சென்னை : தமிழ்நாட்டில் புதுக்கோட்டை அருகே ஆடு திருடியவர்களைப் பிடிக்க விரட்டிச் சென்றபோது திருச்சி நாவல்பட்டு காவல் நிலைய துணை ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பூமிநாதன் (படம்) நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 21) கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
அவரின் நல்லுடல் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 22) 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன. சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை இன்று தனிப்படைக் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தஞ்சை, புதுக்கோட்டையை சேர்ந்த அவர்கள் 10 வயது, 17 வயது, 19 வயது வயது கொண்டவர்களாக இருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரித்ததில் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தமிழ் சினிமாவில் வருவதைப் போல் உண்மையில் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு சந்தைவெளியைச் சேர்ந்த எஸ்.பூமிநாதன் (வயது 51), திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
பூமிநாதனும் தலைமைக் காவலர் சித்திரவேலும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 21) அதிகாலை 2 மணி அளவில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் ஆடு ஒன்றையும் வைத்திருந்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்களை நிறுத்தி விசாரிக்க பூமிநாதன் முயன்றார். ஆனால், அவர்கள் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர்.
இதையடுத்து பூமிநாதனும், சித்திரவேலும் தங்களின் இருசக்கர வாகனத்தில் தனித்தனியாக துரத்திச் சென்றனர். போலீஸார் துரத்துவதைப் பார்த்ததும் 4 பேரும் வெவ்வேறு சாலையில் தப்பிச் சென்றனர். ஆடு கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை போலீஸார் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.
சித்திரவேல் தனது வாகனத்தை வேகமாக ஓட்ட முடியாததால் பின்தங்கினார். புதுக்கோட்டைதேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் தார் சாலையில் இருந்த ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் நிரம்பி இருந்ததால், அதற்குமேல் செல்ல முடியாமல் இருவரும் பூமிநாதனிடம் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மடக்கிப் பிடித்த பூமிநாதன், சித்திரவேலை தொடர்பு கொண்டு உடனே அங்கு வருமாறு கூறியுள்ளார். இருட்டில் வழிமாறிச் சென்ற சித்திரவேல், சேறும் சகதியுமான சாலையில் சிக்கிக் கொண்டார்.
இதையடுத்து, தன்னுடன் பணிபுரியும் மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளரான கீரனூர் கணேஷ் நகரில் வசிக்கும் சேகருக்கு தகவல் தெரிவித்த பூமிநாதன், அவரை அங்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு வந்த சேகர், தலையில் வெட்டுக்காயங்களுடன் பூமிநாதன் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பூமிநாதனிடம் பிடிபட்டவர்கள் ஆடு திருடர்கள் என்பதும், அவர்கள்தான் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
இதற்கிடையில் பூமிநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டார்.
அவரது குடும்பத்தினருக்கு, அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.