கோலாலம்பூர் : நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து கீழ்க்காணும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கான தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்து அதற்கான சத்தியப் பிரமாண ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளனர்.
- நஜிப் அப்துல் ரசாக் (பெக்கான்)
- அகமட் சாஹிட் ஹாமிடி (பாகான் டத்தோ)
- அசாலினா ஒத்மான் சைட் (பெங்கெராங்)
- முகமட் நிசார் சக்காரியா (பாரிட்)
- அசிஸ் அப்துல் ரஹிம் (பாலிங்)
- நோ ஓமார் (தஞ்சோங் காராங்)
- அகமட் நாஸ்லான் இட்ரிஸ் (ஜெரண்டுட்)
- அகமட் ஜாஸ்லான் யாக்கோப் (மாச்சாங்)
- துங்கு ரசாலி ஹம்சா (குவா மூசாங்)
- ரம்லி முகமட் நோர் (கேமரன் ஹைலண்ட்ஸ்)
- அகமட் மஸ்லான் (பொந்தியான்)
இந்தப் பட்டியலில் மேலும் சிலர் இணையக்கூடும் என்றும் அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மொகிதின் நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்துள்ளது தெளிவாகியுள்ளது.
அம்னோ கூட்டத்திற்கு பின்னர் மேலும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொதிகினுக்கான ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளனர் என ஊடகங்கள் தெரிவித்தன.
அந்த மூவரில் ஒருவர் நேற்று அமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஷாம்சுல் அனுவார் நசரா ஆவார். இவர் லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
மற்ற இருவர் யார் என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து மொகிதினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.