Home நாடு மூடா கட்சியால் பாதிக்கப்படப்போவது அம்னோவா? பக்காத்தானா?

மூடா கட்சியால் பாதிக்கப்படப்போவது அம்னோவா? பக்காத்தானா?

481
0
SHARE
Ad

கோலாலம்பூர் : புதிதாக உதயமாகியிருக்கிறது மூடா கட்சி. முன்னாள் அமைச்சர் சைட் சாதிக் தலைமையில் இயங்கும் இந்தக் கட்சி எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் இளம் வாக்காளர்களிடையே முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

18 வயது இளைஞர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்த கட்சி என்ற முறையில் இளம் தலைமுறையினரிடையே பெரும் செல்வாக்கை இந்தக் கட்சி பெற்றிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால் மூடா, மிரட்டலாக விளங்கப் போவது அம்னோவுக்கா? அல்லது சைட் சாதிக் ஏற்கனவே சார்ந்திருந்த பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கா? என்ற சுவாரசியமான கேள்வி  எழுந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

அம்னோ-தேசிய முன்னணியினர் மூடா கட்சியைச் சாதாரணமாகக் கருதிவிட வேண்டாம், அந்தக் கட்சியால் அபாயம் இருக்கிறது என எச்சரித்திருக்கிறார் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின்.

அம்னோவில் நீண்ட காலமாக இயங்கி வந்திருப்பவர், அம்னோவின் இளைஞர் பகுதியின் முன்னாள் தலைவர் என்பதால் கைரியின் எச்சரிக்கைகளை சாதாரணமாகப் புறக்கணித்துவிட முடியாது.

வாக்கு வங்கியில் இணையப் போகும் 18-வயது இளைஞர்கள் மூடா பக்கமே சாய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக இளைஞர்கள் இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் அம்னோ-தேசிய முன்னணி அரசியலால் சலிப்படைந்து விட்டார்கள்.

மாற்று அரசியலைக் கொண்டுவரும், சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் என பக்காத்தான் ஹாரப்பான்- நம்பிக்கைக் கூட்டணியும் இளைஞர்களின் நம்பிக்கைகளைச் சிதைத்துவிட்டது.

எனவே, புதிய தோற்றம் கண்டிருக்கும், புதிய சித்தாந்தங்களை முன்வைக்கும் மூடா கட்சியே இளைஞர்களின் தேர்வாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சைட் சாதிக் முன்னால் இருக்கும் தலையாயப் பிரச்சனை இப்போதைக்கு மக்களின் ஆதரவோ, இளைஞர்களின் ஆதரவோ அல்ல!

மாறாக, தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் வழக்கிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பதுதான்!

-இரா.முத்தரசன்