கோலாலம்பூர் : அன்வார் இப்ராகிமுக்கு இன்று 74-வது பிறந்த நாள். 1947-இல் பிறந்தவர்.
இன்று தனது 74-வது பிறந்த நாளை அவர் மகிழ்வுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாடு முழுவதிலும் உள்ள அவரின் கட்சியினரிடையேயும், ஆதரவாளர்களிடத்திலும் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பு, பிறந்த நாள் பரிசாக அவருக்கு இந்த முறையாவது பிரதமர் பதவி கிட்டுமா என்பதுதான்!
1970-ஆம் ஆண்டுகளில் மலாயாப் பல்கலைக் கழக மாணவராக அவர் நடத்திய போராட்டங்கள் முதல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் போராட்டங்கள் வரை,
சமூகம், மலாய் மொழி, கல்வி, அரசியல், இஸ்லாமிய மதம் என அவரின் போராட்டத் தடங்கள் மலேசியாவில் பதியாத களங்களே இல்லை எனத் துணிந்து கூறலாம்.
ஒரு போராளி எப்படி இருப்பார் – எப்படி இருக்க வேண்டும் – என எப்படி உலகம் முழுவதும் தமிழர்கள் பிரபாகரனைக் கொண்டாடுகிறார்களோ – அதைப் போல நமது நாட்டின் மலாய் அரசியல் களத்தின் போராளி எப்படி இருக்க வேண்டும் என்பதன், உண்மையான-முழு- பிம்பம் அன்வார் இப்ராகிம்தான்!
பதவியிலிருந்து தூக்கி எறிந்தாலும், இரண்டு முறை சிறைக்குள் அனுப்பினாலும், அவரின் போராட்டங்களின் கூர்மை முனைகள் இதுவரை மழுங்கியதில்லை. தொய்வடைந்ததுமில்லை.
மாணவர் தலைவராகப் போராட்டம் – பின்னர் மலாய் மொழிக்காகப் போராட்டம் – அபிம் இயக்கத்தின் வழி இளைஞர்களுக்காக- இஸ்லாம் மதத்துக்கானப் போராட்டம் – சிறையிலிருந்தாலும், சிறையிலிருந்து மீண்டாலும் சோர்வடையாத அரசியல் போராட்டம் – என இந்த வயதிலும் துவண்டு விடாத போராட்ட நாயகனாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டது – அந்த போர்க்களச் சூழலிலேயே தொடர்ந்து பயணம் செய்வது – இவைதான் அன்வாரின் சிறப்புக் குணங்கள்!
அன்வார் அடுத்த பிரதமராவாரா? என்ற கேள்விகளுக்கிடையில்,
மொகிதினுக்கு ஆதரவில்லை என மாமன்னருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பி வரும் கடிதங்கள் சிலவற்றில் நாங்கள் அன்வாரை ஆதரிக்கவில்லை என்ற உறுதிப்பாடும் காணப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அத்தகைய எதிர்ப்புக் கணைகளுக்கு மத்தியில்தான் அன்வார் இந்த அளவுக்கு அசுரத்தனமான அரசியல் வளர்ச்சியைக் கண்டார் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. எனவே, வியூக ரீதியாக இதனை எப்படி எதிர்கொள்வது என்பதையும் அவர் அறிவார்.
இன்றைய நிலையில் தனிப் பெரும்பான்மை கொண்ட கூட்டணியான நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் அவர்தான்!
அடுத்த பிரதமராக ஆவதற்கு மாமன்னர் அவரை அழைப்பாரா – நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் காட்ட அவரால் முடியுமா? என்பதெல்லாம் ஒருபுறமிருக்க –
இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஜனநாயக அரசியல் மாற்றங்கள் – சீர்திருத்தங்கள் – பல இன அரசியல் கட்சி சிந்தனை மாற்றம் – போன்ற முக்கிய அம்சங்களைப் பின்னோக்கிப் பார்த்தால் அதில் எங்காவது ஓரிடத்தில் – அன்வாரின் போராட்ட ரேகைகளின் முத்திரை பதிந்திருப்பதைக் காண முடியும்.
அந்த வகையில் நமது நாட்டில் அரசியல் மாற்றத்திற்கான முக்கியக் காரணிகளில் ஒருவராகத் தொடர்ந்து திகழ்ந்து வரும் அன்வாருக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!