Home நாடு 11.11.2011 : டான்ஸ்ரீ சுப்ரா, உடல் நலப் போராட்டத்தைத் தொடங்கிய சோக நாளில்…

11.11.2011 : டான்ஸ்ரீ சுப்ரா, உடல் நலப் போராட்டத்தைத் தொடங்கிய சோக நாளில்…

1043
0
SHARE
Ad

(கடந்த 5 ஜூலை 2022-ஆம் நாள் மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியம் நீண்டகால உடல் நலக் குறைவினால் காலமானார். அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 நவம்பர் 2011-ஆம் நாள் சம்பவங்களையும் அவர் குறித்த நினைவலைகளையும் பகிர்கிறார் இரா.முத்தரசன்)

2011-ஆம் ஆண்டு. நவம்பர் 12-ஆம் தேதி சனிக்கிழமை.

காலை 9.00 மணியளவில் எனது நெருங்கிய, நீண்ட கால  நண்பர்களில் ஒருவரான ஆர்.பாலகிருஷ்ணனிடமிருந்து (ஷெல் பாலா என்று நாங்கள் அழைப்போம்) ஓர்  அலைபேசி அழைப்பு.

#TamilSchoolmychoice

“முத்தரசு, கேள்விப்பட்டிங்களா? போஸைப் பத்தி!”

“இல்லையே பாலா! என்ன ஆச்சு” என்றேன் எந்தவிதப் பதற்றமுமுமில்லாமல்!

போஸ் என்று நாங்கள் கூறிக் கொள்வது டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியம் அவர்களைத்தான் (இனி சுருக்கமாக சுப்ரா என்றே அழைப்போம்). வெவ்வேறு காலகட்டங்களில் அவரின் கீழ் நேரடியாக செயலாளர்களாக வேலை பார்த்தவர்கள் நாங்கள். அவரை எங்களின் அரசியல் தலைவராகவும், அரசியல் குருவாகவும் ஏற்றுக் கொண்டிருந்தோம். எனவே, எப்போதும் “போஸ்” (boss) என்றுதான் எங்களுக்குள் அழைத்துக் கொள்வோம்.

சுப்ரா குறித்து எந்தவிதப் பதற்றமுமில்லாமல் நான் கேட்டதற்குக் காரணம் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் (புதன்கிழமை நவம்பர் 9) அவரைச் சந்தித்திருந்தேன். வழக்கறிஞர் டத்தோ முருகேசனின் (முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர்) தந்தையின் இறுதிச் சடங்குக்கு சுப்ராவும் நானும் ஒன்றாக ஒரே காரில் கிள்ளான் சென்று கலந்து கொண்டு திரும்பியிருந்தோம்.

அப்போது சுப்ரா திடகாத்திரமாக எந்தவித உடல் நலக் குறைவும் இன்றி நன்றாக இருந்தார்.

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தம்பதியர் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தபோது…

கைப்பேசியில் ஷெல் பாலா தொடர்ந்தார்: “காலைல மணி (சுப்ராவின் இளைய சகோதரர் நடராஜனை “மணி” என்றுதான் அழைப்போம்) போன்ல கூப்பிட்டு அழுகிறான். போஸ் நேத்து (வெள்ளிக்கிழமை 11 நவம்பர் 2011) உடம்புக்கு முடியாம பிஜே அசுந்தா ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டாங்களாம். இன்னும் சீரியசா இருக்கிறாராம். இப்ப காலைல பந்தாய் மெடிக்கல் மருத்துவமனைக்குக் கொண்டு போயிட்டாங்களாம்”

நான் திடுக்கிட்டேன்.

“சரி பாலா! நான் கிளம்பி வரேன். உடனடியாகப் போய்ப் பார்ப்போம்”

அடுத்த கொஞ்ச நேரத்தில் நான் பங்சாரிலுள்ள பந்தாய் மருத்துவமனை சென்றடைந்தேன்.

சுப்ராவின் குடும்பத்தினரும், நண்பர்களுமாக அப்போதே கணிசமான கூட்டம் கூடியிருந்தது. குடும்பத்தினரிடம் நிலைமையைக் கேட்டறிந்தோம்.

