Home நாடு நஜிப் மேல்முறையீடு : வழக்கறிஞர் சமர்ப்பிக்காவிட்டால் என்ன நடக்கும்?

நஜிப் மேல்முறையீடு : வழக்கறிஞர் சமர்ப்பிக்காவிட்டால் என்ன நடக்கும்?

616
0
SHARE
Ad

(செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 22-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது நஜிப் மீதான எஸ்ஆர்சி ஊழல் வழக்கின் மேல்முறையீடு. நஜிப் தன் வழக்கறிஞர்களை மாற்றிய விதம் குறித்து மலேசிய வழக்கறிஞர் மன்றமும் தன் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரங்கள் குறித்த தன் பார்வையை வழங்குகிறார் இரா.முத்தரசன்)

ஓர் உதாரண சம்பவம்.

கைலாசம் என்பவர் வங்கியில் ஒரு லட்சம் ரிங்கிட் கடன் வாங்கிவிட்டு அதை திரும்ப செலுத்த முடியாமல் வங்கி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து விட்டது. அந்த சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள  வழக்கறிஞர் ஒருவரை நியமித்தார் கைலாசம்.

#TamilSchoolmychoice

நீதிமன்றம் வழக்கின் விசாரணைக்கு தேதி குறித்தது.  அந்த வழக்கில் அவர் தோற்றுவிட்டால் வங்கிக் கடனை செலுத்த அவர் கைவசம் இப்போதைக்குப் பணம் இல்லை. அதனால் திவாலாக்கப்படுவார்.

ஆனால், இன்னும் சில மாதங்களில் ஒரு கணிசமான தொகை வர்த்தக ஒப்பந்தத்தால் அவருக்குக் கிடைத்துவிடும் வாய்ப்புகள் அதிகம் இருந்தது.

அந்தப் பணம் கிடைத்தால் வங்கிக் கடனையும் அவரால் அடைத்துவிட முடியும். எனவே, அந்த வழக்கின் விசாரணையை  இன்னும் சில மாதங்கள் ஒத்திவைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

என்ன செய்யலாம்  என வழக்கறிஞருடன் கலந்தாலோசிக்கிறார். வழக்கறிஞர் ஒரு வியூகத்தைக் கூறுகிறார்.

“வெறுமனே நீதிமன்றம் நிர்ணயித்த விசாரணை தேதியை மாற்றிக் கேட்டால் ஒருவேளை, அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். எனவே,  நீங்கள் விசாரணைத் தேதி நெருங்கும் வேளையில் வழக்கறிஞர் நிறுவனத்தை மாற்றி விடுங்கள்.  புதிய வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் புதிய வழக்கறிஞர் விசாரணை அன்று நீதிபதி முன்னால் சென்று, நான் புதிய வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருப்பதால் இந்த ஆவணங்களையெல்லாம் சரி பார்க்க எனக்கு கால அவகாசம் தேவை. எனவே, விசாரணை தேதியை ஒத்தி வையுங்கள்” என நீதிபதியிடம் மனு ஒன்றைச் செய்வார். பொதுவாக நீதிமன்றங்கள் இதுபோன்ற மனுக்களை நியாயமானக் காரணமாகக் கருதி கூறி ஏற்றுக் கொள்ளும். வழக்கையும் ஒத்தி வைக்கும்”

கைலாசமும் அப்படியே செய்தார். நீதிபதியும் புதிய வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைத்தார்.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் எஸ்ஆர்எஸ் இண்டர்நேஷனல் மேல்முறையீட்டு வழக்கில் இதே போன்றுதான் செயல்பட்டார் என நாம் கூற வரவில்லை. ஆனால்,  நீதிமன்ற விவகாரங்களை அறிந்தவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இதுபோன்ற ஒத்திவைப்புகள் சாதாரணம்-வழக்கமான ஒன்று என்பது தெரியும்.

பின் ஏன் நஜிப் வழக்கில் மட்டும் இத்தனை சர்ச்சைகள் என சிலர் கேட்கலாம்.

நஜிப்பின் கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு

நாம் மேற்கூறிய உதாரணம் பொதுவாக சிவில் என்னும் பொதுச்சட்ட வழக்குகளுக்கும், கிரிமினல் என்னும் குற்றவியல் வழக்குகளுக்கும் பொருந்தும். ஆனால்,  மேல்முறையீடு என்று வரும்போது, மேல்முறையீட்டு நீதிமன்றமும் (கோர்ட் ஆஃப் அப்பீல்) கூட்டரசு நீதிமன்றமும்  (பெடரல் கோர்ட்) மிகவும்  கடுமையான கால அட்டவணையை பின்பற்றுகின்றன.

ஏனெனில், மேல்முறையீட்டுக்காக  பல வழக்குகள் மாதக் கணக்கில், ஏன் ஆண்டுக் கணக்கில்கூட காத்திருக்கின்றன.

