக்கிறது.