Home நாடு மலாக்கா: நட்சத்திர போராட்டத் தொகுதிகள் # 1: லெண்டு

மலாக்கா: நட்சத்திர போராட்டத் தொகுதிகள் # 1: லெண்டு

684
0
SHARE
Ad
சுலைமான் முகமட் அலி

(பரபரப்பான இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது மலாக்கா மாநில சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல். அரசியல் பார்வையாளர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் சில முக்கிய சட்டமன்றத் தொகுதிகளையும் அவை ஏன் பரபரப்பான, விறுவிறுப்பான நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளாக மாறியிருக்கின்றன என்பதையும் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

மேற்கு மலேசியாவைப் பொறுத்தவரையில் பொதுவாக எல்லா மாநிலங்களிலும் சட்டமன்றத்திற்கான தேர்தல் பொதுத்தேர்தலுடன் ஒருங்கிணைந்தே நடத்தப்படும்.
அபூர்வமாக ஓரிரு சமயங்களில் கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் தனியாக நடத்தப்பட்டிருக்கின்றன. பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மேற்கு மலேசியாவின் ஒரு மாநில சட்டமன்றத் தேர்தல் அரசியல் காரணங்களால் தனித்து நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகள் பரபரப்பான நட்சத்திரத் தொகுதிகளாக கடுமையான போர்க்களத் தொகுதிகளாக மாறியுள்ளன. அத்தகைய தொகுதிகள் சிலவற்றைக் கண்ணோட்டமிடுவோம்.

#TamilSchoolmychoice

முதலாவதாக லெண்டு சட்டமன்றத் தொகுதி.

மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அதன் மாநில முதலமைச்சராக இருந்தவர் அம்னோவின் சுலைமான் முகமட் அலி. சட்டமன்றக் கலைப்புக்குப் பின்னர் மலாக்காவின் காபந்து முதலமைச்சராகத் தொடர்பவரும் அவர்தான்.

சுலைமான் முகமட் அலி போட்டியிடும் தொகுதி லெண்டு. சுலைமான் முகமட் அலி தேசிய முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தத் தொகுதி மேலும் கூடுதலான கவனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த லெண்டு தொகுதியில் மும்முனைப்போட்டி ஏற்பட்டிருக்கிறது.10,561 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் அம்னோ – தேசிய முன்னணி சார்பாக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி.

2018 தேர்தல் முடிவுகள் என்ன?

கடந்த 2018 தேர்தலில் சுலைமான் முகமட் அலி இதே லெண்டு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது வெறும் 627 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவர் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் பெர்சாத்து கட்சியும் பாஸ் கட்சியும் போட்டியிட்டன.

3,389 வாக்குகளைப் பெற்று பெர்சாத்து கட்சி இந்தத் தொகுதியில் தோல்வி அடைந்தது. 1,163 வாக்குகளைப் பெற்று பாஸ் கட்சியும் இங்கு தோல்வி அடைந்தது. எனினும் பாஸ் கட்சியினால் பிளவுபட்ட மலாய் வாக்குகளால் சுலைமான் முகமட் அலி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த முறையும் அதேபோன்ற மும்முனைப் போட்டியை அவர் எதிர்நோக்குகிறார். அவரை எதிர்த்து பெர்சாத்து கட்சியின் சார்பில் தேசியக் கூட்டணி வேட்பாளராக அப்துல்லா மஹாடி போட்டியிடுகின்றார். பிகேஆர் கட்சியின் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக முகமட் ஹஸ்ரி இப்ராஹிம் போட்டியிடுகிறார்.

78 விழுக்காடு மலாய் வாக்குகளைக் கொண்டது லெண்டு தொகுதி. 17 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 5 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் ஒரு விழுக்காடு மற்ற வாக்காளர்களையும் லெண்டு கொண்டிருக்கிறது.

மலாய் வாக்குகள் அதிகமாக இருந்தாலும் அந்த வாக்குகள் மூன்று அணிகளாக பிளவுபடுவதால் சீன – இந்திய வாக்காளர்கள் யார் பக்கம் சாய்வார்கள் என்பதைப் பொறுத்தே சுலைமான் முகமட் அலியின் வெற்றி வாய்ப்பு இருக்கும்.

தேசிய முன்னணி முதலமைச்சராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால் சுலைமான் முகமட் அலி இந்தத் தொகுதியில் வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அந்தச் சுமையோடு அவர் இந்தத் தொகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

தேசிய முன்னணி மலாக்காவில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றால் – லெண்டு தொகுதியிலும் சுலைமான் முகமட் அலி மீண்டும் வெற்றி பெற்றால் – அவர் அடுத்த மலாக்கா முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகி விடும்.

ஆனால் ஒருவேளை மலாக்காவில் தேசிய முன்னணி வெற்றிபெற்று சுலைமான் முகமட் அலி தோல்வி அடைந்தால் அதன் விளைவாக அடுத்த முதலமைச்சர் யார் என்பதற்கான போட்டிகளும் மோதல்களும் உருவாகும்.

எனவே லெண்டு தொகுதியில் முகமட் அலி வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கடுமையாகப் பாடுபட்டு வருகிறார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியும் தேசிய முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளரைத் தோற்கடித்துக் காட்டுவோம் என மும்முரமாகக் களத்தில் இறங்கி பாடுபட்டு வருகின்றது.

அந்த வகையில் அனைவரின் பார்வைகளும் பதிந்திருக்கும் நட்சத்திரப் போராட்டத் தொகுதி – லெண்டு!

-இரா.முத்தரசன்