கோலாலம்பூர் : மொகிதின் யாசினின் பதவி விலகல் கடிதத்தை மாமன்னர் இன்று ஏற்றுக் கொண்டதை அடுத்து, மொகிதினின் ஒட்டு மொத்த அமைச்சரவையும் தற்போது பதவி விலகியுள்ளது.
“மலேசியாவை இனி கடவுள் காப்பாற்றட்டும்” என பதவி விலகியிருக்கும் அமைச்சர்களில் ஒருவரான கைரி ஜமாலுடின் பதிவிட்டிருக்கிறார்.
மொகிதின் யாசின் இன்று காலையில் புத்ரா ஜெயாவிலுள்ள புத்ரா பெர்டானா வளாகத்தில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து மாமன்னரிடம் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்க கோலாலம்பூரிலுள்ள மாமன்னரின் அரண்மனை நோக்கி நண்பகல் 12.00 மணியளவில் புத்ரா ஜெயாவிலிருந்து மொகிதின் புறப்பட்டார்.
அவர் பிற்பகல் 12.30 மணியளவில் மாமன்னரைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்புக்குப் பின்னர் அவரின் பதவி விலகலை மாமன்னர் ஏற்றுக் கொண்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.ய
அதைத் தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு நேரலையாக தொலைக்காட்சியில் மொகிதின் யாசின் உரையாற்றுவார்.