Home நாடு சிங்கப்பூர் தன் உறுதிப்பாட்டை நிலைநிறுத்த கருணை, இரக்கத்துடன் செயல்பட வேண்டும்

சிங்கப்பூர் தன் உறுதிப்பாட்டை நிலைநிறுத்த கருணை, இரக்கத்துடன் செயல்பட வேண்டும்

507
0
SHARE
Ad

பினாங்கு மாநிலத்தின் 2-வது துணை முதலமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி அவர்களின் அறிக்கை

கோவிட்-19 தொற்று என்று கண்டறியப்பட்டதன் அடிப்படையில்  மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதாக நான் அறிகிறேன்.

இந்த மேல்முறையீடு ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 9) பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. நாகேந்திரன் தூக்கிலிடப்பட நிர்ணயிக்கப்பட்டிருந்த தேதியான நவம்பர் 10-ஆம் தேதி அவர் தூக்கிலிடப்படவில்லை.

மேல்முறையீட்டு நீதிமன்றம் நாகேந்திரனின் வழக்கை எப்போது விசாரிக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை, அவர் கோவிட் தொற்றிலிருந்து எவ்வளவு விரைவாக குணமடைகிறார் என்பதைப் பொறுத்தே வழக்கு விசாரணையின் தொடர்ச்சியும் அமையும்.

#TamilSchoolmychoice

தூக்குத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டாலும், நாகேந்திரனின் கதி என்ன என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இரக்கத்திற்கும் கருணைக்கும் உலகளாவிய முறையீடுகள் இருந்தபோதிலும், சிங்கப்பூர் நாகேந்திரனை தூக்கிலிட முன்வரக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

நாகேந்திரன் அறிவுத்திறன் குன்றியவர் என்ற வாதத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றம், நியாயம் காணுமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.

நாகேந்திரனுக்கு ஆங்கிலம் புரியாது என்பதும், அவனது இக்கட்டான நிலையை முழுவதுமாகப் புரிந்து கொண்டானா என்பது தெரியவில்லை என்பதும் அவருடைய வழக்கறிஞர் எம்.ரவியின் மூலம் எனக்குத் தெரிய வருகிறது.

நாகேந்திரனுக்கு அவரது கதி என்ன என்பதை விளக்க தமிழ் மொழி பெயர்ப்பாளர்களை எங்களுக்கு வழங்குமாறு ரவி நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.

இரவி, நாகேந்திரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக சிங்கப்பூர் அரசின் வலிமைக்கு எதிராகப் போராடும் அர்ப்பணிப்புள்ள மனித உரிமை வழக்கறிஞராவார்.

அவர் நாகேந்திரன்தான் குற்றவாளி என்று கூறவில்லை, ஆனால் நாகேந்திரனின் மன நிலையின் அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

சர்வதேச சட்டத்தின்படி, மனநலம் குன்றியவர் என கண்டறியப்பட்டால், அவரை தூக்கிலிட முடியாது.
நாகேந்திரன் மனநலம் குன்றியவர் என்ற சட்ட வகைக்குள் வருகிறார்.

சிங்கப்பூரில் மனித உரிமை வழக்கறிஞராக இருப்பது எளிதல்ல, குறிப்பாக அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக வாதாடுவது.

ரவி மீது வழக்கு தண்டனைச் செலவை விதிக்க அரசுத் தரப்பு வழிகளை ஆராய்ந்து வருவதாக எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது சிங்கப்பூர் அரசின் ஒரு தெளிவான மிரட்டல் நடவடிக்கை என்று அவர் நினைக்கிறார்.

சிங்கப்பூர், நவீன உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகளுடன் உலகத் தரம் வாய்ந்த நகர நாடாகும். அரசாங்கம் மிக அதீத கட்டுபாட்டுடன் செயல்படுகிறது.

ஆனால், சிங்கப்பூரில் பரிவு, கருணை மற்றும் மனித உரிமைகள் மீதான மரியாதை குறைவாகவே உள்ளன.
பல நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன. ஏனென்றால் அது குற்றங்களுக்கு எதிரான ஒரு தடுப்பாக செயல்படவில்லை அல்லது மறுவாழ்வு வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை.

இந்த வழக்கு நாகேந்திரனைப் பற்றியது மட்டும் அல்ல, மாறாக மரணதண்டனைக்காக – தங்கள் முறைக்காக காத்திருக்கும் மற்றவர்களைப் பற்றியதும் ஆகும்.

சிங்கப்பூர் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையாகச் செயல்படுகிறது எனக் குற்றம் சாட்டவில்லை, ஆனால் ஏழைகள் மற்றும் துரதிர்ஷ்டவசமானவர்களுக்கான இரக்கம் மற்றும் புரிதலுடன் உறுதியை சமநிலைப்படுத்த வேண்டும் என்றே கூறுகிறோம்.

எப்போதும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறைந்த சமூக-பொருளாதாரப் பின்னணியில் இருப்பவர்கள். போதைப் பொருள் கடத்தலில் உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக இருப்பதால் மரண தண்டனையால் அதனை ஒழிக்க முடியாது.

ஏழை மற்றும் துரதிர்ஷ்டவசமான குடும்பங்களைச் சேர்ந்த இடைத்தரகர்கள் சிக்கி தங்கள் உயிரைப் பலி கொடுக்கிறார்கள்.

மரண தண்டனை ஒழிப்பு என்பது நாகேந்திரன் வழக்கிலிருந்து ஆரம்பிக்கலாம்.

இத்தகைய மனிதாபிமானச் செயலின் மூலம் சிங்கப்பூர் பெறக்கூடிய நல்லெண்ணத்தையும் மரியாதையையும் கற்பனை செய்து பாருங்கள்.

இந்த சிறிய சிவப்புப் புள்ளி மனித உரிமைகள்
நடைமுறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதல்ல.