Home இந்தியா பாஜக கூட்டணி சார்பில் இந்தியத் துணை அதிபர் வேட்பாளர் ஜக்தீப் தாங்கர்

பாஜக கூட்டணி சார்பில் இந்தியத் துணை அதிபர் வேட்பாளர் ஜக்தீப் தாங்கர்

621
0
SHARE
Ad

புதுடில்லி : அடுத்த இந்திய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திங்கட்கிழமை (ஜூலை 18-ஆம் தேதி) நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் இந்தியாவின் அடுத்த துணை அதிபராக நடப்பு மேற்கு வங்காள ஆளுநர் ஜக்தீப் தாங்கரை தேர்வு செய்வதாக பாஜக அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழு டெல்லியில் கூடி ஆலோசித்த பிறகு, பாஜக தலைவர் ஜேபி நட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“கிசான் புத்ரா (விவசாயியின் மகன்) ஜக்தீப் தாங்கரை பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்துள்ளோம்” என்று நட்டா கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

#TamilSchoolmychoice

ஜக்தீப் தங்கர் இன்று தலைநகர் புதுடில்லியில் இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியை பாராளுமன்ற குழு கூட்டத்திற்கு பிரதமர் புறப்படுவதற்கு முன்பு சந்தித்தார். ஜக்தீப் தங்கர் நேற்று மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

மத்தியப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட பிற மாநில ஆளுநர்களும் பிரதமர் மோடியை சந்தித்தனர். பதவி விலகும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கும் விருந்தில் கலந்துகொள்வதற்காக அவர்கள் தலைநகர் புதுடில்லியில் இருக்கின்றனர்.

நாடாளுமன்றக் குழு என்னும் பார்லிமென்டரி போர்டு என்பது பிஜேபியின் உச்ச கட்ட அமைப்பாகும். அதன் உறுப்பினர்களில் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, கட்சித் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பலர் உள்ளனர்.