எனவே,  மேல்முறையீடுகளில்  தாமதங்கள் கூடாது. காரணம் நீதிமன்றத்தின் நேரமும்  நீதிபதிகளில்  நேரமும்  வீணாக்கப்படுகிறது. குறிப்பாக குற்றவியல் வழக்குகளில் ஒரு தனி மனிதனின்  வாழ்க்கையும் சுதந்திரமும் பாதிக்கப்படுகிறது.   வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டை தாமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் தீவிரமாகப் பின்பற்றுகின்றன.

தெங்கு மைமுன் துவான் மாட்

அதிலும் குறிப்பாக, கூட்டரசு நீதிமன்றம், நாட்டின் உச்சநீதிமன்றம். அதிலும் நஜிப் வழக்கை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தலைமை நீதிபதி தெங்கு மைமுன் தலைமையில் செயல்படுகிறது.

எனவே,  பொதுவாக மேல்முறையீடுகளைக் குறிப்பிடப்பட்ட தேதிகளில் நடத்தவேண்டும் என்பது அவர்களால் எப்போதும் விதிக்கப்படும் நிபந்தனையாகும்.

நஜிப் வழக்கைப் பொறுத்தவரையில்  முன்னாள் பிரதமரின் ஊழல் வழக்கு என்பதாலும் நாடே எதிர்பார்க்கும்  வழக்கு என்பதாலும்  அந்த வழக்கை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டிய நெருக்கடியில் கூட்டரசு நீதிமன்றம் இருக்கிறது.

நஜிப் விரும்பியபடி வழக்கை அவர்கள் ஒத்தி வைத்தால், ஆளும் அம்னோவின் – தேசிய முன்னணியின் – கைப்பாவையாக நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழலாம்.

எனவே தான் நஜிப்பின் மேல்முறையீட்டு வழக்கு தொடங்குவதற்கு சில மாதங்கள் முன்னரே கூட்டரசு நீதிமன்றம் நஜிப்பின் வழக்கறிஞர்களுக்கும் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் கடிதம் எழுதி, எந்தக் காரணத்தைக் கொண்டும் வழக்கின் மேல்முறையீடு ஒத்திவைக்கப்படாது என உறுதிபட தெரிவித்திருந்தது.

அப்படி இருந்தும், நஜிப், டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லாவுக்குப் பதிலாக புதிய வழக்கறிஞர் நிறுவனத்தை நியமித்தார். ஷாபி அப்துல்லாவுக்குப் பதிலாக ஹிஷாம் தே போ தெய்க் என்பவரை தனது தலைமை வழக்கறிஞராக நியமித்தார்.

நஜிப் ஏன் வழக்கறிஞரை மாற்றினார்?

தனது பெரும்பாலான வழக்குகளுக்கு நஜிப், ஷாபி அப்துல்லாவையே தலைமை வழக்கறிஞராக நியமித்தார். அவரின் வழக்குகளின் தொடக்கக் கட்டத்தில் ஒரு முறை – ஷாபி அப்துல்லா ஒருவர் போதும் அவரது சட்ட அறிவின் மூலம் என்னைப் பாதுகாப்பார் – என நஜிப் கூறியிருந்தார்.

அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த நஜிப் இப்போது மட்டும் அவரை வழக்கறிஞராக மாற்றியது ஏன்?

பதில் என்னவாக இருந்தாலும், அதில் உள்நோக்கம் இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், அவ்வாறு மாற்றுவது நஜிப்பின்  தனிப்பட்ட உரிமை. அதையே தான் கூட்டரசு நீதிமன்றத் தலைமை நீதிபதி தெங்கு மைமுனும் சுட்டிக்காட்டியிருந்தார்.

புதிய வழக்கறிஞர் என்ன செய்திருக்க வேண்டும்?

Hisyam Teh Poh Teik
ஹிஷாம் தே போ தெய்க்

பொதுவாக  ஒரு வழக்கறிஞர் ஒரு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையைக் கையாள ஒப்புக்கொள்ளும்போது அந்த விசாரணைக்கான தேதிகள் தனக்கு உகந்ததாக இருக்கிறதா? அல்லது தனது வேலைப் பளு காரணமாக அந்த வழக்கை முறையாக கையாள முடியுமா? என்பது போன்ற அம்சங்களை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு தனக்கு சாத்தியப்படாது என்றால் உடனடியாக அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.  ஆனால், நஜிப்பின் வழக்கறிஞர் ஹிஷாம் தே கடந்த இரண்டு மாதங்களாக  நீதிமன்ற மேல்முறையீட்டுக்குத் தயாராவதற்குக் கால அவகாசம் இருந்தும், சில புதிய மனுக்களை சமர்ப்பித்தார்.

மேல்முறையீடை விசாரிப்பது உச்சநீதிமன்றம் என்பதால், அதற்கு அடுத்ததாக மேலும் மேல்முறையீடுகள் கிடையாது. எனவே,  தங்களின் புதிய மனுக்கள் விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டால் அதன் பின்னர், வழக்கறிஞர்கள் தங்களின் வழக்கைத் தொடரவேண்டும் என்பது பொதுவாகப் பின்பற்றப்படும் வழக்கம்.

நஜிப்பின் இரண்டு மனுக்கள்

தாங்கள் சமர்ப்பித்த புதிய ஆதாரங்களை வழக்கில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு மனுவை நஜிப் சமர்த்திருந்தார். நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துவிட்டது.

