(ஜூன் 23 முதல் மலேசியத் திரையரங்குகளில் வெளியாகிறது, மலேசியத் திரைப்படம்
மூன்றாம் அதிகாரம். அந்தத் திரைப்படம் குறித்த விமர்சனத்தை வழங்குகிறார் ந.பச்சை பாலன்)
மறவன், ஆசான் ஆகிய திரைப்படங்களையும் அசுர வேட்டை, இறைவி திருமகள் காடு ஆகிய தொடர் நாடகங்களையும் வழங்கிய எஸ்.டி. புவனேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மூன்றாம் அதிகாரம்’ ஜூன் 23ஆம் முதல் மலேசியத் திரையரங்குகளில் வெளியீடு கண்டுள்ளது
தமிழகத்தில் திரைப்பட நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட இவரின் படைப்புகளில் தனித்தன்மைகளைக் காணமுடியும். நடிப்பு, இசை, பாடல்கள், திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தி அனைவரையும் ஈர்க்கும் படமாக உருவாக்குவதில் கடும் உழைப்பைத் தருபவர் எஸ்டி புவனேந்திரன். அந்த எதிர்பார்ப்பை நிறைவுசெய்யும் வகையில் மலேசிய ரசிகர்களின் மனங்களை ஆட்சி செய்ய மூன்றாம் அதிகாரத்தோடு வந்துள்ளார் எஸ்டி புவனேந்திரன்.

இளம்பெண் ஒருவர் காணாமல் போகிறார். அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர். அவர்களின் சந்தேக வளையத்துக்குள் வந்து போகும் பலரைச் சுற்றிக் கதை நகர்கிறது. தடயவியல் நிபுணர் ஒருவரின் வருகையும் அவரின் செயல்பாடும் கதையை வேறு திசையில் நகர்த்துகிறது. படத்தின் தொடக்கத்தில் பற்றிக்கொள்ளும் பரபரப்பு கடைசிக் காட்சிவரை நீடித்து நம்மைப் படத்தோடு ஒன்றிவிடச் செய்கிறது.
படத்தில் ஒவ்வொருவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். ஹரிதாஸ், ஜிப்ராயில், கே.எஸ்.மணியம், கவிதா தியாகராஜன், சுரீதா, சரேஸ், ஹம்சினி, குபேன் என நடிகர்கள் தேர்வும் அவர்களின் நடிப்பும் படத்தின் வெற்றிக்குப் பங்காற்றியுள்ளன. குறிப்பாக, ஹரிதாஸ், ஜிப்ராயில் ஆகிய இருவரும் தங்கள் அசாத்திய நடிப்பால் ஈர்க்கின்றனர்.
கதைக்களத்திற்கு ஏற்ப பாலன்ராஜ், ஜெகதீஸ் ஆகியோரின் விறுவிறுப்பான பின்னணி இசையும் காதுக்கினிய பாடல்களும் கவர்கின்றன. திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு ஆகிய ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தியுள்ளார் இயக்குநர் எஸ்டி. புவனேந்திரன்.
படத்தில் கதைக்கு ஏற்ற அறிவியல் சார்ந்த தரவுகளை நன்கு ஆராய்ந்து இணைத்து நம்பகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளனர். திகில், மர்மம், காதல், சோகம், நகைச்சுவை எனச் சுற்றிச் சுழலும் கதையில் இழையோடும் அப்பா – மகள் பாசம் நம் மனத்தை நெகிழ வைக்கிறது. தகவல் ஊடகங்களில் கசியும் நம் தனிப்பட்ட தரவுகளால் ஏற்படும் விளைவுகளைச் சொல்லி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் முடிவு என்ன என்பதை ரசிகர்களே ஊகிக்கும்படி அமைத்திருப்பதால் படம் முடிந்தும் ரசிகர்களுக்கு அது பேசுபொருளாக இருப்பதை மறுக்க முடியாது. போலீஸ் துப்புத் துலக்கும் விதமும் அதற்குச் சவால் விடும் வில்லன்களின் வியூகமும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
படத்தைப் பார்த்து முடிக்கும்பொழுது வாழை இலையில் பரிமாறப்பட்ட அறுசுவை உணவை ருசித்துச் சாப்பிட்ட உணர்வே மேலோங்குகிறது. அந்த அளவுக்கு மலேசிய ரசிகர்களின் உணர்வுக்கும் சிந்தனைக்கும் முழுமையான விருந்து பரிமாறியுள்ளார் இயக்குநர் எஸ்டி.புவனேந்திரன்.
ஆசான், மறவன் திரைப்படங்களைப் போலவே மூன்றாம் அதிகாரமும் வெற்றிப்படப் பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் திரையரங்குகளில் குடும்பத்துடன் காண வேண்டிய படம் இது.