கோலாலம்பூர் : மொகிதின் யாசினுக்கான ஆதரவை அம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை அடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை இரவில் அவரின் இல்லத்தில் அவரின் சக அமைச்சர்கள், அவரை ஆதரிக்கும் மற்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கூடி சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து அவர் அடுத்து என்ன முடிவெடுப்பார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை காலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதற்கு முன்பாக மொகிதின் யாசின் மாமன்னரை இன்று காலையில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு நேரடியாகவோ, இயங்கலை வழியாகவோ நடைபெறலாம்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் சில முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நேற்று இரவு 7.00 மணி முதற்கொண்டே முக்கியத் தலைவர்கள் மொகிதினின் புக்கிட் டாமன்சாரா இல்லத்திற்கு வருகை தரத் தொடங்கினர்.
துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி, பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு, பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், ஆகியோருடன் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் மொகிதின் இல்லத்திற்கு வருகை தந்தார்.
பெர்சாத்து உதவித் தலைவர் ரோனால்ட் கியாண்டி, உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின், மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சரும் பெர்சாத்து மகளிர் பிரிவுத் தலைவியுமான ரீனா முகமட் ஹாருண் ஆகியோரும் நேற்று இரவு மொகிதின் இல்லத்திற்கு வந்தவர்களில் அடங்குவர்.
சட்டத் துறைத்தலைவர் இட்ருஸ் ஹாருணும் மொகிதின் இல்லத்தில் நேற்று இரவு காணப்பட்டார்.