மருத்துவமனையில் இருந்த சுப்ராவின் அப்போதைய கார் ஓட்டுநர் கூறினார் : “முதல் நாள் (நவம்பர் 11) இரவு விருந்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். திடீரென தாங்க முடியாத தலைவலியால் காரிலேயே அவதிப்பட்டார். தலைவலிக்கிறது என்றார். உடனே அசுந்தா மருத்துவமனைக்குப் போ என்றார். போகும் வழியிலேயே அவரது மனைவிக்குப் போன் போட்டு, தலையில் கடுமையாக வலிக்கிறது. நான் இப்போது அசுந்தா போகிறேன் என்று கூறினார். அதன் பின்னர் அவரை அசுந்தா மருத்துவமனை வாசலில் கொண்டுவந்து விட்டேன். உள்ளே கொண்டு செல்லப்பட்டபோதே அவர் சுயநினைவிழந்து விட்டார்”

அதன்பின்னர், அவரது இரத்த அழுத்தம் அதிக அளவில் இருக்கிறது என்றுகூறி, அன்றிரவே அவரது இரத்த அழுத்தத்தைக் குறைக்க அசுந்தா மருத்துவமனை மருத்துவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். இருப்பினும் மறுநாள் காலைவரை அவருக்கு நினைவு திரும்பவில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, குடும்பத்தினர், காலை ஏழு மணிக்கே அவரை பந்தாய் மெடிக்கல் மருத்துவமனைக்கு அடுத்த கட்ட சிகிச்சைக்காகக் கொண்டுவந்து விட்டனர்.

பந்தாய் மருத்துவமனையில் தொடங்கிய சிகிச்சைகள்…

பந்தாய் மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஒன்றில் ஏற்பட்ட அடைப்பினால் அவர் பாதிப்படைந்துள்ளார் என்றனர். நியுமரிசம் (neumerism) என்பது அந்த பிரச்சனைக்கான மருத்துவப் பெயர் என்றார்கள்.

அவருக்கு தற்போது (நவம்பர் 12-ஆம் தேதியன்று காலையில்) “கோய்லிங்” (coiling)  என்ற சிகிச்சை முறை வழங்கப்படும் என்றும் அது வெற்றியளிக்காவிட்டால் பிற்பகலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

மூளையில் இரத்த அடைப்பு என்பதால் எடுத்த எடுப்பிலேயே அறுவைச் சிகிச்சை மேற்கொள்வது மருத்துவர்களின் நடைமுறை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. கோய்லிங் எனப்படும் சிகிச்சை முறை செய்யப்பட்டு அது வெற்றியடையாவிட்டால்தான் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் விளக்கியிருந்தனர்.

டான்ஸ்ரீ சுப்ரா குடும்பத்தினர்

சுப்ராவுக்கு நிறைய மருத்துவ நண்பர்கள் இருந்தார்கள். அவரது மனைவி புவான்ஸ்ரீ தீனா சுப்பிரமணியம் அவர்களில் சிலரைத் தொடர்பு கொண்டார். சுப்ராவுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கான துறையில் சிறந்த மருத்துவ வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர். ஆலோசனைகள் வழங்கினர்.

எங்களில் பலர் கண்ணீரோடும், கவலையோடும் மருத்துவமனையில் காத்திருந்தோம். இடையிடையே வெளியே சென்று எங்களின் சொந்த வேலைகளைப் பார்த்து விட்டு பிறகு மீண்டும் மருத்துவமனை திரும்பினோம். சுப்ரா நலம் பெற வேண்டிக் கொண்டு காத்திருந்தோம்.

அன்று (12 நவம்பர்) பிற்பகலில் அவருக்கு வழங்கப்பட்ட “கோய்லிங்” சிகிச்சை முறை பலனளிக்கவில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இனி அறுவைச் சிகிச்சைதான் ஒரே வழி என உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இரவெல்லாம் அறுவைச் சிகிச்சை தொடர்ந்தது.

அடுத்த சில நாட்களுக்கு அவரைப் பார்க்க முடியாது, அறுவைச் சிகிச்சையின் பலன் என்ன என்பது போகப் போகத்தான் தெரியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். குடும்பத்தினர் மட்டும் உள்ளே சென்று அவ்வப்போது அவரைப் பார்த்து வந்தனர்.

நானும் நண்பர்களும் தினமும் மருத்துவமனை சென்று சிறிது நேரம் காத்திருப்போம். சுப்ராவின் நலம் விசாரிக்க பல தலைவர்களும், நண்பர்களும் மருத்துவமனைக்கு வரத் தொடங்கியிருந்தனர்.

சில நாட்களுக்குப் பின்னர் ஒருநாள் சுப்ராவின் துணைவியார் தீனா, மருத்துவமனையில் என்னை மட்டும் சுப்ராவின் அறைக்குள் தனியாக அழைத்துச் சென்றார்.

எந்தவித சலனமுமின்றி கண்களை மூடி மயக்கத்தில் இருந்தார் சுப்ரா. தலைமுழுக்கக் கட்டுகள். எப்படியும் நாளடைவில் குணமாகிவிடுவார் என்ற நம்பிக்கையோடு அனைவரும் காத்திருந்தோம்.