இதைத் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு வழக்கை ஒத்திவைக்க புதிய வழக்கறிஞர் ஹிஷாம் தே கோரிக்கை விடுத்தார். கூட்டரசு நீதிமன்றம் அதையும் மறுத்துவிட்டது.

இதையெல்லாம் காரணம் காட்டி தனக்கு நீதி கிடைக்கவில்லை என நஜிப் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் பொருத்தமான அறிக்கை

இந்த நேத்தில்தான் மலேசிய வழக்கறிஞர் மன்றம் பொருத்தமான நேரத்தில் சரியான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விவகாரத்தின் சில நியாயமான அம்சங்களை சுட்டிக்காட்டியிருக்கிறது.

வழக்கறிஞர்கள் என்பவர்கள் தனித்து இயங்குபவர்கள் அல்லர். மாறாக, அவர்கள் நீதிமன்றத்தின் அதிகாரிகள். நீதிமன்றம், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என்ற மூன்று தரப்புகளும் ஒருங்கிணைந்துதான் நீதிபரிபாலனத்தை உறுதி செய்ய முடியும் என்று வழக்கறிஞர் மன்றத்தின் அறிக்கையில் அதன் தலைவர் கேரன் யீ லின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எனவே, நஜிப்பும் அவரது வழக்கறிஞர்களும் மேல் முறையீட்டு விசாரணையின் இறுதிகட்டத்தில் வழக்கறிஞரையும் வழக்கறிஞர் நிறுவனங்களையும் மாற்றியதற்கு கண்டனங்களை மலேசிய வழக்கறிஞர் மன்றம் தெரிவித்திருக்கிறது.

புதிய வழக்கறிஞர் ஒருவர் ஒரு வழக்கில் ஆஜராகும்போது, அந்த வழக்கை நடத்த தனக்கு கால அவகாசமும் நீதிமன்றம் நிர்ணயித்த தேதிகளில் நீதிமன்றத்தில் வழக்காட – மற்ற வழக்குகளினால் இடையூறு இல்லை – என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால்  அந்த வழக்கை கையிலெடுக்கக்கூடாது. தவிர்த்து விடவேண்டும் எனவும் வழக்கறிஞர்களுக்கான சட்டவிதிகளை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் மன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

நஜிப் தனது வழக்கறிஞர்களை மாற்றுவதற்கு  முழு உரிமை உண்டு என்றாலும் அதையே காரணமாகக் காட்டி நீதிமன்றம் நிர்ணயித்த தேதிகளை மாற்ற முற்படுவது சரியல்ல.

அவ்வாறு புதிய வழக்கறிஞர்கள் வழக்குக்குள் வரும்போது, நீதிமன்றம் விசாரணை ஒத்திவைப்புகளுக்கானக் கோரிக்கைகளை நிராகரிக்கும் சாத்தியத்தையும் புதிய வழக்கறிஞர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

நஜிப்பின் நடவடிக்கைகள் நீதிமன்ற பரிபாலனத்திற்கு எதிரான தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் இந்த விவகாரத்தில்  வழக்கறிஞர் மன்றம் நீதித் துறையுடன் உறுதியாக ஒன்றுபட்டு நிற்கிறது என்றும் இதுபோன்ற  நெருக்கடிகளுக்கும் தகாத அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல்  நீதித் துறை உறுதியோடு நிற்க வேண்டும் என்றும்  வழக்கறிஞர் மன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அடுத்தது என்ன?

இன்று செவ்வாய்க்கிழமை ஆகஸ்டு 23-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் மீண்டும் மேல்முறையீட்டு விசாரணையைத் தொடர்கிறது.

அதற்குள்ளாக நஜிப்பின் வழக்கறிஞர் ஹிஷாம் தே தனது தரப்பு வாதத்தைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இன்று என்ன நடக்கப் போகிறது? ஹிஷாம் விடாப்பிடியாக மேல்முறையீட்டு  வாதங்களைச் சமர்ப்பிக்க மாட்டேன் எனக் கூறுவாரா?

அப்படி அவர் சமர்ப்பிக்க மறுத்தால் கூட்டரசு நீதிமன்றம் என்ன செய்யும்? அவருக்கு கால அவகாசம் வழங்கும் நோக்கில் வழக்கை ஒத்தி வைக்க இணங்குமா?

நஜிப் தரப்பு வழக்கறிஞரின் வாதங்கள் இல்லாமலேயே தீர்ப்பை வழங்க கூட்டரசு நீதிமன்றம் முற்படுமா?

நஜிப்பின் வழக்கறிஞர் ஹிஷாம் தே வாய்மொழி வாதத் தொகுப்பைச் சமர்ப்பிக்க முன்வராவிட்டால்…

ஏற்கனவே நஜிப்பின் முந்தைய வழக்கறிஞர்கள் சமர்ப்பித்திருக்கும் மேல்முறையீட்டு ஆவணங்களின் அடிப்படையில், அவற்றைப் பரிசீலித்து கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் என வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சுவாரசியமான நீதித்துறை திருப்பங்களுக்குக் காத்திருப்போம்!