Home நாடு 9-வது பிரதமர் : 4 மணிக்கு மாறப் போவது யாருடைய தலையெழுத்து?

9-வது பிரதமர் : 4 மணிக்கு மாறப் போவது யாருடைய தலையெழுத்து?

1114
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 18) பிற்பகல் 4.00 மணிக்கு, நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவரின் தலையெழுத்து மாறப் போகிறது.

யார் அவர்?

இப்போதிருக்கும் சூழ்நிலையில் நாட்டின் 9-வது பிரதமர் யார் என்ற போட்டியில் களத்தில் முன்னணியில் இருப்பவர்கள் அன்வார் இப்ராகிமும், இஸ்மாயில் சாப்ரியும்தான்!

#TamilSchoolmychoice

இவர்களில் ஒருவரின் தலையெழுத்து இன்று முதல் மாறப்போகிறது.

இன்று பிற்பகல் 4 மணிக்குள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாரைப் பிரதமராக ஆதரிக்கிறார்கள் என்பதை மாமன்னருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களின் தேர்வை இன்று மாலை 4.00-க்குள் தெரிவிக்க வேண்டுமென அவைத் தலைவர் அசார் அசிசான் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமரைத் தேர்வு செய்வதில் மாமன்னரின் வித்தியாச அணுகுமுறை

அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் இந்த முறை மாமன்னர் சில வித்தியாசமான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அடுத்த பிரதமராக யாருக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதை சத்திய பிரமாணக் கடிதம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 16) அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பல்வேறு விவரங்களும் தெரிவிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்தக் கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் அரண்மனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாமன்னரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரைத் தாங்கள் பிரதமராகத் தேர்வு செய்தோம் என்ற விவரத்தை வெளியிடக் கூடாது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 20-ஆம் தேதி மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அடுத்த பிரதமர் யார் என்ற அறிவிப்பை அரண்மனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.