Home நாடு மலாக்கா : கிளெபாங் சட்டமன்றம் – துணையமைச்சர், சட்டமன்றத்திற்குப் போட்டியிட முடியுமா?

மலாக்கா : கிளெபாங் சட்டமன்றம் – துணையமைச்சர், சட்டமன்றத்திற்குப் போட்டியிட முடியுமா?

1026
0
SHARE
Ad
லிம் பான் ஹோங்

மலாக்கா : விரைவில் நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் நடப்பு துணையமைச்சர் ஒருவர் போட்டியிடுவதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

கிளெபாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் மசீசவைச் சேர்ந்த லிம் பான் ஹோங். இவர் செனட்டராகப் பதவி வகிப்பதோடு, அனைத்துலக வாணிப தொழில்துறை துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் துணையமைச்சராக இருப்பதால், அரசாங்க சலுகைகளையும், வசதிகளையும் மலாக்கா தேர்தலில் பயன்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதால் அவர் துணையமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என மற்ற கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

#TamilSchoolmychoice

எனினும், லிம் பான் ஹோங்கின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு விட்டது. எனவே, அவரின் வேட்புமனு குறித்தோ, அவர் போட்டியிட முடியுமா என்பது குறித்தோ இனியும் சர்ச்சைகளை எழுப்பக்கூடாது என மசீச சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவர் போட்டியிடுவதால் சட்டங்கள் எதுவும் மீறப்படவில்லை என்றும் மசீச தலைவர்கள் அவருக்கு ஆதரவாக குறிப்பிட்டுள்ளனர்.

துணையமைச்சராக இருக்கும் லிம் பான் ஹோங் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென பிகேஆர் கட்சியின் தலைமைப் பொருளாளர் லீ சியான் சுங் இன்று  நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.

ஏற்கனவே, சபா மாநிலத்தில் சட்டமன்றத்தேர்தல்கள் நடைபெற்றபோது ஒரு துணையமைச்சராக இருந்த ஜெப்ரி கித்திங்கான் சட்டமன்றத்திற்கும் போட்டியிட்டார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஜெப்ரி தனது துணையமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர் அவர் சபா மாநில துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

லிம் பான் ஹோங் போட்டியிடுவது குறித்து புகார்கள் இருந்தால் பிகேஆர் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டுமே தவிர மாறாக அறிக்கைகள் விடுத்துக் கொண்டும், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திக் கொண்டும் இருக்கக் கூடாது எனவும் மசீச தலைவர்கள் சாடியுள்ளனர்.

ஒரு வழக்கறிஞருமான லிம் பான் ஹோங் போட்டியிடும் கிளபாங் சட்டமன்றத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

நடப்பு சட்டமன்ற உறுப்பினரான கியூ தெக் மீண்டும் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளராக இங்கு போட்டியிடுகிறார். பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் பாஸ் கட்சியைச் சேர்ந்த பாக்ரி ஜமாலுடின் போட்டியிடுகிறார்.