சிகிச்சைகளுக்குப் பின்னர் படுக்கையிலேயே முடங்கி விட்ட சுப்ரா…

பந்தாய் மருத்துவமனையில் சுப்ராவுக்கு மேற்கொள்ளப்பட்ட அந்த அறுவைச் சிகிச்சை அவரது உயிரைக் காப்பாற்றியது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு, அடுத்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவரைப் படுக்கையில் கிடத்தி விட்டது. பேசும் சக்தியை இழந்தவரானார். பக்கவாதத்தால் சில உடல்பாக செயல்பாடுகள் முடங்கி விட்டன. சில உணர்ச்சிகளை அவர் இழந்து விட்டதும் தெரிந்தது.

அடுத்து வந்த ஆண்டுகளில் அவரைப் பல முறை வீட்டில் சென்று பார்த்திருக்கிறேன். கைகொடுப்பேன். எனது பெயரைச் சொல்லி வந்திருப்பதாகக் கூறுவேன். அவரிடம் சில அசைவுகள் தென்படும்.

அவருக்கு நினைவுகள் இருக்கின்றனவா, தன்முன்னால் இருப்பவர்களை அவருக்கு அடையாளம் தெரிகிறதா, என்றெல்லாம் அவரைப் பார்க்கும்போதெல்லாம் கவலையுடன் யோசித்திருக்கிறேன். அவரைப் பார்த்துவிட்டு வந்தால் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு மனம் சற்று கிலேசமடைந்து அவர் நினைவாகவே இருக்கும். அவருடன் பழகிய தருணங்கள் நினைவில் நிழலாடி, சோகத்தை ஏற்படுத்தும்.

அரசியல் களங்களில் எத்தனையோ போராட்டங்களை துணிச்சலுடன் சந்தித்த சுப்ரா, அந்த 11 நவம்பர் 2011-ஆம் நாள் முதற்கொண்டு தனது உடல்நலக் குறைகளோடு படுக்கையில் இருந்தபடி நடத்திய அவரின் வாழ்க்கையின் இறுதிக் கட்டப் போராட்டம் கடந்த ஜூலை 5-ஆம் தேதி (2022) இரவு 7.58-மணிக்கு ஒரு முடிவுக்கு வந்தது. அந்த நாளில், அந்த நேரத்தில்தான் – அவர் மரணமடைந்தார்.

இந்த இடைப்பட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் 24 மணிநேர தாதிமைக் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

டான்ஸ்ரீ சுப்ராவுடன் அவரின் துணைவியார் தீனா சுப்ரமணியம்

அவரின் குடும்பத்தினர் சிறந்த முறையில் அவரைக் கவனித்துக் கொண்டனர். குறிப்பாக அவரின் துணைவியார் தீனா இந்த 10 ஆண்டுகளில் எங்கேயும் அவரை விட்டுச் செல்லாது கூடவே இருந்து அவரின் எல்லாத் தேவைகளையும் கவனித்துக் கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறைகூட தீனா வெளிநாடு சென்றதில்லை. வீட்டில் இருந்தபோதும் சுப்ராவுக்கு சிறு பிரச்சனை என்றாலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முறையான அதிநவீன மருத்துவ வசதி, இயல்பாகவே அவருக்குள் இருக்கும் எதையும் எதிர்த்துப் போராடும் குணாதிசயம் – ஆயிரக்கணக்கான உயிர் நண்பர்கள், தீவிர ஆதரவாளர்களின் பிரார்த்தனைகள் – இப்படி எல்லாம் சேர்ந்து இருந்தாலும் -இத்தனை ஆண்டுகள் அவர் உயிருடன் நீடித்திருந்தது கூட ஒரு மருத்துவ அதிசயம்தான் என்கிறார்கள் சில மருத்துவர்கள்.

சுப்ரா அறியாமலேயே அவரைக் கடந்து சென்ற அரசியல் நிகழ்வுகள்

ஒவ்வொரு முறையும் சுப்ராவைப் பார்க்கும்போதும் எங்களைப்போன்ற உற்ற நண்பர்களுக்கும், அவருடன் நீண்ட காலம் நெருங்கிப் பழகியவர்களுக்கும் ஏற்படும் மனவலி சொல்லில் வடிக்க முடியாதது.

அவரை எப்போதாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழும்போதெல்லாம் அவரைச் சென்று பார்த்து வருவேன். ஆனால், அவரைப் பார்த்த பின் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு என மனநிலைமை முற்றிலும் மாறியிருக்கும். அவரைப் பார்த்த பாதிப்பிலிருந்து மீள எனக்குச் சில நாட்கள் ஆகும்.

