Home கலை உலகம் நடிகர் ஶ்ரீகாந்த் காலமானார்

நடிகர் ஶ்ரீகாந்த் காலமானார்

953
0
SHARE
Ad

சென்னை : தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஶ்ரீகாந்த் தனது 83-வது வயதில் சென்னையில் காலமானார்.

1965 ஆம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். பல புதுமுகங்கள் அறிமுகம் கண்ட ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில்தான் ஜெயலலிதாவும் முதன் முதலில் அறிமுகமானார்.

அந்தப் படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் மூர்த்தி, நிர்மலா ஆகியோர் இன்று வரை “வெண்ணிற ஆடை” என்ற அடைமொழியுடன்தான் பெயர் குறிப்பிடப்படுகின்றனர்.

#TamilSchoolmychoice

வெண்ணிற ஆடை படத்தில் அமைதியும், பொறுமையும் கொண்ட டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார் ஶ்ரீகாந்த்.

தங்கப்பதக்கம் படத்தில் மகனாக தந்தை சிவாஜி கணேசனுக்கு இணையாக அவர் வழங்கிய நடிப்பும் இன்றுவரை திரையுலகில் பேசப்படுகிறது

மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் இரங்கல்

ஶ்ரீகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

“பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். இயக்குநர் ஸ்ரீதர் அவர்களால் திரையுலகில் அறிமுகமாகி பைரவி, தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்கமுடியாத பல திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டுமின்றி அனைத்து வகையான பாத்திரங்களிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞராக அவர் திகழ்ந்துள்ளார். எங்கள் இல்லத்தின் அருகே வசித்தவர் என்பதால் தனிப்பட்ட முறையிலும் அவரை நான் நன்கு அறிவேன். பலமுறை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளேன். திரு. ஸ்ரீகாந்த் அவர்களை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ்த் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தும் ஶ்ரீகாந்த் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal