Home கலை உலகம் லால்குடி ஜெயராமன் மறைவு- ஜெயலலிதா இரங்கல்

லால்குடி ஜெயராமன் மறைவு- ஜெயலலிதா இரங்கல்

500
0
SHARE
Ad

lalgudiசென்னை, ஏப்ரல் 23- -பிரபல வயலின் மேதை லால்குடி ஜி.ஜெயராமன் சென்னையில் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 82.

இவர் சிறந்த கர்நாடக இசை அறிஞர் ஆவார். மேலும் இவர் வயலின் கலைஞர், பாடகர் சிறந்த இசையமப்பாளரும் ஆவார்.

இவர் பல்வேறு விருதுகள் வாங்கியுள்ளார். இந்திய அரசாங்கம், பத்ம ஸ்ரீ (1972), பத்ம பூசன் (2001) சிறந்த இசை இயக்கத்திற்கான சிங்காரம் என்னும் தமிழ் படத்துக்கு 2006 ஆம் ஆண்டு தேசிய விருதும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு 1979-ல் மாநில வித்வான் விருது வழங்கியுள்ளது. இவரது மறைவு குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் செய்தி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அவர் கூறியதாவது:-

இசைத் துறையில் எட்ட முடியாத சாதனைகளை தொட்ட பிரபல வயலின் மேதையும், சிறந்த ஓவியரும், இசையமைப்பாளருமான திரு.லால்குடி ஜெயராமன் அவர்கள் நேற்று  உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

இசைக் குடும்பத்தில் பிறந்து, மனதைக் கரைக்கும் உன்னத இசைக்கு சொந்தக்காரரான திரு.லால்குடி ஜெயராமன் அவர்கள் இசையின் பல பரிமாணங்களை இந்த உலகிற்கு உணர்த்தியவர். இசை மாமேதைகளான திரு.ஜி.என்.பி., திரு.செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர், திரு.அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், திரு.மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் கச்சேரிகளை தனது வயலினால் அழகுபடுத்தியவர் திரு.லால்குடி ஜெயராமன் அவர்கள். தனிக்கச்சேரிகள் நடத்தி இசை ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். தன்னுடைய வயலின் மூலம் வார்த்தைகளை ஒலிக்கச் செய்தவர்.

கடினமான ராகங்களான ‘நீலாம்பரி’, ‘தேவகாந்தாரி’ ஆகிய இரண்டு ராகங்களில் வர்ணம் அமைத்து இசை மேதைகளை இன்ப அதிர்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர். ‘சங்கீத நாடக அகடமி’, ‘சங்கீத சூடாமணி’, மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’, ‘பத்மபூஷண்’ உள்பட பல விருதுகளைப் பெற்றவர் வயலின் மாமேதை திரு.லால்குடி ஜெயராமன் அவர்கள். இவர் இசை அமைத்த ‘சிங்காரம்’ என்ற திரைப்படம், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இவருக்கு பெற்றுத் தந்தது. இவர் இசையமைத்து அரங்கேற்றிய ‘ஜெயஜெய தேவி’ நாட்டிய நாடகம் பல்வேறு நாடுகளில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

திரு.லால்குடி ஜெயராமன் அவர்களின் மறைவு இசைத் துறைக்கு, குறிப்பாக கர்நாடக இசைத் துறைக்கு மிகப் பெரிய பேரிழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

திரு.லால்குடி ஜெயராமன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.