மனித வாழ்க்கை இதுதானா? என்பதில் தொடங்கி, அவருக்கு ஏன் இத்தகைய நிலைமை என சிந்தித்திருக்கிறேன்.

அவர் வாழ்க்கையின் பெரும்பான்மையானப் பக்கங்களை எனக்குத் தெரிந்தவரையில் புரட்டிப் பார்த்தால், யாருக்கும் துரோகம் செய்ய நினைக்காத, யாருக்கும் கெடுதல் செய்ய நினைக்காதவர் அவர். பிறருக்கு அவர் செய்த நற்பணிகளும், அரசியல் மூலமாக அவர் ஆற்றிய சமூகப் பணிகளும் எண்ணிலடங்காதவை. இருந்தும் அவருக்கு ஏன் இந்த நிலைமை? இதுதான் விதியா?

என்றாவது ஒருநாள் எழுந்து பேசுவாரா? அப்படிப் பேசினால், என்ன பேசுவார்? ஒருநாள் அவர் நல்ல நினைவோடு எழுந்துவிட்டால் கடந்து விட்ட ஆண்டுகளில், நடந்து, முடிந்து போன சம்பவங்களில் எதை வரிசைப் படுத்தி அவருக்கு முதலிலிருந்து சொல்வது?

தான் களமாடிய, காதலித்த – மலேசிய அரசியல் களத்தில் – மஇகாவில் – நிகழ்ந்திருக்கும் நம்ப முடியாத மாற்றங்களை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்? மஇகாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட தலைமைத்துவ மாற்றங்களை எப்படி  அவர் எதிர்கொண்டிருப்பார்?

அதைவிட முக்கியமாக, அந்த தலைமைத்துவப் போராட்டங்களிலும், மாற்றங்களிலும் அவரின் பங்கெடுப்பும், அரசியல் முடிவுகளும் என்னவாக இருந்திருக்கும்? அவரே அந்தத் தலைமைத்துவ மாற்றமாக இருந்திருக்க முடியுமா?

துன் மகாதீர், ஆளும் தேசிய முன்னணிக்கு எதிரான மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணியைக் கட்டமைத்தபோது, அதில் சுப்ரா இணைந்திருப்பாரா?

சில காலகட்டங்களில் தேசிய முன்னணி தலைமைத்துவம் தன்னைப் புறக்கணித்தபோதும், அவர் பின்வருமாறு தன் ஆதரவாளர்களிடம் கூறி, தன் நிலைப்பாட்டை எடுத்தார்:

“என் அரசியல் நண்பர்களும் எனக்கு ஆதரவு தந்தவர்களும் தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளில் நிறைய அளவில் இருக்கிறார்கள். அவர்களை விட்டு விட்டு என்னால் தேசிய முன்னணிக்கு வெளியே போக முடியாது. எனது தலைமைத்துவத்தின்மீது நம்பிக்கை வைத்து, இன்னும் மஇகாவிலும், இந்திய சமுதாயத்திலும், இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட்டு விட்டு மஇகாவிலிருந்து வரமாட்டேன். என் அரசியல் போராட்டத்தையும் நிறுத்திக் கொள்ள மாட்டேன்”

அப்படிப்பட்ட சிந்தனைகளைக் கொண்ட அவர், 2018-இல் பொதுத் தேர்தலின்போது தன் சிந்தனைப் போக்கை மாற்றிக் கொண்டிருப்பாரா? துன் மகாதீரே, அம்னோவிலிருந்து வெளியேறி, தேசிய முன்னணிக்கு எதிராக, அதுவும் சிறையிலிருக்கும் அன்வார் இப்ராகிமோடு கைகோர்த்து, பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து தேசிய முன்னணியை வீழ்த்தினார் என்பதைப் பார்த்திருந்தால் சுப்ரா என்ன முடிவெடுத்திருப்பார்? மீண்டும் மத்திய அரசாங்க ஆட்சியை அமைத்தபோது, மகாதீர் சுப்ராவையும் தன்னுடன் இணைந்து கொள்ளும்படி அழைத்திருப்பாரா?

இப்படி அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கு விடைதராமலேயே தன் வாழ்நாளை நிறைவு செய்தார் சுப்ரா.

எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் – என்னை வீழ்த்த எத்தனை வியூகங்கள் வகுக்கப்பட்டாலும் – இறுதிவரை மஇகாவிலேயே இருந்துதான் போராடுவேன் – நானாக கட்சியை விட்டு வெளியேற மாட்டேன் – என்ற கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்த சுப்ராவின் இறுதிப் பயணமும் மஇகா கொடி போர்த்தப்பட்ட நிலையில்தான் முடிவுக்கு வந்தது.

– இரா.முத்தரசன்